உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவி ஒருவர் திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்குச் சென்றுவிட்டு அறைக்குத் திரும்பிய அவர், சிறிது நேரத்திற்குப் பிறகு நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு அவர் மீண்டும் அறைக்குத் திரும்பவில்லை. செல்போனும் அணைக்கப்பட்ட நிலையில் இருப்பதால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. ஐந்து நாட்களாக மகளிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்காததால், அவரது பெற்றோர் கண்ணீருடன் உதவி கோரியுள்ளனர். அமெரிக்கக் காவல்துறையினரும் மாணவியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், கனகல் மண்டலத்தில் உள்ள ஷப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோய்யா ஸ்ரீஜா ரெட்டி (23) என்பவரே மாயமான மாணவி. இவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயர்கல்வி பயில்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் பாஸ்டன் வளாகத்தில் முதுநிலைப் படிப்பைத் தொடர்ந்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படிப்புடன் பகுதி நேர வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த நவம்பர் 2ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றுவிட்டு தனது அறைக்குத் திரும்பிய ஸ்ரீஜா, பின்னர் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வதற்காக வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் அறைக்குத் திரும்பவில்லை. இதனால் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் கவலையடைந்து தேடத் தொடங்கினர். அவருடைய செல்போனைத் தொடர்புகொள்ள முயன்றபோதும் அது அணைக்கப்பட்டிருந்ததால் எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. இதையடுத்து உள்ளூர் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஸ்ரீஜாவின் தந்தை கோய்யா யாதகிரி ரெட்டி கூறுகையில், மகள் அமெரிக்கா சென்ற பிறகும் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்த ஸ்ரீஜா, சுமார் ஒரு மாதம் பெற்றோருடன் தங்கியிருந்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பியுள்ளார். சம்பவத்தன்று கல்லூரிக்குச் சென்றுவிட்டு அறைக்கு வந்த அவர், பின்னர் வெளியே நடக்கச் சென்றதாகவும், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு காணாமல் போனதாகவும் தந்தை தெரிவித்துள்ளார். அதன் பின்னர் செல்போனும் அணைக்கப்பட்டதால் குடும்பத்தினர் அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஸ்ரீஜாவின் கடைசி இருப்பிடத் தகவல் அவரது அறைக்கு அருகிலேயே பதிவாகியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடைசியாகக் கிடைத்த செல்போன் இருப்பிடத் தகவல் அறையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுக்குள் இருப்பதாகவும், அவர் அருகிலேயே இருக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக அவரது தந்தை கூறியுள்ளார். இருப்பினும், இந்தத் தகவலுக்குப் பிறகும் ஸ்ரீஜா வீடு திரும்பாதது பெற்றோரின் கவலையை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள டார்செஸ்டர் பகுதியில் ஸ்ரீஜா கடைசியாகக் காணப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 2ஆம் தேதி இரவு சுமார் 9.45 மணியளவில் எடிசன் கிரீன் பகுதியில் உள்ள தனது இருப்பிடத்திலிருந்து அவர் வெளியே சென்றுள்ளார். இதையடுத்து நவம்பர் 4ஆம் தேதி பாஸ்டன் காவல்துறை காணாமல் போனவர் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. கார்சன் கடற்கரை மற்றும் ஹார்பர் பாயிண்ட் பகுதிகளிலும் அவர் இருக்கக்கூடும் என்ற கோணத்தில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரத்தில் பொதுமக்களின் உதவியையும் அமெரிக்கக் காவல்துறை கோரியுள்ளது. ஸ்ரீஜா குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அவசர உதவி எண்ணான 911 அல்லது டார்செஸ்டர் மாவட்ட காவல்துறை பிரிவு C-11-ஐ 617-343-4335 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தெலங்கானா அமைச்சர் கோமட்டிரெட்டி வெங்கட் ரெட்டி, இந்தியத் தூதரகத்துடனும் வெளியுறவு அமைச்சகத்துடனும் தொடர்புகொண்டு மாணவியைத் தேடும் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயத் தொழிலை நம்பி வாழும் யாதகிரி ரெட்டி - ரூபா தம்பதியினருக்கு ஸ்ரீஜா ஒரே மகள் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டில் உயர்கல்வி பயின்று நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் மகளை அனுப்பிய பெற்றோர், தற்போது அவரது நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மாணவி பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே குடும்பத்தினரின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது. காவல்துறையின் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீஜா குறித்த தகவலுக்காக அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.