ஈரான் மீது போர்? 24 மணி நேரத்தில் 6,500 டன் வெடிமருந்துகளை இஸ்ரேலுக்கு அனுப்பிய அமெரிக்கா!

போர் தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளை அமெரிக்கா இஸ்ரேலுக்கு ரகசியமாக அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள்
america sent 6,500 tons to israel
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது மீண்டும் ஒரு பெரிய அளவிலான ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய ராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க சென்ட்காம் (CENTCOM) தளபதிகள் டிரம்ப்புக்கு சுமார் 45 நிமிடங்கள் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 6,500 டன் எடையுள்ள போர் தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளை அமெரிக்கா இஸ்ரேலுக்கு ரகசியமாக அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, அமெரிக்காவிலிருந்து இரண்டு பெரிய சரக்கு கப்பல்கள் மற்றும் பல விமானங்கள் மூலமாக இந்த ஆயுதங்கள் இஸ்ரேலை வந்தடைந்துள்ளன. இதில் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலுக்கு தேவையான வெடிபொருட்கள், ராணுவ டிரக்குகள் மற்றும் நவீன ரக ராணுவ வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும். ஈரான் உடனான போர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 1,15,600 டன் போர் தளவாடங்களை அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் பெற்றுள்ளது. 'ஆபரேஷன் ரோரிங் லயன்' என்ற திட்டத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் இந்த ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஈரான் மீது "குறுகிய மற்றும் சக்திவாய்ந்த" வான்வழித் தாக்குதல்களை நடத்தி, அந்நாட்டின் முக்கிய கட்டமைப்புகளைச் சிதைப்பதன் மூலம் ஈரானை பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் அந்நாட்டை வளைக்க குண்டுகளை மழையாகப் பொழிய அமெரிக்க படைகள் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது தவிர, வர்த்தகக் கப்பல்கள் தடையின்றி செல்ல ஹார்முஸ் ஜலசந்தியின் ஒரு பகுதியை அமெரிக்க ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுக்கவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இதற்காக தரைப்படை வீரர்களை நேரடியாகப் போரில் இறக்க டிரம்ப் யோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வுகளால் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டே, மறுபுறம் அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தத் துடிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கா மீது தங்களுக்கு இருந்த துளி அளவு நம்பிக்கையும் தற்போது முற்றிலுமாக அழிந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 60 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதல், அமெரிக்காவின் இந்த புதிய ஆயுதக் குவிப்பால் மீண்டும் ஒரு முழு அளவிலான போராக மாறக்கூடும் என்ற அச்சம் உலகெங்கும் எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com