என் அளவுக்கு அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் பத்தாது...!

என் அளவுக்கு அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் பத்தாது...!

என் அளவுக்கு அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் பத்தாது என்று விசிக கட்சித் தலைவர் தொல்.  திருமாவளவன் கூறியுள்ளார்.

விசிக கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்:

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டும், கலவரத்தில் கைது செய்த அப்பாவி இளைஞர்களை விடுவிக்கக்  கோரியும், மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் கைதானவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கட்சியினுடைய தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

தொல். திருமாவளவன் உரை:

மாணவி ஸ்ரீமதிக்கு நீதிகேட்டு கள்ளக்குறிச்சியில்  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு  தற்கொலையா? அல்லது கொலையா? இறப்புக்கான காரணம் குறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறினார். 

சரமாரியான கேள்விகளை அடுக்கிய திருமாவளவன்:

மாணவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை மற்றும் சிறப்பு புலனாய் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் சிசிடிவி காட்சிகள் எப்படி வெளியானது எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் மாணவியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வகுப்பறையில் அமர்ந்து படிக்கக்கூடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில் மாணவி மேலிருந்து கீழே விழுந்ததாக கூறப்படக்கூடிய சிசிடிவி காட்சிகள் மட்டும் ஏன் வெளியிடப்படவில்லை என சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். 

செருப்பு வீச்சு விவகாரம்:

தொடர்ந்து பேசிய அவர், தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக ராணுவ வீரரின் உடலுக்கு நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது, தேசிய கொடி பறந்து கொண்டிருந்த அவரது காரின் மீது காலணிகளை வீசிய பாஜகவினருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு அனுபவம் பத்தாது:

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு நேராக அரசியலில் வந்துள்ளார். ஆனால், எனக்கு 32 ஆண்டுகள் அரசியலில் அனுபவம் உள்ளது.  என்னுடைய அனுபவத்திற்கு கூட ஈடாகாமல் அண்ணாமலை பாவம் கட்சியில் இருப்பதாக திருமாவளவன் காட்டமாக பேசினார். அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் பத்தாது என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கூறியுள்ளார்.