அமெரிக்கா செல்ல நினைப்போருக்குப் பேரதிர்ச்சி! குலுக்கல் முறை ரத்து - இனி இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை!

அதிக சம்பளம் வாங்கும் மூத்த அதிகாரிகளுக்கு விசா கிடைப்பது எளிதாகவும்...
அமெரிக்கா செல்ல நினைப்போருக்குப் பேரதிர்ச்சி! குலுக்கல் முறை ரத்து - இனி இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை!
Published on
Updated on
2 min read

அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் இந்திய ஐடி ஊழியர்கள் மற்றும் பட்டதாரிகளுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய அறிவிப்பை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த H-1B விசாவிற்கான 'ரேண்டம் லாட்டரி' (Random Lottery) எனப்படும் குலுக்கல் முறையை ரத்து செய்வதாகவும், அதற்குப் பதிலாக அதிக ஊதியம் பெறுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய முறையை அமல்படுத்தவுள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தத் திடீர் அறிவிப்பு, அமெரிக்கக் கனவில் இருக்கும் பல இளைஞர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை H-1B விசா விண்ணப்பங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தன. இதில் விண்ணப்பதாரரின் ஊதியமோ அல்லது அனுபவமோ ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஆனால், புதிய விதிகளின்படி, இந்த நடைமுறை முற்றிலுமாக மாற்றியமைக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில், அதிக திறமை மற்றும் அதிக ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கே விசா வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். அமெரிக்கத் தொழிலாளர்களின் நலனைக் காக்கவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) விளக்கமளித்துள்ளது.

புதிய நடைமுறையின்படி, விண்ணப்பதாரர்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுவார்கள். இதில் 'லெவல் 4' (Level IV) எனப்படும் அதிகபட்ச ஊதியம் மற்றும் உயர் பதவி வகிப்பவர்களுக்குத் தேர்வாக அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். உதாரணமாக, அதிக சம்பளம் பெறும் ஒருவரின் பெயர் குலுக்கல் பட்டியலில் நான்கு முறை இடம்பெறும். அதேசமயம், 'லெவல் 1' (Level I) எனப்படும் குறைந்தபட்ச ஊதியம் அல்லது தொடக்க நிலையில் உள்ளவர்களின் பெயர் ஒரே ஒரு முறை மட்டுமே இடம்பெறும். இதனால், அதிக சம்பளம் வாங்கும் மூத்த அதிகாரிகளுக்கு விசா கிடைப்பது எளிதாகவும், குறைந்த சம்பளத்தில் செல்லும் ஜூனியர் ஊழியர்களுக்கு வாய்ப்பு மிகக் குறைவாகவும் இருக்கும்.

இந்த மாற்றம் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், 2027-ம் நிதியாண்டிற்கான விசா பதிவுகளுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் 85,000 விசாக்களுக்கான ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், அவை யாருக்குச் சென்று சேரும் என்பதில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" (America First) என்ற டிரம்பின் கொள்கையின் அடிப்படையில், அமெரிக்க நிறுவனங்கள் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை ஊக்குவிக்கவும், வெளிநாட்டுத் திறமையாளர்களை அதிக சம்பளத்திற்கு மட்டுமே அமர்த்த வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கவும் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இந்திய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்றவற்றிற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்நிறுவனங்கள் பெரும்பாலும் தொடக்க நிலை (Entry-level) பொறியாளர்களையே அதிக அளவில் அமெரிக்காவிற்கு அனுப்பி வருகின்றன. புதிய விதிகளால், இனி இத்தகைய ஊழியர்களுக்கு விசா கிடைப்பது குதிரைக் கொம்பாக மாறும். அதேபோல், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு, அங்கு வேலை தேடும் இந்திய மாணவர்களுக்கும் இது பெரும் சவாலாக அமையும். தொடக்க நிலையில் அவர்கள் அதிக ஊதியம் கோர முடியாது என்பதால், விசா போட்டியில் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com