இலங்கை கடற்பரப்பில் பயங்கரம்.. ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் - 87 பேர் பலி!

ஈரானின் கடற்படையை முழுமையாக அழிப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம்...
இலங்கை கடற்பரப்பில் பயங்கரம்.. ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் - 87 பேர் பலி!
Published on
Updated on
1 min read

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே போர் மூண்டுள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய தாக்குதல் அரங்கேறியுள்ளது. இலங்கை கடற்பரப்புக்கு அருகில் ஈரானின் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்தது. இந்தத் துயரமான சம்பவத்தில் சுமார் 87 ஈரானிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்குள்ளான ஈரானிய போர்க்கப்பலின் பெயர் 'ஐரிஸ் டெனா' (IRIS Dena) ஆகும். இந்த போர்க்கப்பல் சமீபத்தில் இந்தியாவில் நடந்த 'மிலன் 2026' (MILAN 2026) என்ற சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கேற்றுவிட்டு, மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதிய ஈரானிய கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒரு 'டார்பிடோ' (Torpedo) ஏவுகணை மூலம் தாக்கியது.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ளார். ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் பலத்தை நிரூபிக்கும் ஒரு சான்றாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரி நாட்டுக் கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூலம் மூழ்கடிப்பது இதுவே முதல்முறை என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்க ராணுவம் இந்தத் தாக்குதல் தொடர்பான அரிய வீடியோ காட்சியையும் வெளியிட்டுள்ளது.

இலங்கை கடற்படை அதிகாரிகள் இதுவரை 87 உடல்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் காணாமல் போன 61 வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இலங்கை மற்றும் இந்தியப் பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் கடற்படையை முழுமையாக அழிப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று அமெரிக்காவின் பென்டகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் ஈரானிய கப்பலால் சற்றும் எதிர்பார்க்க முடியாத வகையில் மிகத் துல்லியமாக நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய கப்பலைத் தொடர்ந்து கண்காணித்து வந்திருக்கலாம் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். போரின் தீவிரம் தற்போது ஆசிய கடல் பகுதிகளுக்கும் பரவியிருப்பது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com