AI தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்குத் தேவையான டேட்டா சென்டர்களை அமைப்பதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மின்சாரக் கட்டண உயர்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் இந்தத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்கா டேட்டா சென்டர்கள் அமைப்பதை நிறுத்தினால் அது மிகப்பெரிய வரலாற்றுத் தவறாக இருக்கும் என்று அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் AI தொழில்நுட்ப வளர்ச்சிக்காகப் பல நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றன. இந்தத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதற்கு அதிக கணினித் திறன் தேவைப்படுகிறது. இதற்காகவே ஆயிரக்கணக்கான கணினிகளை ஒரே இடத்தில் இணைத்து செயல்படுத்தும் டேட்டா சென்டர்கள் அமைக்கப்படுகின்றன. AI சேவைகள், தகவல் சேமிப்பு, இணையதளச் செயல்பாடுகள் எனப் பல தேவைகளுக்கு இவை முக்கியமானதாக உள்ளன. இந்த மையங்கள் அதிக அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், அருகில் வசிக்கும் மக்களின் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் பல பகுதிகளில் புதிய டேட்டா சென்டர்கள் அமைப்பதற்கு எதிராகப் போராட்டங்களும் எதிர்ப்புகளும் உருவாகியுள்ளன.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஆண்டி ஜாஸ்ஸி, அமெரிக்கா தற்போது டேட்டா சென்டர் கட்டுமானங்களை நிறுத்தினால், செயற்கை நுண்ணறிவுக்கான விதிமுறைகளைச் சீனா போன்ற நாடுகள் தீர்மானிக்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார். AI துறையில் அமெரிக்கா தனது முன்னிலையை இழக்கக் கூடாது என்றும், இப்போது பின்வாங்கினால் அதன் பாதிப்பை நீண்ட காலத்திற்கு உணர வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பொதுமக்களின் எதிர்ப்பையும் அவர் அலட்சியப்படுத்தவில்லை. டேட்டா சென்டர்கள் அமைக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளூர் மக்களுடன் நெருக்கமாகப் பேசி, அவர்களின் தேவைகளையும் கவலைகளையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனம் இந்த ஆண்டு AI மற்றும் அதற்குத் தேவையான கட்டமைப்புகளுக்காக சுமார் 220 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டில் இந்த முதலீடு மேலும் கணிசமாக அதிகரிக்கும் என்றும் ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார். அமெரிக்கா AI வளர்ச்சியில் சீனாவைவிடப் பின்தங்குவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், AI வளர்ச்சிக்கு முன்பே அமெரிக்காவின் மின்சாரக் கட்டமைப்பில் போதிய முதலீடுகள் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இந்த விவகாரத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் AI டேட்டா சென்டர்களை அமைத்தால் அதிக வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே தங்களது கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது. டேட்டா சென்டர்களால் பாதிப்பு ஏற்படும் என்று கருதும் உள்ளூர் மக்கள், நிறுவனங்களிடம் வரிச்சலுகைகள் மற்றும் குறைந்த மின்சாரக் கட்டணம் போன்ற பலன்களைக் கோரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களிலும் டேட்டா சென்டர் விவகாரம் முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது. உள்ளூர் அளவில் நடைபெற்ற 41 வாக்கெடுப்புகளில் பெரும்பாலான இடங்களில் மக்கள் டேட்டா சென்டர் திட்டங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஒரு கருத்துக்கணிப்பில் 56 சதவீத வாக்காளர்கள் AI மற்றும் டேட்டா சென்டர்கள் தங்களது வாக்கு முடிவில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 54 சதவீத அமெரிக்கர்கள் டேட்டா சென்டர்கள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதுவது தெரியவந்துள்ளது. தங்கள் பகுதியில் புதிய டேட்டா சென்டர் அமைக்கப்படுவதை 60 சதவீதம் பேர் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வில், டேட்டா சென்டர் அமைக்கப்பட்டால் மின்சாரக் கட்டணம் உயரும் என்று 59 சதவீத மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் நாடு முழுவதும் புதிய டேட்டா சென்டர் கட்டுமானங்களுக்கு தற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். டெக்சாஸ் மாநிலத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ள ஜினா ஹினோஜோசாவும், பொதுமக்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் இயற்றப்படும் வரை புதிய டேட்டா சென்டர்களுக்கான அனுமதிகளை நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் திட்டமிடப்பட்டுள்ள டேட்டா சென்டர் திறனில் 27 சதவீதம் டெக்சாஸ் மாநிலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் AI வளர்ச்சிக்காகப் பல கோடி டாலர்கள் முதலீடு செய்யப்படுகின்றன. மறுபுறம் அதனால் தங்களது வாழ்க்கைச் செலவும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, தொழில்நுட்ப வளர்ச்சியையும் பொதுமக்களின் நலனையும் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சவாலை அந்நாடு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதே தற்போது உலக நாடுகளின் கவனமாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.