வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட ஒரு விஷயத்தைச் செய்ய முடியாமல் போகலாம். குடும்பச் சூழல், மற்றவர்களின் விருப்பம், வாழ்க்கைத் துணையின் முடிவு எனப் பல காரணங்களால் நம்முடைய ஆசைகளை ஒதுக்கி வைக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கம் கிடைக்கும்போது அந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் நிரூபித்துள்ளார். 10 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த பிறகு, நீண்ட நாட்களாகத் தனது மனதில் இருந்த ஆசையை நிறைவேற்றியுள்ளார். அதுவும் ஒரு நாயையோ, பூனையையோ செல்லப்பிராணியாக வளர்க்காமல், ஒரு பன்றியைத் தனது வீட்டிலேயே வளர்த்து வருகிறார். இந்த வித்தியாசமான வாழ்க்கை முறை தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான கேலா தாம்சன். இவருக்குச் சிறு வயது முதலே விலங்குகள் மீது அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது. பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களை மீட்டு அவற்றைப் பராமரிப்பதிலும், காயமடைந்த விலங்குகளை மீண்டும் ஆரோக்கியமாக மாற்றுவதிலும் ஆர்வம் கொண்டவர். ஆனால், திருமண வாழ்க்கையில் இருந்தபோது வீட்டில் ஒரு செல்லப் பன்றியை வளர்க்க வேண்டும் என்ற அவரது ஆசைக்கு அனுமதி கிடைக்கவில்லை.
கேலா தாம்சனின் முன்னாள் கணவர், வீட்டில் பன்றியை வளர்க்க முடியாது என்று தொடர்ந்து கூறி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் நீண்ட நாட்களாகத் தனது மனதில் இருந்த ஆசையை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், 10 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விவாகரத்து கிடைத்த பிறகு, தனது வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்க முடிவு செய்தார். அப்போது முதலில் நிறைவேற்ற நினைத்தது செல்லப் பன்றியை வளர்க்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவைத்தான்.
இதையடுத்து கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம், எட்டு வாரங்களே ஆன ஒரு குட்டிப் பன்றியை வீட்டிற்கு அழைத்து வந்தார். டெய்சி என்று பெயரிட்ட அந்தக் குட்டிப் பன்றி வாங்கியபோது வெறும் 9 பவுண்டு எடை மட்டுமே இருந்தது. ஆரம்பத்தில் மிகவும் சிறியதாக இருந்த டெய்சி, தற்போது வளர்ந்து சுமார் 50 பவுண்டு எடை கொண்ட செல்லப்பிராணியாக மாறியுள்ளது. கேலா தாம்சனின் வீட்டிலேயே டெய்சி வசித்து வருகிறது.
பன்றியை வீட்டுக்குள் வளர்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதையும் கேலா விரைவிலேயே புரிந்துகொண்டார். குறிப்பாக டெய்சி வளர வளர வீட்டில் சில குறும்புகளைச் செய்யத் தொடங்கியது. சமையலறையில் உள்ள அலமாரிகளைத் திறந்து அதற்குள் இருக்கும் பொருட்களை வெளியே எடுக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொண்டது. பன்றிகளுக்கு இயற்கையாகவே மண்ணைக் கிளறி உணவைத் தேடும் பழக்கம் இருப்பதால், வீட்டிலுள்ள பொருட்களையும் தரைவிரிப்புகளையும் பாதுகாக்க அவர் கூடுதல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது. வீட்டில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும்படி செய்யப்படும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைப் போல, டெய்சிக்காகவும் வீட்டை மாற்றியமைத்துள்ளார்.
டெய்சியின் குறும்புகள் ஒருபுறம் இருந்தாலும், அது கேலாவின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மக்கள் நாய்கள் மற்றும் பூனைகளைத்தான் செல்லப்பிராணிகளாக வளர்ப்பார்கள். ஆனால், டெய்சியை அவர் வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். கடைகளுக்குச் செல்லும்போதுகூட டெய்சியை கயிற்றில் கட்டி அழைத்துச் செல்வது வழக்கம். இதனால் அந்தப் பகுதியில் டெய்சி ஒரு குட்டி பிரபலமாகவே மாறிவிட்டது. செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றாலும் அங்குள்ள ஊழியர்கள் டெய்சியைப் பார்த்து மகிழ்ச்சியடைவதாக கேலா கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, பிரபலமான சோனிக் என்ற துரித உணவகத்திற்கும் டெய்சி அடிக்கடி செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். சிறுவயதில் பார்த்த 'சார்லோட்ஸ் வெப்' திரைப்படத்தில் வரும் சிறுமியைப் போலவே தானும் விலங்குகளுடன் வாழ விரும்புவதாக கேலா நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது டெய்சியுடன் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழித்து வரும் கேலா, இதோடு தனது கனவை நிறுத்திக்கொள்ளவில்லை. மேலும் ஒரு பன்றியையும் வளர்க்கத் தொடங்கியுள்ளதுடன், எதிர்காலத்தில் சிறிய அளவிலான பண்ணை ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளார். பல்வேறு விலங்குகளைப் பராமரித்து அவற்றுடன் வாழ வேண்டும் என்பதே அவரது அடுத்தகட்ட ஆசையாக உள்ளது.
தனது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றியிருப்பது குறித்து மகிழ்ச்சியுடன் பேசும் கேலா, இதுதான் தனது கனவு வாழ்க்கை என்றும், இப்போது அந்தக் கனவை வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த பிறகு மனம் தளர்ந்து போகாமல், தனக்குப் பிடித்தமான விஷயத்தைத் தேர்ந்தெடுத்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ள கேலாவின் கதை பலருக்கும் வித்தியாசமான அனுபவமாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நிறைவேறாத ஆசைகள் இருந்தாலும், அதற்காக வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியதில்லை என்பதை அவரது அனுபவம் நினைவூட்டுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.