அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டில் அதிருப்தி அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, குடியேற்றக் கட்டுப்பாடுகள், ஊடகச் சுதந்திரம் மற்றும் வெளிநாட்டுக் கொள்கை எனப் பல்வேறு விவகாரங்களில் டிரம்ப் எடுத்து வரும் முடிவுகள் விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன. இதனால் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல் தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ஆளும் குடியரசுக் கட்சியிடமிருந்து நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தத் தேர்தல் டிரம்பின் அரசியல் செல்வாக்கை மட்டுமின்றி, அமெரிக்காவின் எதிர்கால அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளையும் தீர்மானிக்கக்கூடிய முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அரசியலில் அதிபர் தேர்தலுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்தது இடைக்காலத் தேர்தல். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அதிபர் தேர்தலுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் பிரதிநிதிகள் சபையின் மொத்தமுள்ள 435 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறும். அதேபோல், செனட் சபையின் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி தனது பெரும்பான்மையை இழந்தால், அதிபர் கொண்டு வரும் புதிய சட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருக்க முடியும். எனவே, இந்தத் தேர்தல் டிரம்புக்கு அரசியல் ரீதியாகப் பெரும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தற்போதைய தேர்தல் கணிப்புகள் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் தேர்தல் கணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. குடியரசுக் கட்சிக்கு வலுவான ஆதரவு உள்ளதாகக் கருதப்படும் டெக்சாஸ் போன்ற மாநிலங்களில்கூட ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அதிகரிப்பது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஓஹியோ மாநிலத்தில் போட்டியிடும் விவேக் ராமசாமிக்கும் தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் என்ற கணிப்புகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், செனட் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெறுவது கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிரம்பை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிக்கு அதிகாரம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், அவரது அரசின் முக்கிய முடிவுகளைக் கட்டுப்படுத்தும் அரசியல் பலம் கிடைக்கலாம்.
இந்தத் தேர்தலில் மக்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் முக்கியப் பிரச்சினையாக பொருளாதாரம் உருவெடுத்துள்ளது. டிரம்ப் அரசு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வர்த்தக வரிகளை விதித்து வருகிறது. இதன் நோக்கம் அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாப்பதும், அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதும்தான் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இந்த வர்த்தக வரிகளின் சுமை இறுதியில் பொதுமக்களின் மீதே விழுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நியூயார்க் பெடரல் ரிசர்வ் வெளியிட்ட ஆய்வின்படி, 2025-2026 காலகட்டத்தில் டிரம்ப் அரசு விதித்த வர்த்தக வரிகள் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் 67 பிரிவுகளில் பணவீக்கத்தை 2.9 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் குடும்பங்களின் மாதாந்திரச் செலவுகள் அதிகரித்து, மக்களின் வாங்கும் திறனும் பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்திற்கு அடுத்தபடியாக அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளும் தேர்தலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அதிபரின் அதிகாரம் அதிகரிப்பது, அரசியல் எதிர்ப்பாளர்கள் மீதான விமர்சனங்கள், தேர்தல் முடிவுகள் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் ஊடக நிறுவனங்களுடனான மோதல்கள் ஆகியவை தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, வெள்ளை மாளிகையின் செயல்பாடுகளை விமர்சிக்கும் ஊடகங்களின் அணுகல் மற்றும் பத்திரிகைச் சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் கவனத்தைப் பெற்றுள்ளன. ஜனநாயக அமைப்புகளில் அதிகாரப் பகிர்வும், ஊடகங்களின் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், பொருளாதாரத்தைப் போலவே ஜனநாயகத்தின் பாதுகாப்பும் வாக்காளர்களின் முக்கியத் தேர்வாக மாறியுள்ளது.
குடியேற்றக் கொள்கையும் டிரம்ப் அரசுக்கு மற்றொரு சவாலாக உள்ளது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கும் வேலை செய்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது டிரம்பின் முக்கிய அரசியல் நிலைப்பாடுகளில் ஒன்றாகும். வெளிநாட்டுத் தொழிலாளர்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் வெளிநாட்டுத் திறமையாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்று நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. குறிப்பாக, இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்க நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். எச்-1பி விசா தொடர்பான கட்டுப்பாடுகள் அதிகரித்தால் இந்தியர்களுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்ற கவலை நிலவுகிறது.
இதற்கிடையில், இந்தியாவிலேயே சர்வதேச நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres) மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்நுட்பம், நிதி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 2026ஆம் ஆண்டின் தொழில்துறை அறிக்கைகளின்படி, இந்தியாவில் இத்தகைய மையங்களில் சுமார் 23.6 லட்சம் பேர் பணிபுரிவதாகவும், அவற்றின் வருவாய் 2025-26 நிதியாண்டில் 98.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவதற்குப் பதிலாக இந்தியாவிலேயே சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் அமெரிக்காவில் புதிய அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஏஐ மற்றும் கிளவுட் சேவைகளுக்காகப் பெரிய அளவிலான தரவு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றை இயக்குவதற்கு அதிக மின்சாரமும் தண்ணீரும் தேவைப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொதுமக்களின் சுகாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. தரவு மையங்கள் அமைப்பதற்கு ஆதரவளிக்கும் அரசியல் தலைவர்களை விரும்பவில்லை என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, அமெரிக்காவில் தரவு மையங்களின் விரிவாக்கம் காரணமாக நிலக்கரி, எரிவாயு மற்றும் டீசல் பயன்பாடு அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்