ஈபிஎஸ் தரப்பு அதிமுக வேட்பாளர் அறிவிப்பு...யார் அந்த தென்னரசு...!

ஈபிஎஸ் தரப்பு அதிமுக வேட்பாளர் அறிவிப்பு...யார் அந்த தென்னரசு...!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக்கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை அறிவித்து வந்தனர். அந்த வகையில் ஆளும் கட்சியான ஈரோடு கிழக்கு தொகுதியை தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு ஒதுக்கியது. இதையடுத்து காங்கிரஸ் தரப்பில் இருந்து வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். 

காங்கிரஸ்க்கு ஆதரவு :

இதனைத்தொடர்ந்து, திமுகவின் கூட்டணி கட்சியான விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் காங்கிரஸ்க்கு ஆதரவு அளிப்பதாக தங்கள் நிலைப்பாட்டை அறிவித்தனர். அதேபோன்று, மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. 

அதிமுகவின் நிலைப்பாடு என்ன?:

இதனிடையே, அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை தேர்தலில் தனித்து நின்று போட்டியிடுவதாக தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தது. இதேபோன்று எல்லா கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை அறிவித்து வந்த நிலையில், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக விளக்கும் அதிமுக தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வந்தது.

அதற்கு காரணம் அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் தான். கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டதால் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனிதனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் இருவரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனிதனியாக போட்டியிடுவதாக அறிவித்தனர். ஆனால், ஈபிஎஸ் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் வேட்பாளர்களை அறிவிக்காமல் காலம்தாழ்த்தி வந்தனர். 

வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம் :

இதற்கிடையில் நேற்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியதால், அதிமுக தரப்பில் இரு அணிகளும் எப்போது வேட்பாளர்களை அறிவிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தனர்.

வேட்பாளர் அறிவிப்பு :

இந்நிலையில் ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு என்பவரை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவித்துள்ளார்.  அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.தென்னரசு, ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய்தோட்டம் பகுதியை சேர்ந்தவர். அதிமுகவில் 1988ல் ஈரோடு நகர செயலாளர், 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளர், 1995-ம் ஆண்டு நகர செயலாளர் என்று தொடர்ந்து அடுத்தடுத்த பதவிகளில் இருந்துவந்த இவர், கடந்த 2001 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.