திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 19 பேர் இடைநீக்கம்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 19 பேர் இடைநீக்கம்!

நாடாளுமன்றத்தில் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மழைக்கால கூட்டத் தொடர்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கிய நிலையில், விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டி அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாநிலங்களவை கூடியபோது, சமையல் எரிவாயுவின் விலை உயர்வு குறித்து அவையின் மையப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து அவர்கள் போராட்டம் செய்ததால், அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி 11 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த வாரம் முழுவதும் இடை நீக்கம் செய்து மாநிலங்களவை துணை சபாநாயகர் உத்தரவிட்டார்.

திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி என்.வி.என்.சோமு,  என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், சந்தானு சென், டோலா சென் உள்ளிட்டோர் மாநிலங்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

முன்னதாக மக்களவையில், தொடர்ந்து போராட்டம் நடத்தியதாக கூறி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 4 எம்.பி.க்கள் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.