அதிமுக-வில் இருந்த போது எடுத்த நடவடிக்கை எதிரொலி: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த ஆணையர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்….

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை கையாண்ட 10 உதவி ஆணையர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக-வில் இருந்த போது எடுத்த நடவடிக்கை எதிரொலி: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த ஆணையர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்….

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை கையாண்ட 10 உதவி ஆணையர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க-வில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி அரசுத்துறைகளில் பணி வாங்கித் தருவதாகக் கூறி 1.62 கோடி மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது. அதனடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட அந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மோசடியில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளின் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை செய்து முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அப்போதைய போக்குவரத்து மேலாண்துறை இயக்குனராக இருந்த கணேசனையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து செந்தில் பாலாஜி உட்பட 47 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று 82 உதவி ஆணையர்களுக்கான பணியிட மாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியின் மோசடி வழக்கை கையாண்ட 10 உதவி ஆணையர்களுக்கு  காத்திருப்போர் பட்டியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக செந்தில் பாலாஜி மோசடி வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ராமசந்திரமூர்த்தி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதே போல் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்த கிண்டி சரக உதவி ஆணையர் பாண்டி, சேலையூர் சரக உதவி ஆணையர் விஸ்வேஸ்வரய்யா, மடிப்பாக்கம் சரக உதவி ஆணையர் சவரி நாதன், மத்தியகுற்றப்பிரிவு உதவி ஆணையரான சுரேஷ், விஜய் ஆனந்த், பழனிசாமி, செல்வகுமார், போக்குவரத்து கிழக்கு உதவி ஆணையர் நல்லதுரை, போக்குவரத்து வடக்கு உதவி ஆணையர் சுந்தரம் உள்ளிட்ட 10 காவல் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அப்போதைய அ.தி.மு.க அமைச்சராக இருந்துவந்த செந்தில் பாலாஜி தற்போது தி.மு.க-வில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.