ஐரோப்பிய நாடுகளில் மக்களின் அதிருப்தி வீதிப் போராட்டங்களாக வெடித்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வீட்டு வாடகை உயர்வு, அரசின் கொள்கைகள், ஊழல் குற்றச்சாட்டுகள் எனப் பல்வேறு காரணங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். பிரான்ஸ், அல்பேனியா, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களில் சில இடங்களில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர்ப்புகை வீச்சு, கைது நடவடிக்கைகள், பாதுகாப்புப் படையினரின் குவிப்பு எனப் பல நகரங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்பதே இந்தப் போராட்டங்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
பிரான்சில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் நாடு முழுவதும் சுமார் 4.10 லட்சம் பேர் பங்கேற்றதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போராட்டத்தை ஏற்பாடு செய்த தொழிற்சங்கம் இந்த எண்ணிக்கை 8 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறியுள்ளது. தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் பேரணிகள் நடைபெற்றன. பெரும்பாலான பேரணிகள் அமைதியாக நடந்ததாகக் கூறப்பட்டாலும், சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டன. காவல்துறையினர் மீது பொருட்களும் பட்டாசுகளும் வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1,000 பேர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சில் ஏற்பட்டுள்ள அதிருப்திக்கு வாழ்க்கைச் செலவு உயர்வு மட்டுமல்லாமல், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கவலைகளும் காரணமாக உள்ளன. பள்ளிகளில் நிலவும் வசதிக் குறைபாடுகள், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளில் தொடங்கிய எதிர்ப்பு, பின்னர் விரிவடைந்து அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மீதான அதிருப்தியாக மாறியுள்ளது. இதற்கிடையே, போராட்டங்களைக் கையாளும் விதம் குறித்தும் அரசியல் தலைவர்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் வன்முறையைத் தடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றனர்; மற்றவர்கள் காவல்துறையின் நடவடிக்கைகள் அமைதியான போராட்டங்களையும் பாதிப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
அல்பேனியாவின் தலைநகர் திரானாவில் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடும்பத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடம்பர ஹோட்டல் திட்டத்துக்கு எதிரான எதிர்ப்பிலிருந்து இந்தப் போராட்டங்கள் தொடங்கின. பின்னர் அரசின் செயல்பாடுகள் குறித்த அதிருப்தியும் போராட்டங்களில் முக்கிய இடம்பிடித்தது. போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். சிலர் பாதுகாப்புப் படையினர் மீது பட்டாசுகளை வீசியதாகவும், அரசுக் கட்டடங்கள் தாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாலியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நகரங்களில் பேரணிகளில் பங்கேற்றனர். வீட்டு வாடகை, எரிபொருள் விலை, ஊதியம், கல்வி மற்றும் மருத்துவச் சேவைகள் தொடர்பான கவலைகள் போராட்டங்களின் முக்கியக் காரணங்களாக உள்ளன. முந்தைய போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. பல நகரங்களில் காவல்துறையினர் சோதனைகளை மேற்கொண்டதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் பலரைக் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றனர். பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தலைமையிலான அரசு, அமைதியான முறையில் போராடும் மக்களின் உரிமையைப் பாதுகாப்பதுடன் வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஸ்பெயினில் மக்களின் முக்கியப் பிரச்சினையாக வீட்டு வசதி உருவெடுத்துள்ளது. குறிப்பாகத் தலைநகர் மாட்ரிட்டில் வாடகை உயர்வு காரணமாகப் பலர் வீடு தேடுவதற்கே பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். 87 வயதான பெண் ஒருவர் வாடகை உயர்வைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் எதிர்ப்பைத் தூண்டியது. இதையடுத்து மாட்ரிட்டின் புகழ்பெற்ற புவேர்டா டெல் சோல் பகுதியில் போராட்டக்காரர்கள் கூடாரங்களை அமைத்து தங்கினர். அந்த முகாம் படிப்படியாகப் பெரிதாகி, உணவு வழங்கும் இடம், மருத்துவ உதவி வசதி மற்றும் கூட்டங்கள் நடத்தும் பகுதிகளைக் கொண்ட அமைப்பாக மாறியது. வீட்டு வாடகையைக் கட்டுப்படுத்தவும், வாடகைதாரர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீட்டு வசதி தொடர்பான சட்டத் திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்காத நிலையில், ஸ்பெயினில் அரசியல் அழுத்தமும் அதிகரித்துள்ளது.
போர்ச்சுகலிலும் வீட்டு வசதி நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாட்டில் வீடுகளின் விலை இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய வாடகை ஒப்பந்தங்களுக்கான வாடகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் குறிப்பாக இளைஞர்கள் சொந்தமாகவோ வாடகைக்கோ வீடு பெறுவதில் சிரமப்படுகின்றனர். லிஸ்பனில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்ற பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட கூடாரங்களை அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவல்துறையினர் அந்த முகாமைக் கலைத்து, பலரை கைது செய்தனர். வாடகைதாரர்களுக்கான பாதுகாப்பைக் குறைக்கும் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஐரோப்பாவின் இந்தப் போராட்டங்கள், பொருளாதார வளர்ச்சி மட்டுமே மக்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தாது என்பதை வெளிப்படுத்துகின்றன. வீடு, கல்வி, வேலைவாய்ப்பு, நியாயமான ஊதியம் போன்ற அடிப்படைத் தேவைகள் எட்டாக்கனியாகும்போது மக்களின் அதிருப்தி அரசியல் எதிர்ப்பாக மாறுகிறது. அதே நேரத்தில், வன்முறைச் சம்பவங்கள் அமைதியான போராட்டக்காரர்களின் கோரிக்கைகளையும் பின்னுக்குத் தள்ளும் அபாயம் உள்ளது. அரசுகள் பாதுகாப்பையும் பொதுமக்களின் போராடும் உரிமையையும் சமநிலையுடன் கையாள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்கு நடைமுறையில் தீர்வு கிடைக்கிறதா என்பதே இந்தப் போராட்டங்கள் எந்தத் திசையில் செல்லும் என்பதைத் தீர்மானிக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்