

உங்கள் தலைக்கு மேலே, கண்ணுக்குத் தெரியாத தொலைவில் ஒரு ஆயுதம் எப்போது வேண்டுமானாலும் உங்கள் பகுதியைத் தாக்கத் தயாராக இருப்பதை அறிவீர்களா?
அமெரிக்காவின் சமீபத்திய அறிவிப்பு நம்மிடம் கூறுவது இதுதான்.
விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியிருப்பதை முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது அமெரிக்க விமானப்படை. எந்த இடத்தில், எந்த மாதிரியான ஆயுதங்கள் இருக்கின்றன என்ற தகவலை அமெரிக்கா கூறவில்லை.
அமெரிக்க விமானப்படைச் செயலாளர் ட்ராய் மீங்க், "எங்கிருந்து அச்சுறுத்தல்கள் வந்தாலும், அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருப்பதைத் தொடர்ந்து உறுதி செய்து வருகிறோம். இதனால்தான், எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து நமது கூட்டுப் படைகளைப் பாதுகாக்கும் திறன் கொண்ட 'விண்வெளிக் கட்டுப்பாட்டு ஆயுதங்களை' (Space Control Weapons) அமெரிக்கா இப்போது சுற்றுப்பாதையில் (Orbit) நிலைநிறுத்தியுள்ளது" என்று மேரிலாந்து மாநாட்டில் அறிவித்தார்.
எந்த ஒரு நாடும் விண்ணில் போர் ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறுவது இதுவே முதன்முறை. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றியுள்ளன.
"அமெரிக்கா தனது ராணுவத் திறன்களை விரிவாக்குவதையும், விண்வெளியில் போருக்குத் தயாராவதையும் நிறுத்த வேண்டும்" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "விண்வெளியை முழுமையாக இராணுவமற்றதாக்கும் பணியைத் தொடர, பரந்த சர்வதேச ஒருங்கிணைப்பை நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியிருந்தார்.
முன்னதாக, சீனாவும் ரஷ்யாவும் தங்கள் படைகளை கண்காணித்து தாக்கும் வகையில், தங்கள் செயற்கைக்கோள் திறன்களை வளர்த்து வருவதாக 2019-ஆம் ஆண்டு அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விண்ணில் ஆயுதங்கள் இருப்பதாக ஒப்புக்கொள்வது இதுவே முதன்முறை என்றாலும், ஏவுகணைகள் மூலம் செயற்கைக்கோள்களைத் தாக்குவது உள்ளிட்ட விண்வெளியில் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பங்களை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே பரிசோதித்துள்ளன.
தங்களது சொந்த, செயல்படாத நிலையில் உள்ள செயற்கைக்கோள்களை இந்த முறையில் தாக்கி சோதனை நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
விண்வெளியில் இருந்து தரையில் தாக்குதல் நடத்தவோ, எதிரி நாடுகளின் விண்வெளிச் சொத்துகளைச் சேதப்படுத்தவோ ஆயுதங்களை உருவாக்கும் தொழில்நுட்பமும் திறனும் புதியது அல்ல. இதில் அமெரிக்கா எந்த வகை ஆயுதத்தை நிலைநிறுத்தியிருக்கிறது என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. ஆனாலும், சர்வதேச விதிகள் காரணமாகவே எந்த நாடும் இத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை.
நவீன காலத்தில் போர்முறை பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது. போர்வீரர்களைவிட ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் அதிகமாக ஈடுபடுத்தப்படுகின்றன.
ராக்கெட் லான்ச்சர்களைவிட கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகளும், தடுப்பு அமைப்புகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இப்போது விண்ணில் இருக்கும் ஆயுதம் இயக்கவியல் சார்ந்ததாக, ஒரு இலக்கைத் தாக்கி அழிப்பதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அது எதிரி நாட்டு செயற்கைக்கோள்களின் தொடர்பைத் துண்டிப்பதாக, பூமியுடனான தகவல் பரிமாற்றத்தைத் தடுப்பதாக, சைபர் வலையமைப்பைத் தாக்குவதாக இருந்தாலே குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும்.
சில நாடுகள் இந்தத் திறன்களை ஏற்கெனவே வளர்த்திருக்கின்றன. ஆனால், அவை சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்படவில்லை.
2022 பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலுக்குச் சற்று முன்பு, உக்ரைனிய சந்தாதாரர்களுக்கும் அவர்களின் இராணுவ அமைப்புகளுக்கும் இணையச் சேவைகளை வழங்கப் பயன்படுத்தப்பட்டு வந்த வியாசாட் செயற்கைக்கோளின் தரை நிலையங்களை ரஷ்ய ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். உக்ரைனின் GPS தொடர்பைத் துண்டிக்க ரஷ்யாவால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அனைத்து நாடுகளும் விண்வெளியை அமைதியான தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும், ராணுவமயமாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினாலும், ஆயுதங்களை விண்வெளியில் நிறுவுவதையும், அத்தகைய யுத்திகளையும் எந்த சர்வதேச சட்டமும் வெளிப்படையாகத் தடை செய்யவில்லை.
இந்த விவகாரம் குறித்து பேசும் ஒரே சர்வதேச சட்டமான 1967-ஆம் ஆண்டின் வெளி விண்வெளி ஒப்பந்தம் (Outer Space Treaty), அணு ஆயுதங்கள் மற்றும் பிற பேரழிவு ஆயுதங்களை (Weapons of Mass Destruction) விண்வெளியில் வைப்பதை மட்டுமே தடை செய்கிறது.
வழக்கமான ஆயுதங்கள் மற்றும் தரையில் இருந்து விண்வெளியைத் தாக்கும் ஆயுதங்கள் குறித்து இதில் எந்தத் தெளிவும் இல்லை. ஏனென்றால், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது, அத்தனை சக்திவாய்ந்த ஏவுகணைகள் உருவாக்கப்படும் என யாரும் கற்பனை செய்யவில்லை.
சமீப காலமாக, இது தொடர்பான வரையறைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் நாடுகள் ஒத்துழைப்பு நல்க மறுத்து வருகின்றன.
2008-ஆம் ஆண்டில், சீனாவும் ரஷ்யாவும் இணைந்து, அணு ஆயுதங்கள் மற்றும் பிற பேரழிவு ஆயுதங்கள் மட்டுமல்லாமல், அனைத்து வகையான ஆயுதங்களையும் விண்வெளியில் நிலைநிறுத்துவதைத் தடைசெய்யும் "விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்துவதைத் தடுக்கும்" ஒப்பந்தம் என்ற யோசனையை முன்மொழிந்தன. இந்த யோசனை இப்போதுவரை செயல்வடிவம் பெறவில்லை. ஆனால், இதிலும் தரையில் இருந்து வானில் தாக்கும் ஏவுகணைகள் குறித்து தெளிவில்லாமல் இருக்கிறது.
ஐ.நா. ஆயுதக் குறைப்பு மாநாட்டில், "விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தடுத்தல்" என்பது குறித்து நடைபெற்று வரும் விவாதமும் வெறும் விவாதமாகவே இருக்கிறது. எந்தவொரு சர்வதேச சட்டத்திற்கோ அல்லது ஒப்பந்தத்திற்கோ வழிவகுக்கவில்லை.
இப்போது அமெரிக்கா வெளிப்படையாக ஆயுதங்களை நிலைநிறுத்தியிருப்பதை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இதுபோன்ற ஒப்பந்தங்கள் பயன் தருமா என்பது கேள்விக்குறியே. இனி விண்வெளி என்பது தகவல் தொழில்நுட்பத்துக்கு உதவும், அண்டத்தை ஆராயும் இடம் என்பதைக் கடந்து, போர்க்களமாகவும் மாறியிருக்கிறது.
விண்வெளி ஆயுதத் துறையில் இனி ஒவ்வொரு நாடும் போட்டி போட வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது.
ஏற்கெனவே எந்த ஏவுகணையும் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாதபடி, கோல்டன் டோம் என்ற ஏவுகணைத் தடுப்பு அமைப்பை உருவாக்கி வருவதாக அறிவித்திருந்தது ட்ரம்ப் அரசு. இதன் ஒரு பகுதியாக இந்த விண்வெளி ஆயுதம் செயல்படும் என்று கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்