

துருக்கியில் (அங்காரா) நடைபெற்ற நேட்டோ மாநாட்டை முடித்துக்கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2026 ஜூலை 8-ஆம் தேதி அங்காராவில் உள்ள எசன்போகா (Esenboğa) சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
அப்போது, பத்திரிகையாளர்கள் மற்றும் கேமராக்கள் முன்னிலையில் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ எனப்படும் போயிங் 747 ரக விமானத்தில் ஏறிய டிரம்ப், பின்னர் கேட்டரிங் வாகனம் மூலம் ரகசியமாக வெளியேறி, சிறிய ரக ராணுவ விமானத்தில் அமெரிக்காவுக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகையால் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த 'விமான மாற்றம்' குறித்த தகவலை வாஷிங்டன் போஸ்ட் செய்தித் தளம் அம்பலப்படுத்தியுள்ளது.
டிரம்ப் பயணிக்கும் விமானத்தை ஏவுகணை மூலம் தாக்கி, அவரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுவதால், அவர் ரகசியமாக விமானம் மாறியதாகக் கருதப்படுகிறது.
இதனால், டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் செய்தியாளர்களை ஆபத்தில் விட்டுவிட்டுப் புறப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்குப் பதிலளித்துள்ள டிரம்ப், தான் சீக்ரெட் சர்வீஸ் மற்றும் ராணுவத்தின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டவன் எனக் கூறியுள்ளார்.
"அவர்கள் (சீக்ரெட் சர்வீஸ்) என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களோ, அதையே நான் பின்பற்றுகிறேன்... அவர்கள் என்னை வேறு விமானத்தில் செல்லச் சொன்னார்கள். அதிலும் சமமான பாதுகாப்புதான். ஆனால், நான் அதைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்... அதனால் அவர்கள் சொன்னதைச் செய்தேன்" என்றார்.
பின்னர், தனது முந்தைய கருத்துக்கு மாறாக, "நான் சென்ற விமானம்தான் அதிக ஆபத்தானது என நினைக்கிறேன். அவர்களுக்கு (ஈரான்) அந்த விமானத்தைக் குறிவைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன" என்றும் கூறினார்.
இது குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், இரண்டு அமெரிக்க அதிகாரிகள், "ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்துக்கு எதிராக தரையில் இருந்து வானில் ஏவும் ஏவுகணை (Surface-to-Air Missile) தொடர்பான ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருந்தது. மேலும், நேட்டோ உச்சி மாநாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் ஒருவர் தோளில் வைத்துச் சுடக்கூடிய ஏவுகணையுடன் காணப்பட்டனர்" என்று தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் தனக்கு இருக்கும் ஆபத்துகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "உங்களுக்குத் தெரியாத பல அச்சுறுத்தல்கள் எனக்கு உள்ளன. எந்தவொரு செல்வாக்குமிக்க ஜனாதிபதிக்கும் பல அச்சுறுத்தல்கள் இருக்கும் தானே. முக்கியத்துவம் குறைந்த ஜனாதிபதிகள் அச்சுறுத்தப்படுவதில்லை. ஒருவேளை நானே மிகவும் செல்வாக்குமிக்க ஜனாதிபதி என்று நினைக்கிறேன்." என அவரது பாணியில் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்குப் பிறகு ட்ரம்புக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. ட்ரம்ப் பயணிக்கும் விமானத்தில் உடன் பயணிக்கும் பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், வெள்ளை மாளிகை பணியாளர்கள் மற்றும் விமானப் பணியாளர்களை தாக்குதல் குறித்து எச்சரிக்காமல் ஆபத்தில் விட்டுவிட்டதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஹஃபிங்டன் போஸ்ட்டின் வெள்ளை மாளிகை நிருபரான ஷிரிஷ் டேட், எக்ஸ் தளத்தில், "டிரம்ப் ரகசிய சேவைப் பிரிவினர், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் தனது சொந்த ஊழியர்களைக் கைவிட்டுவிட்டு, மாற்று விமானத்தில் ரகசியமாக ஏறினார்" என்றும், "அது அதிபர் செய்யத் தயாராக இருந்த ஒரு தியாகம்" என்றும் கூறியுள்ளார்.
சிஎன்என் தொகுப்பாளர் ஜேக் டாப்பர், "மற்ற ஜனாதிபதிகள் அபாயகரமான இடங்களுக்குப் பயணிக்கும்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு தந்திரங்களும் ஏமாற்று வேலைகளும் கையாளப்படும்.
ஆனால், உடனடி அச்சுறுத்தல் ஏற்படும்போது, வெள்ளை மாளிகை ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் நிறைந்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை ஒரு திசைதிருப்பலாகப் பயன்படுத்துவது குறித்து நான் பேசிய எந்த அதிகாரியும் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை" என்று கூறியுள்ளார்.
ஈரான் தாக்குதலுக்கு அஞ்சி அமெரிக்க அதிபர் விமானம் மாறியதும், தங்களது சொந்த ஊழியர்களை பலி கொடுக்க துணிந்ததும் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்