

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டு ஆண்டுகால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பாகப் பார்க்கப்படும் இடைக்காலத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வலுவான முன்னிலை பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் ஆதிக்கமும் இந்தத் தேர்தலில் கவனம் பெற்றுள்ளது. பலர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், முக்கிய வேட்பாளர்கள் சிலர் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுவதுதான் இடைக்காலத் தேர்தல். அதிபரின் நான்கு ஆண்டுகால பதவியில் இரண்டாம் ஆண்டில் நடைபெறும் இந்தத் தேர்தலில் அதிபர் பதவிக்கு வாக்குப்பதிவு கிடையாது. மாறாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தக் கட்சி பெரும்பான்மை பெறப்போகிறது என்பதுதான் தீர்மானிக்கப்படும்.
இந்தியாவில் மக்களவை, மாநிலங்களவை இருப்பதைப் போல அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை (House of Representatives), செனட் (Senate) என இரண்டு அவைகள் உள்ளன. இந்தத் தேர்தலில் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட்டின் 35 இடங்களுக்கும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட்டில் 53 இடங்களையும், பிரதிநிதிகள் சபையில் 218 இடங்களையும் குடியரசுக் கட்சி வைத்திருந்தது. அதிபர் டிரம்பும் அதே கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது முக்கியக் கொள்கைகளையும் சட்டங்களையும் நிறைவேற்றுவதில் அவருக்குப் பெரும்பான்மை ஆதரவு இருந்தது.
ஆனால், தற்போதைய இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், டிரம்ப் நிர்வாகத்துக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தின் ஏதாவது ஓர் அவையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றாலும், டிரம்ப் தனது மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில் புதிய சட்டங்களைக் கொண்டுவருவதிலும், கொள்கைகளைச் செயல்படுத்துவதிலும் எதிர்க்கட்சியின் கடுமையான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
அமெரிக்கத் தேர்தலில் சாதித்த இந்திய வம்சாவளியினர்!
இந்தத் தேர்தலில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரின் அரசியல் பிரதிநிதித்துவம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட பல இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரை பூர்விகமாக கொண்ட பியா தண்டியா புளோரிடாவின் 22வது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் புளோரிடாவில் இருந்து அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியினர் என்ற சாதனையைப் படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுஹாஸ் சுப்பிரமணியம் வெர்ஜீனியாவின் 10வது தொகுதியில் 61.5 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட ரோ கண்ணா கலிபோர்னியாவின் 17வது தொகுதியில் போட்டியிட்டு 72 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். இதே தொகுதியில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிதேஷ் டாண்டனைத் தோற்கடித்துள்ளார்.
பிரமிளா ஜெயபால் வாஷிங்டன் மாநிலத்தின் 7வது தொகுதியில் 87.5 சதவீத வாக்குகளைப் பெற்று ஆறாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
தோல்வியைச் சந்தித்த இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்!
வெற்றிகள் ஒருபுறம் இருந்தாலும், குடியரசுக் கட்சி மற்றும் சுயேச்சையாகப் போட்டியிட்ட சில முக்கிய இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
விவேக் ராமசாமி குடியரசுக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இவர், ஓஹியோ மாநில ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஆமி ஆக்டன் இவரைத் தோற்கடித்துள்ளார். ரிதேஷ் டாண்டன் கலிபோர்னியாவின் 17வது தொகுதியில் போட்டியிட்ட இவர், ஜனநாயகக் கட்சியின் ரோ கண்ணாவிடம் தோல்வியடைந்துள்ளார். சந்தீப் தீக்சித் ஓஹியோவின் 13வது நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
டிரம்பின் அடுத்த இரண்டு ஆண்டுகள் எப்படி இருக்கும்?
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் டிரம்பின் ஆட்சியில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சிக்கு இருந்த பெரும்பான்மை, டிரம்பின் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்குப் பெரும் உதவியாக இருந்தது. ஆனால், ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கைப்பற்றினால், டிரம்பின் முடிவுகளுக்கு எதிராகக் கடுமையான அரசியல் அழுத்தத்தை உருவாக்க முடியும். இதனால், அடுத்த இரண்டு ஆண்டுகள் டிரம்புக்கு அரசியல் ரீதியாகச் சவாலான காலமாக அமைய வாய்ப்புள்ளது. மொத்தத்தில், இந்த இடைக்காலத் தேர்தல் அமெரிக்க அரசியலில் டிரம்பின் செல்வாக்கை மட்டுமின்றி, இந்திய வம்சாவளியினரின் வளர்ந்து வரும் அரசியல் பங்களிப்பையும் வெளிப்படுத்தும் தேர்தலாக அமைந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.