
டொனால்டு டிரம்ப் அமொிக்க அதிபராக பதவியேற்ற பின் ஆதரவாளா்கள் மத்தியில் உரையாற்றினாா். அப்போது அமெரிக்காவின் பொற்காலம் தற்போது முதல் தொடங்கியுள்ளதாகவும், இதுவரையில்லாத வகையில், ஒரு வலிமையான அமெரிக்காவை கட்டமைப்பதாகவும் தொிவித்தாா்.
இந்த நாளில் இருந்து அமெரிக்கா செழித்து, வளரும் எனவும், உலக நாடுகள் முழுவதும் மதிக்கப்படும், அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.
இயற்கை பேரிடர்களை தடுப்பதில் பைடன் அரசு தோல்வியடைந்து விட்டதாக சாடிய டிரம்ப், எல்லை பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை பைடனால் தீர்க்க முடியவில்லை என விமா்சித்தாா். அமெரிக்காவில் பல உயிர்களை பலி வாங்கிய துப்பாக்கி கலாசாரத்திற்கு முடிவு கட்டப்படும் எனவும் கூறினாா்.
தொடா்ந்து பேசிய டிரம்ப், அமெரிக்காவின் தென் எல்லைகளில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தாா். சட்டவிரோத அகதிகளின் ஊடுருவல்கள் நிறுத்தப்படும் என குறிப்பிட்ட டிரம்ப், சட்டவிரோத வகையில் குடியேறிய அனைவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றாா்.
அமெரிக்காவில், ஆண், பெண் என்ற 2 பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் தொிவித்த அவா், உலக போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது. அமெரிக்க ராணுவம் வலிமை பெற்ற ஒன்றாக கட்டமைக்கப்படும் என்றாா்.
பனாமா கால்வாயை மீட்டெடுக்க போவதாக உறுதியளித்த டிரம்ப், அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம் எனவும் கூறினாா். மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ் பெறப்படும் எனவும், மக்கள் அவர்கள் விரும்பிய வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தொிவித்தாா்.
மேலும் சட்டத்திற்கு உட்படாத குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தொிவித்தாா்.