டார்கெட் லிஸ்டில் அதிமுகவின் 7 முன்னாள் அமைச்சர்கள்… ரெய்டின் முழு பின்னணி:

டார்கெட் லிஸ்டில் அதிமுகவின் 7 முன்னாள் அமைச்சர்கள்… ரெய்டின் முழு பின்னணி:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.  

ஆளுநரிடம் அளிக்கப்பட்ட ஊழல் பட்டியல்: 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இடம்பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை பாமக கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகரிடம் ஒப்படைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் அமைச்சர்களாக இருந்தவர்கள், மூத்த அதிகாரிகள், முதலமைச்சர் என பாகுபாடு இன்றி அனைவர் மீதும் அந்த ஊழல் பட்டியலில் ஆதாரங்களுடன் தரவுகள் இணைக்கப்பட்டு ஆளுநர் வித்யாசாகரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இதே போன்ற ஒரு ஊழல் பட்டியலை திமுக சார்பிலும் ஆளுநர் வித்யாசாகரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அளித்தனர்.  இது தொடர்பாக, 200 பக்க புகார் பட்டியலை 2013 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் பாமக வழங்கியது. இதனை ஆளுநர் கடந்த 2015 ஆம் ஆண்டு தலைமைச்செயலாளருக்கு அனுப்பி வைத்தார். அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பான ஒரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, துறை ரீதியாக நடவடிக்கையும் விசாரணையும் நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 

பிள்ளையார் சுழி போட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர்:

திமுக ஆட்சி கட்டிலில் ஏறியதும் ஸ்டாலினின் முதல் குறி விழுந்த இடம் கரூர் தொகுதி. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்தது. அதில், இருந்து யாரும் தப்பிக்க முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறிவந்தார். அதன் பின்னணியில், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதியான கரூரில், அவரை எதிர்த்துப்போட்டியிட்ட எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற இந்த முதல் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது.

அதிமுகவின் கொங்கு முகமாக மணிகள்:

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போதே அடுத்த ரெய்டு எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்பவே, கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி இபிஎஸ்-இன் முக்கிய தளபதியான பி.தங்கமணிக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி ரெய்டு நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைகள் படு ஜோராக நடந்து கொண்டிருந்த நேரத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் பி. தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது சர்ச்சையைக் கிளப்பியது.

சி. விஜயபாஸ்கர் மீது நடந்த ரெய்டு:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையிலும், ஓபி.எஸ் – ஈபிஎஸ் அமைச்சரவைகளிலும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் தான் சி.விஜயபாஸ்கர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களில் அதிகமாகவும் கடுமையாகவும் விமர்சித்தவர் சி.விஜயபாஸ்கராகத்தான் இருக்கும். குட்கா புகழ் விஜயபாஸ்கர் என்றே இவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வந்தார். இந்நிலையில் தான், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் திமுக நடத்திய மாநாடுகளிலும் திமுகவின் பிரச்சாரங்களிலும் சி.விஜயபாஸ்கரை கடுமையாக விமர்சித்து திமுக ஆட்சிக்கு வந்தால் சி. விஜயபாஸ்கர் மீது விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவார் என வாக்குறுதி அளித்திருந்தார். முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதும் கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கே.சி.வீரமணி, கே.பி. அன்பழகன்:

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி உள்ளது. கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களிலும், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதம் 20 ஆம் தேதி கே.பி. அன்பழகனுக்கு சொந்தமான இடங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

7-வதாக ரெய்டு நடக்கும் ஆர். காமராஜ்:

ஏற்கனவே, ஒவ்வொரு மாத இடைவெளியில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 6 பேருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது. தற்போது, இன்று அதாவது ஜூலை 8 ஆம் தேதி முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்-க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com