இனி அரசியலில் இருக்கும் வரை... மின்சாரத்துறை பற்றி பேசமாட்டேன் - அண்ணாமலை!

இனி அரசியலில் இருக்கும் வரை... மின்சாரத்துறை பற்றி பேசமாட்டேன் - அண்ணாமலை!

முதலில் அதிமுக:

திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக  இருக்கும் செந்தில் பாலாஜி முதலில் அதிமுகவில் அமைச்சராக இருந்தார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதிமுகவை விட்டு பிரிந்துவந்த செந்தில் பாலாஜி கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் நின்று வெற்றி பெற்று தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கிறார்.

அண்ணாமலை விமர்சனம்:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியின் நட்சத்திர போட்டியாளரான பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜி கடந்த  2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.  அதன்பிறகு தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சரானார். அப்போது, திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றிருக்கிறது என்ற குற்றச்சாட்டை அண்ணாமலை முன்வைத்தார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி மீது தொடர் குற்ற சாட்டுகளை முன்வைத்து வந்தார் அண்ணாமலை.

எக்ஸ்சல் ஷீட்டில் சண்டையிட்டு கொண்ட அண்ணாமலை vs செந்தில்பாலாஜி:

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல், வேறு யாரையும் விமர்சனம் செய்யாத அண்ணாமலை, செந்தில் பாலாஜி மீது மட்டும் தொடர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார். முதலில் செய்தியாளர்கள் சந்திப்பில் தொடங்கிய இவர்களது மோதல் ஒருகட்டத்தில் ட்விட்டரிலும் தொடங்கியது. அதிலும் மோதி கொண்ட இவர்கள் எக்ஸ்சல் ஷீட்டை மாறி மாறி அனுப்பி சண்டையிட்டு கொண்டனர். அதன்படி மின்சாரத்துறையில் ஊழல் நடப்பதாக  அமைச்சர் செந்தில் பாலாஜி மீது  அண்ணாமலை குற்றம் சாட்டி ட்வீட் பதிவிட்டிருந்தார். அத்துடன் அதற்கான எக்ஸசல் ஷீட் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்த செந்தில் பாலாஜி, மின்வாரியத் துறையில் முறைகேடு நடந்ததற்கு  'ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள்' என்று  அண்ணாமலைக்கு பதிலளித்தார். இப்படியாக மாறி மாறி ட்வீட் செய்து மோதி கொண்டனர்.

மின் கட்டண உயர்வும்; அண்ணாமலையின் குற்றச்சாட்டும்:

தமிழக மின்சார வாரியத்தில் ஊழல் நடப்பாக குற்றம் சாட்டியது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக  சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் செந்தில் பாலாஜி  நிலக்கரி கொள்முதல் என்ற பெயரில் ஊழல் செய்வதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் வாரியத்தில் தவறு நடப்பதாக இருந்தால், அண்ணாமலை தைரியமுள்ளவராக இருந்தால், அதற்கான ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு பதியட்டும் என பதிலடி கொடுத்திருந்தார். இருவருக்குமான கருத்து மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை ரெய்டு வருமா?:

அதேபோன்று, கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதியன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை ரெய்டு வரும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று கூறியிருந்தார். இது தமிழகத்திலும் அமலாக்கத்துறை ரெய்டு வரும் என்பதை சூசகமா அண்ணாமலை கூறியிருக்கிறாரா? என்ற கோணத்தில் எல்லாம் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய  செந்தில் பாலாஜி, தனிச்சையாக செயல்படும் அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும்? அண்ணாமலை என்ன அமலாக்கத்துறை அதிகாரியா?  பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து பாஜக ஏன் போராட்டம் நடத்தவில்லை என்று சரமாரியாக கேள்வியெழுப்பினார். 

இனிமேல் அரசியலில் இருக்கும் வரை மின்சாரத் துறை பற்றி பேச மாட்டேன்:

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை மின்கட்டணம் குறித்து பேசினார், அப்போது, அதிமுக ஆட்சியில் அமைச்சராக  செந்தில் பாலாஜி இருந்தபோது, அவரை  ஊழலுக்கு பேர் போன அமைச்சர் என்று எதிர்கட்சி தலைவராக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அப்போதைய கூற்று தவறானது என்றும், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தமர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பத்திரிகையாளர் சந்திப்பில்  கூறினால், ”இனிமேல் அரசியலில் இருக்கும் வரை மின்சாரத் துறையை பற்றி எதுவும் பேச மாட்டேன் ”என தெரிவித்தார். இவருடைய இந்த கூற்றை ஸ்டாலின் ஏற்பாரா? அல்லது அண்ணாமலையின் இந்த கருத்துக்கு செந்தில் பாலாஜி தக்க பதிலடி கொடுப்பாரா? அப்படி ஒருவேளை செந்தில் பாலாஜியை உத்தமர் என்று ஸ்டாலின் கூறிவிட்டால் , அவரின் அப்போதைய கூற்று என்னவாகும்? என்பது போன்ற கேள்விகள் அரசியல் வல்லுநர்களிடம் உலாவி வருகிறது.