

பிரான்ஸ் நாட்டின் நூற்றுக்கணக்கான சூப்பர் மார்க்கெட்டுகளை குறிவைத்து இணையம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உலக நாடுகளை உலுக்கி உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இயங்கி வரும் இன்டர்மார்சே (Intermarché), கேர்போர் (Carrefour), கோ ஆப்பரேட்டிவ் யூ (Coopérative U), மோனோப்ரிக்ஸ் (Monoprix) போன்ற முன்னணி சூப்பர் மார்க்கெட்டுகளுக்குள் பல கோடிகள் மதிப்பிலான இறைச்சி, மீன், பால் பொருட்கள், காய்கறிகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் என அனைத்தும் குளிரூட்டிகளில் பத்திரப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மர்ம ஹேக்கர்கள் எனப்படும் இணையதள பயங்கரவாதிகள் சூப்பர் மார்க்கெட்டுகளின் மைய கட்டுப்பாட்டு அமைப்பினைக் கைப்பற்றி நாச வேலையை தொடங்கியுள்ளனர், அந்த தாக்குதலில் குளிர்சாதனப் பெட்டிகள் அடுத்த சில மணி நேரங்களிலேயே 50 டிகிரி செல்சியஸ் முதல் 80 டிகிரி செல்சியஸ் வரை மாற்றப்பட்டு பயங்கரமாக சூடேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து உள்ளே வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலான இறைச்சிகள், கடல் உணவுகள் மற்றும் உணவுப் பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக கருகி எரிய ஆரம்பித்துள்ளது. சில சூப்பர் மார்க்கெட்டுகளில் இயந்திரங்கள் சூடாகி தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளது.
இதனையறியாமல் மறுநாள் கடைகளை திறந்த ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில், ஒரே நாளில் நாட்டின் பல பகுதிகளில் பல கோடி யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து பிரான்சின் தேசிய இணையப் பாதுகாப்பு முகமை நடத்திய விசாரணையில், நவீன பல்பொருள் அங்காடிகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள் அனைத்தும் ஒரு மைய டிஜிட்டல் கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைக்கப்பட்டு இணையம் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இந்த இணைய இணைப்பைத்தான் ஹேக்கர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாசவேலையில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் ஒரே நாளில் பல மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான உணவுப் பொருட்கள் மற்றும் வணிகப் பொருட்கள் சேதமடைந்ததாக இன்டர்மார்சே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
பிரான்சில் நடைபெற்றுள்ள சம்பவத்தை தொடர்ந்து பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் முன்னெச்சரிக்கையுடன் தங்கள் நாட்டு வணிக நிறுவனங்களின் டிஜிட்டல் பாதுகாப்பு முறைகளைத் தீவிரமாகச் சோதித்து வருகின்றன. ஹேக்கர்கள் பணத்தைத் தாண்டி மிக அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் உள்கட்டமைப்புகளையே குறிவைக்க தொடங்கியிருப்பது உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது.
பணத்திற்காக நடத்தப்படும் சைபர் குற்றங்கள் இப்போது மனித குலத்தின் அடிப்படைத் தேவையான உணவை குறிவைத்து தாக்குதல்களை தொடங்கியுள்ளன. இது சூப்பர் மார்க்கெட்டுகளை குறிவைத்து தாக்கப்பட்ட சம்பவமாகவே பார்க்க முடியாது. இதன் தொடர்ச்சியாக மின்சாரம், குடிநீர் போன்ற உள்கட்டமைப்புகளையே மொத்தமாக முடக்கி, ஒட்டுமொத்த தேசத்தையும் இருளில் தள்ள ஹேக்கர்கள் நடத்தும் அதிர்ச்சியூட்டும் ஒத்திகை என்பதாகவே இதனை உலக நாடுகள் சிந்திக்க துவங்கியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.