ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இதுவரை 30 பேர் தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் மூளையாக செயல்பட்ட தீவிரவாதியின் சைஃபுல்லா காலித்தின் பின்னணி வெளியாகியுள்ளது.
சைஃபுல்லா காலித்
பாகிஸ்தான் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. சைஃபுல்லா காலித், சைஃபுல்லா காசூரி என்ற புனைப்பெயரில் அறியப்படுபவர், லஷ்கர்-இ-தொய்பாவின் துணைத் தலைவராகவும், பாகிஸ்தானின் பெஷாவர் தலைமையகத்தின் முக்கிய தலைவராகவும் செயல்படுகிறார். இவர், ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய உதவியாளராகவும், இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் மூளையாகவும் செயல்படுகிறார்.
சைபுல்லா காலித், ஆடம்பர கார்களின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கங்கன்பூர் பகுதியில், பாகிஸ்தான் இராணுவத்தின் பெரிய படைப்பிரிவு அமைந்துள்ள இடத்தில், இவர் உயர்தர கார்களில் பயணிப்பதாகத் தகவல்கள் உள்ளன. இவரது கார் சேகரிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மாடல்கள் உள்ளன, இவை இவரது செல்வாக்கையும், பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவையும் பிரதிபலிக்கின்றன. மேலும், இவர் அதிநவீன ஆயுதங்களை சேகரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டவர். இந்த ஆயுதங்கள், இவரது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தேவையான திறனை வழங்குகின்றன.
இவர், பாகிஸ்தானில் இளைஞர்களை ஜிஹாதி உரைகள் மூலம் மூளைச்சலவை செய்வதில் பெயர் பெற்றவர். பஹல்காம் தாக்குதலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, கங்கன்பூரில் நடந்த ஒரு முகாமில், பாகிஸ்தான் இராணுவத்தின் கர்னல் ஜாஹித் ஜரின் கட்டாக் அழைப்பின் பேரில், இவர் இளைஞர்களுக்கு இந்தியாவுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் உரைகளை நிகழ்த்தினார். இந்த முகாமில், இவர் தேர்ந்தெடுத்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பாகிஸ்தான் இராணுவத்தின் உதவியுடன் எல்லை தாண்டி ஊடுருவ அனுப்பப்பட்டனர்.
2025 பிப்ரவரி 2 அன்று, கைபர் பக்தூன்க்வாவில் நடந்த ஒரு கூட்டத்தில், இவர், "2026 பிப்ரவரி 2-க்குள் காஷ்மீரை கைப்பற்றுவோம்" என்று ஆவேசமாகப் பேசியதாக உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டம், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இவரது பேச்சுகள், இளைஞர்களை தீவிரவாதத்திற்கு ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஹபீஸ் சயீத்
அதேபோல் மற்றொரு பயங்கரவாதியான ஹபீஸ் முஹம்மது சயீத், 1950-இல் பாகிஸ்தானின் சர்கோதாவில் பிறந்தவர், லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனராகவும், 2008 மும்பை தாக்குதல்களின் மூளையாகவும் கருதப்படுகிறார். இந்தத் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர், இதற்காக இவர் ஐக்கிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா, மற்றும் பல நாடுகளால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 2012-இல், அமெரிக்கா இவரது தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் வெகுமதி அறிவித்தது.
1980-களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் எதிர்ப்பு ஜிஹாத் இயக்கத்தில் பங்கேற்ற இவர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். 1987-இல், இவர் மார்க்கஸ்-உத்-தவா அமைப்பை நிறுவினார், இது பின்னர் லஷ்கர்-இ-தொய்பாவாக உருவானது. இவரது இஸ்லாமிய பிரசாரங்கள் மற்றும் மதரஸாக்கள் மூலம், இளைஞர்களை தீவிரவாதத்திற்கு ஈர்த்தார். லஷ்கர்-இ-தொய்பா, காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்கவும், இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் நடத்தவும் முதன்மை நோக்கம் கொண்டது. இந்த அமைப்பு, 2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு, 2016 உரி தாக்குதல், மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களில் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்