

தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வட கொரியாவிற்குள் அனுப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் குறித்து பியாங்யாங்கிடம் வருத்தம் தெரிவித்தார். இந்தச் செயல்களை அவர் "பொறுப்பற்றவை" என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜனவரியில் நடந்த 'ட்ரோன்' ஊடுருவலில் தங்களுக்கு அதிகாரப்பூர்வ பங்கு இல்லை என்று தென் கொரியா ஆரம்பத்தில் மறுத்ததுடன், அது பொதுமக்களின் செயல் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அரசு அதிகாரிகள் இதில் ஈடுபட்டிருந்ததை விசாரணை வெளிப்படுத்தியுள்ளது என்று லீ கூறியிருக்கிறார்.
மேலும் தென் கொரியா அதிபர், "இது எங்கள் அரசாங்கத்தின் நோக்கமாக இல்லாவிட்டாலும், ஒரு சில தனிநபர்களின் பொறுப்பற்ற மற்றும் கவனக்குறைவான செயல்களால் தேவையற்ற இராணுவப் பதற்றங்கள் ஏற்பட்டதற்காக வட கொரியாவிடம் எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அமைச்சரவைக் கூட்டத்தின் போது லீ கூறினார். தெற்கிலிருந்து எல்லையைக் கடக்கும் ஆளில்லா விமானங்கள் கண்டறியப்பட்டால், “கடுமையான பதிலடி” கொடுக்கப்படும் என்று வட கொரியா பிப்ரவரியில் எச்சரித்ததைத் தொடர்ந்து, தென் கொரியா இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தொடங்கியது. ஜனவரி மாத தொடக்கத்தில் “கண்காணிப்பு உபகரணங்களை” ஏற்றிச் சென்ற ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக வடகொரியா தெரிவித்த நிலையில் தற்போது அதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்தது தென் கொரியா.
அரசு ஊடகங்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், இறக்கைகள் கொண்ட ஒரு வானூர்தியின் சிதைவுகள் தரையில் சிதறிக் கிடப்பதும், அதனுடன் கேமராக்கள் அடங்கியதாகக் கூறப்படும் சாம்பல் மற்றும் நீல நிற பாகங்களும் காணப்பட்டன. "தேசிய புலனாய்வு சேவை அதிகாரி ஒருவரும், பணியில் இருக்கும் ராணுவ வீரர் ஒருவரும் இதில் சம்பந்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது," என லீ அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார். சில தனிநபர்களின் பொறுப்பற்ற மற்றும் கவனக்குறைவான செயல்களால் ஏற்பட்ட தேவையற்ற இராணுவப் பதற்றங்கள் குறித்து வட கொரியாவிடம் நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மார்ச் 25 அன்று, சியோல் மத்திய மாவட்ட அரசு வழக்கறிஞர் அலுவலகத்தால், எதிரி நாட்டிற்கு உதவியது மற்றும் விமானப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, ஓ என்ற பட்டதாரி மாணவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மார்ச் 31 அன்று, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில், ஓ என்பவர் ஆளில்லா விமானங்களை எல்லை தாண்டி அனுப்ப உதவியதாக அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தேசிய புலனாய்வு சேவை ஊழியர் ஒருவர் மற்றும் பணியில் இருக்கும் இரண்டு இராணுவ அதிகாரிகள் வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஓர் கூட்டு இராணுவ-காவல்துறைப் பணிக்குழு அறிவித்தது.
"தனிநபர்கள் வட கொரியாவைத் தனிப்பட்ட முறையில் சீண்டுவதை தென் கொரிய சட்டம் தடை செய்கிறது. வட கொரியாவிற்கு எதிராக ஒருவர் இத்தகைய தனிப்பட்ட சீண்டலை மேற்கொண்டது மிகவும் வருந்தத்தக்கது," என்று லீ கூறினார். இந்தச் சம்பவத்தின் காரணமாக, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றவர்களை விட அதிக கவலைக்கு ஆளாகியிருப்பார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் உடனடியாக அமைப்பை மேம்படுத்தி, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யக் கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த ஆண்டு பதவியேற்றதிலிருந்து, லீ வட கொரியாவுடனான உறவுகளைச் சீர்செய்ய முயன்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர் மீண்டும் மீண்டும் விடுத்த வேண்டுகோள்களுக்கு வடகொரியா இன்னும் பதிலளிக்கவில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.