இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்த தினம்...

நடிப்புலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தைப் படைத்து, அதில் தனிக்காட்டு ராஜாவாக, சிம்மாசனத்தை அலங்கரித்தவர் சிவாஜி கணேசன். நடிப்பை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக - உயிர் மூச்சாக ஏற்றுக் கொண்டு மதித்து போற்றிய நடிகர் திலகத்தின் 94வது பிறந்த தினம் இன்று  

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்த தினம்...

உச்சி வானில் ஆயிரம் நட்சத்திரங்கள் அணிவகுத்துக் கொள்ளலாம். ஆனால் அத்தனை நட்சத்திரங்களும் நிலவுக்கு ஈடாகி விட முடியாது. நிலவை விட விண்மீன்கள் பெரியதாகவே இருப்பதாக கூறப்பட்டாலும், அது பூமியின் அருகில் இல்லாததன் காரணத்தினாலேயே கொண்டாடப்படவில்லை. அதே போல எத்தனையோ பேர், தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக வந்திருந்தாலும், அத்தனை பேரும், சிவாஜி என்ற ஒற்றை மனிதருக்கு ஈடு இணை செய்து விட முடியாது.

பராசக்தி எனும் படம் , சினிமா என்பது இவ்வளவுதான் என்று எண்ணம் கொண்டிருந்தவர்களை பிரமிப்படைய செய்தது. அவ்வளவு நீளமான வசனங்களைப் பேசி நடித்த ஒரு புதுமுக நடிகனைப் பார்த்து அதிசயிக்காதவர்களும், அதன்பின்பு, அவரைப் பற்றி பேசாதவர்களே இல்லை எனலாம். அதேபோல கலைஞர் கருணாநிதியின் எழுத்தில் உருவான வசனங்கள், ரசிகர்களின் இதயங்களில் ஆழமாக இறங்கி புது ரத்தம் பாய்ச்சின.

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் மராட்டிய மன்னன் சிவாஜி வேடத்தில் நடித்த கணேசனின் நடிப்புத்திறனை புகழ்ந்த தந்தை பெரியார், அவரை சிவாஜி` கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து இன்று வரை அவர் சிவாஜி கணேசன் என்றே அழைக்கப்பட்டதோடு, செவாலியே என்றும் போற்றப்படுகிறார். கட்டபொம்மனையோ, கர்ணனையோ, சிவபெருமானையோ நாம் நேரில் பார்த்ததில்லை. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்றுகூட மக்களுக்கு தெரியாது? அதற்கு எந்தவித ஆதாரமும் இதுவரை இல்லை. அதற்கு இனி ஒருகாலும் வாய்ப்பும் இல்லை. ஆனால் அனைவருக்கும் சிவாஜி கணேசனை தெரியும். அவர்கள் எல்லாம் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம்.

சிவாஜி கணேசன், கோடைகால நிலா, குளிர்கால சூரியன், சிங்கத் தமிழன், சிம்ம குரலோன், நடிப்பு பல்கலைக்கழகம், நடிகர் திலகம், செவாலியே சிவாஜி கணேசனைப் பற்றி பேச வேண்டும் என்றால், ஓர் நாள் போதாது  அவரது கண்கள், கன்னம், புருவம் வாய்,கை, கால் உட்பட அவரது எல்லா உறுப்புக்களிலும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தனது நடிப்பை வெளிப்படுத்தி, வியக்க வைத்திருப்பார்.   பொதுவாக எல்லோருக்கும் இரண்டு கண்கள்தான். அந்த இரண்டு கண்கள், ஒன்பது விதமான ரசங்களை காட்டும். ஆனால் நமது சிவாஜி கணேசனோ தனது இரண்டு கண்களில், ஓராயிரம் ரசங்களைக் காட்டி, நம்மையெல்லாம் திகைக்க வைத்திருப்பார்.

சிவாஜி ஒரு பிறவிக்கலைஞர். தலைமுடி முதல் கால் விரல்நுனி வரை அனைத்துமே ரசிகர்களுக்கு கதை சொல்லும். அவர் வாய்திறந்து பேசவே தேவையில்லை... கணைக்கும் சிம்மக்குரலும், துடிக்கும் உதடுகளும், உயர்நோக்கும் புருவங்களும், விம்மும் கன்னங்களும் என ஒவ்வொரு அவயமும் நடிப்பை கொண்டு வந்து நம் கைகளில் அள்ள அள்ள கொடுத்துவிட்டு இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? என கேட்டுவிட்டு போகும். அரசியலில் இறங்கி, தோல்விகளை சமாளிக்க முடியவில்லை என்றாலும், திரைத்துறையில் சிவாஜியின் புகழைத் தாண்டுவதற்கும், அவரது புகழின் அருகே நெருங்குவதற்கு கூட எவராலும் முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

திரையுலகுக்காக, கலைத்தாய் பெற்றுத்தந்த தவப்புதல்வன்தான் சிவாஜிகணேசன். உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அற்புதக் கலைஞன்தான் சிவாஜிகணேசன். அனைத்துவித உணர்ச்சிக் குவியல்களை வெள்ளித்திரையில் கொட்டி வண்ணக் கோலம் படைத்தவர்தான் சிவாஜி கணேசன். இந்த திரையுலகம் பூமிப்பந்தில் வாழும்வரை, சிவாஜிகணேசனின் புகழ் என்றும் கலைவானில் ஜொலித்துக் கொண்டே இருக்கும்.