"பேருந்தில் பாட்டு கேட்டால் ₹37,000 அபராதமா?” - சிங்கப்பூரில் பயன்பாட்டிற்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!

இந்த புதிய விதிமுறைகள், சிங்கப்பூரின் ரயில் வலையமைப்பில் (எம்ஆர்டி) ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகளுடன் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது.
Singapore new bus rules
Singapore new bus rules
Published on: 
Updated on: 
2 min read

பொதுவாக நமது நாட்டில் உள்ள, பேருந்துகளில் நாம் பயணம் செய்யும்போது நமது விருப்பம்போல் பயணம் செய்து கொள்ளலாம். அதற்கென்று பெரிய விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை என்றுதான் கூறவேண்டும். சத்தமாக பாடல்கள் கேட்டார்களாம், சத்தமாக பேசலாம் பெரிதாக யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

ஆனால், இதே எண்ணத்தில் சிங்கப்பூரில் இதுபோல செய்யமுடியுமா? என்று நீங்கள் கேட்பீர்களானால், இந்த கட்டுரை உங்களுக்குத்தான்.

சிங்கப்பூர் பேருந்து இருக்கைகளின் மீது பயணிகள் கால்களை வைப்பது, சத்தமாக ஆடியோவை ஒலிக்கச் செய்வது, மேலும் பேருந்துக்குள் உணவினை உண்பது, குடிப்பது அல்லது குப்பைகளை கொட்டுவது போன்ற எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அந்த பயணி 500 சிங்கப்பூர் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 37,478 இந்திய ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது அல்லது ஆபத்தை விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது, பொது பேருந்து, பேருந்து மாற்று நிலையம் அல்லது முனையத்தின் ஏதேனும் ஒரு பகுதியை அசுத்தப்படுத்துவது மாதிரியான கடுமையான விதிமீறல்களுக்கு 5,000 சிங்கப்பூர் டாலர் வரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3,74,698 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது போன்ற விதிமுறைகளானது பேருந்தில் பயணம் செய்யும் அனைவருக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது, பிறரைக் கருத்தில் கொள்வது மட்டுமின்றி பொதுப் போக்குவரத்து சூழலை பயணிகளுக்கு இனிமையான ஒன்றாக மாற்ற உதவும், என்று சிங்கப்பூரின் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த புதிய விதிமுறைகள், சிங்கப்பூரின் ரயில் வலையமைப்பில் (எம்ஆர்டி) ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகளுடன் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது.

உதாரணமாக, எம்ஆர்டி ரயில்களில் உணவு உண்பவர்களுக்கு நீண்டகாலமாக அபராதம் விதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பேருந்துகளில் இதுபோன்ற விதிகள் பெரும்பாலும் போக்குவரத்து நிறுவனங்களின் உள்கட்டுப்பாடுகளாகவே இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவற்றை அமல்படுத்தும் பொறுப்பு ஓட்டுநர்களிடமே இருந்துள்ளது. மேலும், விதிகளை மீறும் பயணிகளை பேருந்திலிருந்து இறங்குமாறும் அவர்களால் தேவைப்படும் இடங்களில் கூற முடிந்துள்ளது. இப்போது, பிறருக்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு நேரடியாக அபராதம் விதிக்கக்கூடிய சட்டப்பூர்வ குற்றங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.

டிக்கெட் பரிசோதிப்பவர்கள் மற்றும் பேருந்து மாற்று நிலையப் பணியாளர்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பேருந்துப் பணியாளர்கள், குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் பயணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக சட்டவிதிமீறல் அறிவிப்புகளை வழங்க முடியும் என்று எல்டிஏ தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் "கேப்டன்கள்" என்று அழைக்கப்படும் பேருந்து ஓட்டுநர்களுக்கு பொதுவாக இதுபோன்ற அதிகாரம் வழங்கப்படாது. இதன் மூலம் அவர்கள் பேருந்தை பாதுகாப்பாக இயக்குவதற்கு முன்னுரிமை அளிக்க முடியும் என்று கூறுகின்றனர்.

இருப்பினும், சில மோசமான நடத்தையை உடனடியாக நிறுத்துமாறு பயணிகளிடம் ஓட்டுநர்கள் கூறலாம். அதற்கு இணங்க மறுப்பவர்கள் பேருந்திலிருந்து இறக்கியும் விடுபடலாம். ஒருவேளை நிலைமை கைமீறி போகும்போது காவல்துறையின் தலையீடும் கூட ஏற்படலாம்.

பொதுப் போக்குவரத்தை பயணிகளுக்கு நல்ல முறையில் அமைத்து கொடுப்பதில் சிங்கப்பூர் மட்டும் தனித்திருக்கவில்லை. போக்குவரத்து வலையமைப்புகள் விரிவடைந்து வரும் நிலையில், உலகம் முழுவதும் பல நகரங்களில் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான விதிமுறைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், போலந்தின் கிரகோவ் நகரமும் பேருந்தில் நடக்கும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களை குறைக்க விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. மேலும், பொதுப் போக்குவரத்தில் இடையூறு விளைவிக்கும் விதத்தில் நடக்கும் பயணிகளுக்கு 200 ஸ்லோட்டி வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதில் சத்தமாக இசை ஒலிக்கச் செய்வது, ஹெட்போன் இல்லாமல் காணொளிகளைப் பார்ப்பது அல்லது பேருந்துகளில் ஒலிபெருக்கி (Speaker) வசதியைப் பயன்படுத்தி உரத்த குரலில் பேசுவது போன்றவை அடங்கும்.

பிரிட்டனில் பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி "அதிக ஒலி ஏற்படுத்தும் சாதனங்களை" பயன்படுத்துவதை தற்போதைய சட்டங்கள் தடை செய்துள்ளன. இதற்காக அதிகபட்சமாக 1,000 பவுண்டு வரை அபராதம் விதிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சில அரசியல்வாதிகள், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்திலும் ஹெட்போன்களை தவிர்க்கும் பயணிகளுக்கு கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர், கிராகோவ் மற்றும் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த விதிகள், பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் நிம்மதியான போக்குவரத்தை உறுதி செய்வதோடு, அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய போக்குவரத்து அதிகாரிகள் அதிகமாக முனைப்பு காட்டுவதை காட்டுகிறது.

இந்த விவகாரத்தில், சிங்கப்பூர் போக்குவரத்து ஆணையம் கூறுவதைப்போல "பொதுப் போக்குவரத்து என்பது அனைவரும் பகிர்ந்து கொள்ளும் இடமாகும். மரியாதையான மற்றும் இனிமையான பயணச் சூழலை உருவாக்குவதில் ஒவ்வொரு பயணிக்கும் ஒரு பொறுப்பு உள்ளது" என்பது மறுக்கமுடியாத உண்மை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com