தொண்டர்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் விட்ட உத்தரவு...!

தொண்டர்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் விட்ட  உத்தரவு...!

உயர் நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள் வராததால்  வெறிச்சோடி காணப்படுகிறது. 

ஜூலை 11:

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றையதினமே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்திற்கிடையே அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டன.

அதிமுக அலுவலகத்திற்கு சீல்:

கலவரத்தைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்த மயிலாப்பூர் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ், சீலை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  

இபிஎஸிடம் சாவி ஒப்படைப்பு:

சீலை அகற்றக்கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்ட நீதிபதி, அலுவலக சாவியை ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்கவும் உத்தவிட்டார். தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை அலுவலகத்திற்கு செல்ல கூடாது எனவும் உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவு முடிவு:

அதிமுக அலுவலக சீலை அகற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் படிக்க: https://www. malaimurasu.com/posts/cover-story/Media-works-in-favor-of-one-party---H-Raja

வெறிச்சோடிய அதிமுக அலுவலகம்:

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அதிமுக அலுவலக வாயில் இன்று திறக்கப்பட்டும் தொண்டர்கள், நிர்வாகிகள் என யாரும் வராததால் அதிமுக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. அதிமுக அலுவலக இன்று திறக்கப்பட்ட நிலையில், ஈபிஎஸ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் சேலத்தில் உள்ளார். 

ஓபிஎஸ் ஈபிஎஸ் வராததற்கு காரணம்:

அதிமுக சாவி ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தீர விசாரித்ததற்கு பின்னரே எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியும் என்று கூறி ஒரு வார காலத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார். இன்னும் இதுகுறித்த வழக்கு விசாரணையில் இருந்து வருவதால் தான், ஈ.பி.எஸ், ஓபிஎஸ் இருவரும் அதிமுக அலுவலகம் திறக்கப்பட்ட நிலையிலும் அங்கு செல்லாமல் இருப்பதாக அரசியல் வல்லுநர்களிடையே சந்தேகம் எழுகின்றது.

அதேசமயம், தொண்டர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாலும், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும் அலுவலகத்திற்கு யாரும் வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வரவில்லையா? என்றும், நாளை திங்கட்கிழமை பணி நாள் என்பதால், அதிமுக தொண்டர்கள் வர வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒருவேளை அதிமுகவினர் நாளை வந்தால், அலுவலகத்தில் சூறையாடப்பட்ட பொருட்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படுமா? என்பதும் ஒருபக்கம் கவனிக்க வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது...