மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் அந்நாட்டின் துறைமுகங்களைச் சுற்றி அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகை பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து வெளியேறிய வணிகக் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் தடைகளை முறியடிப்போம் என்றும், ஹார்முஸ் நீரிணையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 'எம்.வி. பசிபிக் ஆர்ச்சர்' (M/V Pacific Archer) என்ற வணிகக் கப்பல் ஓமன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்தது. பலாவ் நாட்டின் கொடியுடன் பயணித்த அந்தக் கப்பல், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறிச் செல்ல முயன்றதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதையடுத்து அமெரிக்க ராணுவ விமானம் துல்லியமாகத் தாக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தி கப்பலின் பின்பகுதியைத் தாக்கியது. இதனால் கப்பலின் இயந்திர இயக்கம் முடக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. அதே நேரத்தில், கப்பலில் இருந்த பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கடல் வழி வர்த்தகத்தைத் தடுப்பதற்காக அமெரிக்கா இந்தக் கடற்படை முற்றுகையை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் ஈரானுக்கு கிடைக்கும் வருவாயைக் குறைத்து, அந்நாட்டின் மீது பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தத்தை அதிகரிப்பதே அமெரிக்காவின் நோக்கமாகக் கருதப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த முற்றுகை, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் மீண்டும் நடைமுறைக்கு வந்தது.
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ஆலோசகர் முகமது மொக்பர், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், அவற்றை முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படாது என்றும், அமெரிக்காவின் முற்றுகையை நீடிக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் கடற்படைத் தளபதி ஷாராம் இரானியும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முற்றுகையை மீறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், துறைமுகங்கள் வழக்கம்போல் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கப்பல் உரிமையாளர்கள் மற்றும் மாலுமிகளுக்கு ஈரான் துணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்காவின் முற்றுகையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்து ஈரான் விரிவான தகவல்களை வெளியிடவில்லை. இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் பெறுவது ஹார்முஸ் நீரிணை. உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெயின் கணிசமான பகுதி இந்தக் கடல் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. எனவே, இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் சர்வதேச எண்ணெய் விநியோகம், எரிபொருள் விலை மற்றும் உலக வர்த்தகத்தில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் முற்றுகையும் ஈரானின் பதிலடி எச்சரிக்கையும் தொடர்ந்து நீடித்தால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம். இதனால் எண்ணெய் இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்படக்கூடும். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படுமா அல்லது மோதல் மேலும் தீவிரமடையுமா என்பதே தற்போது சர்வதேச நாடுகளின் கவனமாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.