காதலித்த பெண்ணை சமைத்து தின்ற கொடூரன்...! 38 கொலைகள் செய்த சீரியல் கில்லர்.. சிக்கியது எப்படி?

"பெண்களிடம் காதலிப்பதாகக் கூறி அவர்களை நம்ப வைத்து, பின்னர் கொலை..."
Uganda serial killer
Published on: 
Updated on: 
2 min read

உகாண்டாவில் 15 ஆண்டுகளில் 38 பேரைக் கொன்று, அவர்களின் உடல்களை தின்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உகாண்டாவின் பாதுகாப்புப் படைகள், முஜுரிசி மோசஸ் என்ற நபரைக் கைது செய்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளின் தலைவர் தெரிவித்துள்ளார். 2010 முதல் 2025 வரை, மசாகா, இபண்டா மற்றும் காசோ ஆகிய மாவட்டங்களில் 38 பேரைக் கொலை செய்து, அவர்களின் உடல்களை சமைத்து தின்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 26-ம் தேதி, தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் இந்தக் கைது நடவடிக்கை குறித்து ஜெனரல் முஹூசி கைனருகபா பதிவிட்டார். அதில், கைது செய்யப்பட்ட நபரை உகாண்டா வரலாற்றில் மிக மோசமான சீரியல் கொலை குற்றவாளி மற்றும் நரமாமிசம் உண்டதாக குற்றம் சாட்டப்பட்டவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் பொதுவெளியில் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணையில் வெளிவந்த தகவலின் படி, சந்தேக நபர் வீடுகளுக்குள் புகுந்து, அங்கிருந்தவர்களை தாக்கிக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சில சம்பவங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, பெந்தெகோஸ்தே சபையைச் சேர்ந்த போதகர் ஸ்டீவன் முகாம்பேவின் வீட்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் கொடூரச் சம்பவமும் இந்த வழக்குடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது. அந்த வீட்டில் இருந்தவர்களைச் சந்தேக நபரின் கூட்டாளிகள் எனக் கூறப்படுபவர்கள் தாக்கிக் கொன்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், சில சம்பவங்களில் பெண்களிடம் காதலிப்பதாகக் கூறி அவர்களை நம்ப வைத்து, பின்னர் கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்தச் சம்பவங்கள் அனைத்துக்கும் ஒரே நபர் தான் காரணமா, அவருடன் தொடர்புடையதாக கூறப்படும் மற்ற நபர்களின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணையில் முழுமையான தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட மோசஸ் தொடர்பாக இதற்கு முன்பும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் காவலில் இருந்து தப்பியதாகவும் அல்லது சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளில் விடுவிக்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் இருந்து சில தடயப் பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் காணாமல் போனோர் வழக்குகள் மற்றும் கொலை வழக்குகளுடன் இந்தச் சம்பவங்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பதை விசாரணையாளர்கள் ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள உகாண்டா ராணுவத் தலைவர், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், கைது செய்யப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையின் மூலமே நிரூபிக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே தண்டனை குறித்து இறுதி முடிவுக்கு வர முடியாது.

38 பேரைக் கொன்று தின்றதாகக் கூறப்படும் இந்த வழக்கில், ஒவ்வொரு சம்பவத்திலும் என்ன நடந்தது, பாதிக்கப்பட்டவர்கள் யார், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் என்ன என்பன குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனவே, இந்த வழக்கின் விசாரணை முடிவுகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com