நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவீதம் அல்லது மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முன்மொழிகிறது. இதே இடஒதுக்கீட்டிற்குள் எஸ்.சி. எஸ்.டி மற்றும் ஆங்கிலோ - இந்தியர்களுக்கு துணை இடஒதுக்கீடும் முன்மொழியப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. ராஜிவ் காந்தி தலைமையிலான அரசு 1989ம் ஆண்டு மே மாதம் முதல்முறையாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தார். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மாநிலங்களைவையில் தோல்வி அடைந்தது.
1996ம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் தேவகவுடா தலைமையிலான அரசில் இம்மசோதா கொண்டு வரப்பட்டபோதும், மக்களவையில் தோல்வியடைந்தது. தொடர்ந்து 1998, 1999, 2000, 2003ம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அந்த மசோதாக்களும் நிறைவேறவில்லை.
2008ம் ஆண்டு மன்மோகன்சிங் அரசால் மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. 2009ம் ஆண்டில் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய, 2010ம் ஆண்டு மத்திய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
2010ம் ஆண்டு மாநிலங்களவையில் 186க்கு ஒன்று என்ற வாக்குகளின் அடிப்படையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டும் மக்களவையில் மசோதா எடுத்துக் கொள்ளப்படவில்லை. 13 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இம்மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தன்னுடைய ஆட்சிக்காலத்தின் 10வது ஆண்டில் மசோதாவுக்கான ஆரவாரம் இல்லாமல் போகும் என்ற நம்பிக்கையில், அரசியல் காரணங்களுக்காக புதைத்து வைத்திருந்த மசோதாவை தற்போது பாஜக மீண்டும் உயிர்பிக்க முயல்வதாகவும் சொல்லப்படுகிறது.
இவ்வாறாக 1999ம் ஆண்டில் இருந்தே பேசப்பட்டு வந்தபோதும், பெரும்பாலான தலைவர்கள் இடஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்திய நிலையில், சில தலைவர்கள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஆரம்பத்தில் இருந்தே உறுதியான நிலைபாடு எடுத்து வராத தற்போதைய பாஜக அரசு, மக்களவைத் தேர்தலை குறிவைத்து காய் நகர்த்துவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: நியோ மேக்ஸ் மோசடி; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு!