இந்தியாவில் இனி கிரிப்டோகரன்சி செல்லாது? முதலீட்டாளர்கள் அதிர்ச்சி...

இந்தியாவில் இனி கிரிப்டோகரன்சி செல்லாது? முதலீட்டாளர்கள் அதிர்ச்சி...

கிரிப்டோகரன்சி என்பது பொதுவாக மின்னணு முறையில் மட்டுமே இருக்கும் ஒரு வகை டிஜிட்டல் நாணயமாகும். இது நோட்டு அல்லது நாணயம் போல கையில் தொடும் வடிவத்தில் இருக்காது இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வலைத்தளங்களில் வழங்கப்படும் சேவைகளை பெறுவதற்காக வங்கி போன்ற இடைத்தரகரைப் பயன்படுத்தாமல், கைபேசி அல்லது கணினி மூலம் ஆன்லைனில் எவருடனும் பரிமாறிக் கொள்ள பயன் படுத்தப்படுகிறது . பலர் வழக்கமான வங்கிகள் வசூலிக்கும் பரிவர்த்தனை கட்டணங்களைத் தவிர்க்கவும், அல்லது தன் அடையாளம் வெளிப்படாமல் பரிவர்த்தனைகளை நடத்தவும்  இந்த கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் கிரிப்டோகரன்சியின் மதிப்பு உயர்ந்து கொண்டு இருப்பதால் அதனை ஒரு முதலீடாக கருதுகின்றனர்.

கிரிப்டோகரன்சியில் பல்வேறு  பிராண்டுகள் உள்ளன அதில் பிட்காயின் மற்றும் ஈதர் நன்கு அறியப்பட்ட கிரிப்டோகரன்சிகள், மேலும் புதியவை தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. ஆன்லைன் பரிமாற்ற தளம் மூலம் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அதனை டிஜிட்டல் வாலட்டிலோ,  ஆன்லைனிலோ, உங்கள் கணினியிலோ அல்லது HARD DISKலோ சேமித்துக் கொள்ளலாம். ஆனால் எதிர்பாராத ஏதாவது நடந்தால் உதாரணத்திற்கு கிரிப்டோகரன்சிகள் வாங்கப்பட்ட ஆன்லைன் பரிமாற்ற தளம் வணிகம் இல்லாமல் போனாலோ, ஒரு தவறான நபருக்கு கிரிப்டோகரன்சியை அனுப்பிவிட்டாலோ, டிஜிட்டல் வாலட்டின் கடவுச்சொல்லை இழந்துவிட்டாலோ, அல்லது டிஜிட்டல் வாலட் திருடப்பட்டாலோ இழந்த பணத்தை திரும்பப்பெற வழியே இல்லாமல் போய்விடும். பொதுவாக கிரிப்டோகரன்சியை வங்கி போன்ற ஒரு இடைத்தரகர் இல்லாமல் நேரடியாகப் பரிமாற்றுவதாலும் எந்த ஒரு சட்டப் பாதுகாப்புகளும் இல்லாததாலும்  ஏதேனும் சிக்கல்கள் நேர்ந்தால் அதற்கு எந்தவகையிலும் அரசாங்கம் பொறுப்பேற்காது.

முதலீட்டாளர்களை தவிர இதனை பெரும்பாலும் பயன்படுத்துபவர்கள் தீவிரவாதிகளும் கடத்தல்காரர்களும்  தான் காரணம் இதனை அரசோ, ஒழுங்குமுறை அதிகார அமைப்போ வழங்காததால் எந்த ஒரு சட்டவிதிகளும் இல்லாமல் இதன் மூலம் வர்த்தகம் செய்து கொள்ளமுடியும். அதனால் 2018 ஆம் ஆண்டில், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை செய்வதற்கு வங்கிகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு RBI தடைவிதித்தது. ஆனால், 2020 மார்ச் மாதத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் 'இந்த விஷயத்தில் எந்த ஒரு முடிவெடுப்பதற்கும்' அரசு, ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்' என கூறி ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து இந்தியா தனக்கென ஒரு கிரிப்டோகரன்சி மற்றும் அதன் புழக்கம் தொடர்பான வழிவகைகளை ஆராய்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியது. அதையடுத்து நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடருக்கான தனது பணிப்பட்டியல் குறித்த தகவல்களை செவ்வாயன்று மக்களவை வெளியிட்டது. இந்த பணிப்பட்டியலில், 26 மசோத்தகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி சட்டத்தை உருவாக்குவதற்கான மசோதாவும் அடங்கும். இந்த மசோதாவுக்கு (Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021) கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா 2021 என பெயரிடப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின்  அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் செயல்முறையை வடிவமைப்பதும், நாட்டில் உள்ள எல்லா டிஜிட்டல் கிரிப்டோகரன்சிகளை தடைசெய்வதும், இந்த மசோதாவை கொண்டு வருவதற்கான நோக்கம் என மக்களவை தனது பணிப்பட்டியலில் கூறியுள்ளது. 

நவம்பர் 13 அன்று, பிரதமர் நரேந்திர மோதி கிரிப்டோகரன்சி தொடர்பான விதிகளை உருவாக்குவதற்கான கூட்டத்தை நடத்தினர். அந்தக்கூட்டத்தில் மத்திய ரிசர்வ் வங்கி, உள்துறை மற்றும் நிதி அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் அதில் 'பெரிய வாக்குறுதிகள் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகளை நிறுத்த வேண்டும்' என அந்த கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

கட்டுப்பாடற்ற கிரிப்டோ சந்தைகள், பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதிக்கு பயன்படுத்தப்படலாம் என்பதும் கண்டறியப்பட்டு இதன் காரணமாக இத்துறையில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது.  கிரிப்டோகரன்சி தொடர்பான மசோதா பற்றிய தகவல் செவ்வாய்கிழமை வெளியானவுடன் கிரிப்டோ சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. எல்லா முக்கிய கிரிப்டோகரன்சிகளும் சுமார் 15 சதவீதம் அல்லது அதற்கு மேல் சரிவைக் கண்டுள்ளன.

கிரிப்டோகரன்சியை வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்யும் இந்தியர்களின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் எதுவும் இல்லை  ஆனால் கோடிக்கணக்கான மக்கள் டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்வதாகவும், இந்த கொரோன காலகட்டத்தில் அது அதிகரித்துள்ளதாகவும் பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன இப்படி நிறைய பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ள நிலையில் அரசு எல்லா கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்தால் முதலீடு செய்தவர்களின் கதி என்னவாகும்? இந்த டிஜிட்டல் கரன்சிகளைப் பற்றிய மத்திய அரசின் நோக்கத்தில் வேறு பல விஷயங்களும் இருக்கின்றனவா என்று கேள்விகள் எழுதித்தவண்ணம் உள்ளது.