

ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (செப். 20) முடிவடைந்தது. ஆரம்பகட்ட முடிவுகளின்படி, புதினின் ஐக்கிய ரஷ்யா (United Russia) கட்சி சுமார் 58% வாக்குகளைப் பெற்றுள்ளது.
450 இடங்களைக் கொண்ட ஸ்டேட் டுமாவில், 225 இடங்கள் கட்சி பட்டியல் அடிப்படையிலும், மீதமுள்ள 225 இடங்கள் தனித்தொகுதிகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஆரம்ப முடிவுகளில் United Russia கட்சி இரு பிரிவுகளிலும் முன்னிலை வகிக்கிறது.
ஆரம்ப முடிவுகளின்படி, கம்யூனிஸ்ட் கட்சி, லிபரல் ஜனநாயகக் கட்சி, ஜஸ்ட் ரஷ்யா கட்சி மற்றும் புதிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் ஸ்டேட் டுமாவில் இடங்களைப் பெறும் நிலையில் உள்ளன.
இந்தத் தேர்தல் வெற்றியை யாரும் கொண்டாடுவதில்லை. உலக வல்லரசுகளில் ஒன்றாகக் கருதப்படும் ரஷ்யாவின் தேர்தல், உலக அரசியலில் எதிர்பார்க்கப்படுவதுமில்லை. ஏனென்றால், புதினின் கட்சிதான் வெற்றி பெறப் போகிறது என்பதை யாவரும் அறிவர். எனில், இந்தத் தேர்தல் எதற்காக நடத்தப்படுகிறது?
புதின் கடந்த 1999-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கிறார். அவரே முடிவு செய்து விலகும் வரை அவர்தான் ஆட்சியில் இருக்கப் போகிறார். அவர் விரும்பும் நபர்தான் பிரதமராகச் செயல்படப் போகிறார். ஆனாலும், அவ்வப்போது தேர்தல்களை நடத்தி, அதில் வெற்றி பெற்றதாகவும் அறிவித்துக் கொள்கிறார்.
இப்போது முடிந்திருக்கும் தேர்தலைப் பொறுத்தவரை 2022 ம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கியதற்கு பிறகு நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தல் இதுவாகும். இதில் போருக்கு எதிராக பேசி வந்த எதிர்க்கட்சியான லிபரல் யப்லோகோ கட்சி (The liberal Yabloko party) போட்டியிடவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த கட்சியை வாக்கு சீட்டில் (Ballot) இருந்து நீக்கி உத்தரவிட்டது அந்த நாட்டு உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடும் ஆகஸ்ட் 17-ம் தேதி நிராகரிக்கப்பட்டது.
இந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போருக்கு எதிராக பேசியவர்கள் கடுமையான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். புதினுக்கு எதிராக தீவிரமாக பேசுபவர்கள் வெளிநாட்டு கைகூலிகள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
இப்படியாக நேரடியாக எதிர்க்கும் கட்சிகளை ஆட்டத்தில் இருந்து நீக்கிவிட்டு, போருக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளை மட்டும் வைத்து தேர்தலை நடத்தியுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களால் ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா போன்ற உலக அமைப்புகள் இந்த தேர்தலை அங்கீகரிப்பதில்லை. புதினையும் மக்களால் தேர்ந்தெடுத்த தலைவராக நினைப்பது கிடையாது. ஜனநாயகக் கண்காணிப்பு அமைப்புகள் ரஷ்யாவின் தேர்தல்கள் சுதந்திரமானவை அல்ல, நியாயமானவையும் அல்ல என்று கண்டனம் தெரிவித்துள்ளன.
1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் கலைந்தபோது, மைக்கேல் கோர்பச்சேவ் சோவியத் ஒன்றிய அதிபர் பதவியில் இருந்து விலகினார். அப்போது ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபியில் பணியாற்றிய புதின், பின்னர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர நிர்வாகத்தில் பணியாற்றினார். தொடர்ந்து ரஷ்ய அரசியலில் உயர்ந்து, போரிஸ் யெல்ட்சின் ஆட்சியில் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி யெல்ட்சின் பதவி விலகியதைத் தொடர்ந்து புதின் இடைக்கால அதிபரானார். 2000-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார். அதிக பின்னர் Unity மற்றும் Fatherland–All Russia ஆகிய அரசியல் அமைப்புகள் இணைந்து யுனைடெட் ரஷ்யா கட்சி உருவானது.
2000 முதல் 2008 வரை இரண்டு தொடர்ச்சியான பதவிக்காலங்களில் அதிபராக இருந்தார். அப்போது ரஷ்ய அரசியலமைப்பு, ஒருவர் இரண்டு தொடர்ச்சியான அதிபர் பதவிக்காலங்களுக்கு மேல் பதவியில் இருப்பதை அனுமதிக்கவில்லை. இதனால் 2008 முதல் 2012 வரை டிமிட்ரி மெத்வதேவ் அதிபராக இருந்தபோது, புதின் பிரதமராகப் பதவி வகித்தார். என்னதான் மெத்வதேவ் அதிபராக இருந்தாலும் கட்சியில் செல்வாக்கு மிக்கவராக இருந்த புதினின் உத்தரவுகள் தான் நிறைவேற்றப்பட்டன.
2012-ம் ஆண்டு மீண்டும் அதிபரான புதின், 2018-ம் ஆண்டிலும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒருவர் இரண்டு தொடர்ச்சியான அதிபர் பதவிக்காலங்களுமேல் பதவியில் இருப்பதை அரசியலமைப்பு அனுமதிக்காததால் அதையே மாற்றிவிட்டார். 2020-ம் ஆண்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு உருவானது. 2024-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, அதே ஆண்டு மே மாதம் ஐந்தாவது பதவிக்காலத்தைத் தொடங்கினார்.
இப்படியாக இன்றுவரை பதவியில் தொடர்கிறார் புதின். எந்த தேர்தலிலும் அவரோ அவரது கட்சியோ தோல்வியுற்றது இல்லை.
இதற்காக முன்பெல்லாம் வாக்கு சீட்டுகளில் அதிகாரிகளே மோசடிகள் செய்து வந்ததாகவும், இப்போது ரஷ்யாவில் ஆன்லைனில் வாக்களிக்கும் அமைப்பு இருப்பதனால் அதில் எளிதாக மோசடி செய்துவிடுவதாகவும் சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இதுதவிர மின்னணு வாக்குப் பதிவு எண்ணப்படும் முறையும் சந்தேகத்துக்கு உரியதாக கருதப்படுகிறது.
இதைத்தாண்டி அதிகாரிகள் வீடுகளில் முதியோர்/மாற்றுத்திறனாளிகள் வாக்குகள் பெறப்படுவதிலும் சந்தேகம் எழுப்பியிருக்கின்றனர். அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க அஞ்சுவதாக 'கோலோஸ்' போன்ற தேர்தல் கண்காணிப்பு அமைபுகள் தெரிவிக்கின்றன.
இப்போது கிரிமியா, Luhansk, Donetsk, Kherson மற்றும் Zaporizhzia உள்ளிட்ட சட்ட விரோதமாக உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள பகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றுள்ளது. இங்கெல்லாம் ஆயுதம் ஏந்திய வீரர்கள் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தனர் என்றால் எவ்வளவு நேர்மையாக நடத்தப்பட்டிருக்கும் என கற்பனை செய்துகொள்ளலாம்.
தேர்தலை வெல்ல பல வழிமுறைகளை புதினின் கட்சி பயன்படுத்தினாலும் உண்மையில் தேர்தல் நியாயமாக நடக்கிறதா என்பதை மேற்பார்வை செய்ய கண்காணிப்பு அமைப்புகள் இல்லை என்பதுதான் பெரும் கவலை.
ரஷ்யாவின் ஒரே சுதந்திரமான தேர்தல் கண்காணிப்பு அமைப்பாக இருந்த கோலோஸ், அதன் தலைவர் ஒரு "விரும்பத்தகாத அமைப்புடன்" பணியாற்றியதாகக் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்க அழுத்தத்தின் காரணமாக 2025-ல் மூடப்பட்டது.
ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் (OSCE) சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் ரஷ்ய தேர்தலை மேற்பார்வை செய்ய முன்வந்தாலும் அந்த யோசனையை மறுத்துவிட்டார் புதின். மனித உரிமைகள் அலுவலகமான ODIHR-ஐயும் ரஷ்யா அழைக்கவில்லை.
யாருக்கும் பொறுப்புக்கூற அவசியம் இல்லாமல் ரஷ்ய அதிகாரிகள் உற்சாகமகா ஊருக்கு ஊர் வாக்கு மையங்களை அமைத்து இறுதியில் புதின் அல்லது அவரது ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாக கூறுவதற்கு ஏன் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ரஷ்ய மக்களுக்கு அந்த கேள்வி எழாமல் இருக்குமா?
இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் உக்ரைன் போருக்கு ரஷ்ய மக்களின் ஆதரவு இருப்பதாக நிரூபிக்க புதினின் கட்சி வெற்றி பெற வேண்டியது அவசியம். தேர்தலிக்கு முன்பு நாட்டு மக்களிடம் பேசிய புதின், "உங்கள் வாக்கு, கோடிக்கணக்கான மக்கள் நமது போராளிகளுக்குப் பின்னால் நிற்கிறார்கள் என்பதை வெளிக்காட்டும்." எனப் பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்