

இந்தியாவில் உலகத் தலைவர்கள் கூடும் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் (வெளியுறவுத்துறை அமைச்சர்), ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), ஈரான், இந்தோனேசியா, எகிப்து, எத்தியோப்பியா, மலேசியா, கஜகஸ்தான், வியட்நாம், புருண்டி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள் / பிரதமர்கள் வருகை தந்துள்ளனர்.
கோலாகலமாக உலகமே திரும்பிப் பார்க்க மாநாடு நடைபெறும் சூழலில் இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தான், சூர்ய வம்சம் பட சின்ராசு போல ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கிறது.
நிலப்பரப்பு அளவிலும், மக்கள் தொகையிலும் பொருளாதாரத்திலும் கூட பிரிக்ஸில் பாகிஸ்தானை விட சிறிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் ரஷ்யா, சீனாவுடன் அரசியல் தொடர்புகளையும் கொண்டுள்ளது பாகிஸ்தான். ஆனால்உம் பிரிக்ஸில் இடம்பெறாதது ஏன்?
பிரிக்ஸ் அமைப்பில் கடந்த 2 ஆண்டுகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 6 நாடுகளுடன் இணைந்து 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதுதவிர, உறுப்பினராக விருப்பம் தெரிவித்து கூட்டாளி நாடுகளாக 10 நாடுகள் உள்ளன. மேலும், 29 நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. அதில் பாகிஸ்தானும் ஒன்று.
பாகிஸ்தான் இந்தக் கூட்டமைப்பில் இணைய விரும்புவதற்கு பொருளாதாரமே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 3.7 விழுக்காடாக உள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, அமெரிக்க மையமான உலக வர்த்தக அமைப்பை மாற்றுவது. டாலருக்கு மாற்றான புதிய நாணயத்தை உருவாக்குவது பற்றி பிரிக்ஸ் நீண்டகாலமாக ஆராய்ந்து வருகிறது. அமெரிக்கா இதனைக் கடுமையாக எதிர்க்கிறது.
அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றையே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாகிஸ்தான் நம்பியிருக்கிறது.
பிரிக்ஸ் நாடுகள் இதற்கு மாற்றான புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank - NDB) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இது அவசரக் கடன்களுக்காக அல்லாமல், வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி வழங்கும் அமைப்பாகும்.
பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிப்பதற்காக பாகிஸ்தான் NDB-யில் 580 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இது அந்த வங்கியின் மதிப்பில் 1.1% ஆகும்.
பிரிக்ஸில் இணைவதன் மூலம் அதன் உறுப்பு நாடுகளுடனான வர்த்தகத்தை எளிமையாக்க முடியும். பிரிக்ஸ் நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 48.8% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விரிவுபடுத்தப்பட்ட இந்தக் கூட்டமைப்பு, இப்போது உலக மக்கள் தொகையில் சுமார் 49 சதவீதத்தையும், வாங்கும் திறன் சமநிலை (Purchasing Power Parity) அடிப்படையில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
வளரும் நாடுகளின் சக்திவாய்ந்த குழுவாகக் கருதப்படும் பிரிக்ஸில் இணைய, கடந்த 2023-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்தது பாகிஸ்தான். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் பாகிஸ்தான் இணைவதை வரவேற்றன. ஆனாலும், பாகிஸ்தானால் இணைய முடியாமல் போனதற்கு ஒரு காரணம் உள்ளது.
பிரிக்ஸ் அமைப்பில் ஒரு புதிய நாட்டை இணைக்க, அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதலும் வேண்டும். ஆனால், அமைப்பில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தானின் இணைப்பைக் கடுமையாக எதிர்த்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.