ஓபிஎஸ் சறுக்கல்… ஈபிஎஸ் சக்சஸ் :  தனிநீதிபதியிடம் விட்டதை இரு நீதிபதிகளிடம் பிடித்த எடப்பாடி பழனிசாமி…!

ஓபிஎஸ் சறுக்கல்… ஈபிஎஸ் சக்சஸ் :  தனிநீதிபதியிடம் விட்டதை இரு நீதிபதிகளிடம் பிடித்த எடப்பாடி பழனிசாமி…!

பொதுக்குழு தடைக்கோரி வழக்கு:

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த ஜூன் மாதம் முதலே நீர் பூத்த நெருப்பாய் இருந்து கொண்டு தான் உள்ளது. ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்ப்பு முதல் இன்றைக்கு வெளியான தீர்ப்பு வரை இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து சட்டப்போராட்டத்தை நடத்திக்கொண்டே வருகிறது. 

இந்த ஒற்றை தலைமை விவகாரத்தில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி காலை பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கியது. 

பொதுக்குழுவை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் வழக்கு:

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்திய ஈபிஎஸ், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் கோரி இருந்தார். இதற்கு முதலில் அதிருப்தியைத் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிறகு தானாகவே அதிமுக பொதுக்குழு வழக்கில் இருந்து விலகினார். இதனையடுத்து,  வழக்கு விசாரணை தனி நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணக்கு வந்தது.  

நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17 தீர்ப்பு:

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி விசாரணை வேற்கொண்ட தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே அதிமுகவில் தொடரும் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும், 30 நாட்களுக்குள் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும்  தீர்ப்பு வழங்கினார்.

தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் மேல்முறையீடு:

பொதுக்குழு தடைக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனிநீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை எதிர்த்து, கடந்த 18 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்தார். அதேசமயம், நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, டிடிவிதினகரன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஓபிஎஸ்க்கு ஆதரவாக வந்த பிரபல நடிகர்... ஈபிஎஸ் கூட எதிர்பார்க்காத டுவிஸ்ட்...யார் இந்த பிரபலம்?

ஆகஸ்ட் 25 விசாரணை:

தனிநீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு வழக்கில், கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அதில், யூகங்களின் அடிப்படையில் தனிநீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்துள்ளதாகவும், தொண்டர்கள் அனைவரும் ஒற்றை தலைமையையே ஏற்கின்றனர். கட்சி விதிகளின் படியே பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாக  ஈபிஎஸ் தரப்பில்  விவாதிக்கப்பட்டது. அதேபோல், 2021 ல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் என்பது அடிப்படை தொண்டர்கள் மூலமே கொண்டு வரப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது. அந்த விசாரணையின் போது, இருதரப்பிலும் காரசார விவாதங்கள் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தங்கள் வாதங்களை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டனர்.

ஆகஸ்ட் 26 :

ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தங்கள் வாதங்களை எழுத்து பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதற்கு பிறகு 3 மணி நேரம் தங்கள் வாதத்தை தொடர்ந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் கேட்காத கோரிக்கையை தனிநீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளதாக ஈபிஎஸ் தரப்பு வாதங்களை வைத்தனர். இதையடுத்து மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  

இன்றைய தீர்ப்பு:

தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது எனவும், கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் என்பது செல்லும் என்பது உறுதிப்படுத்தப்படுள்ளது .