

வெனிசுலாவின் நீண்டகால அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் புதிய இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பொறுப்பேற்றுள்ளார். ஒரு தீவிர சோசலிசக் குடும்பத்தில் பிறந்து, இப்போது உலக நாடுகளின் எண்ணெய் வணிகக் கனவுகளைத் தீர்மானிக்கும் மிக முக்கிய சக்தியாக இவர் உருவெடுத்துள்ளார். உலகளாவிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க நிர்வாகம் ஏன் இவரை ஒரு சாதகமான தலைவராகப் பார்க்கின்றன என்பது குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
டெல்சி ரோட்ரிக்ஸ் வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் ஒரு திறமையான தொழில்நுட்ப வல்லுநராகவும் அறியப்படுகிறார். மதுரோவின் அரசாங்கத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பின்னர் எண்ணெய் வளத் துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சர்வதேசத் தடைகள் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியைத் தடையின்றி நிர்வகித்த விதம், உலகளாவிய எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இதனால் தான், மதுரோவுக்குப் பிறகு வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை மீண்டும் சீரமைக்க இவரே சரியான நபர் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலாவின் இயற்கை வளங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகளைச் சீரமைக்க அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் அங்கு அனுப்பப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்தச் சூழலில், டெல்சி ரோட்ரிக்ஸ் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் நம்புகிறது. அவர் மதுரோவின் தீவிர விசுவாசியாக இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க நடைமுறைச் சாத்தியமான முடிவுகளை எடுப்பதில் வல்லவர் என்று கார்ப்பரேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையிலும் டெல்சி ரோட்ரிக்ஸின் வருகை ஒரு நற்செய்தியாகவே பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் இவர் பலமுறை இந்தியாவுக்கு வருகை தந்து, இந்தியத் தலைவர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக, இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதிலும், வெனிசுலாவில் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளைப் பாதுகாப்பதிலும் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். எனவே, இவரது தலைமையில் வெனிசுலா ஒரு புதிய பொருளாதாரப் பாதையை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், டெல்சி ரோட்ரிக்ஸுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். அமெரிக்காவின் நலன்களுக்குக் கட்டுப்பட்டு, எண்ணெய் வளங்களுக்கு முழுமையான அனுமதியை அவர் வழங்காவிட்டால், மதுரோவை விட மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். தற்போது சர்வதேச நாடுகளின் அழுத்தம் மற்றும் உள்நாட்டு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், வெனிசுலாவின் இந்த 'எண்ணெய் அரசியலை' டெல்சி ரோட்ரிக்ஸ் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே அந்நாட்டின் எதிர்காலம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.