திவாலான ரயில்வே துறை....எண்ணெய் இல்லை....ஊதிய பணமும் இல்லை!!!

திவாலான ரயில்வே துறை....எண்ணெய் இல்லை....ஊதிய பணமும் இல்லை!!!

பாகிஸ்தானின் ரயில்வே துறையின் நிதி நிலை கிட்டத்தட்ட சரிந்துவிட்டது.  கடந்த வருடத்தில் ஓய்வு பெற்ற பல அதிகாரிகளுக்கு பணிக்கொடை கூட வழங்க முடியாத நிலை.  

பாகிஸ்தானுமா?:

பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது.  நாட்டின் பொருளாதாரம் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது.  நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 115 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.  

வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவைச் சந்தித்த பாகிஸ்தானின் நிலை அங்குள்ள ரயில்வேயை வெகுவாக பாதித்துள்ளது.  பாகிஸ்தான் ரயில்வேயிடம் ரயில்களை இயக்க கூட போதுமான எண்ணெய் கூட இருப்பில் இல்லை.  மூன்று நாட்களுக்கு மட்டுமே எண்ணெய் இருப்பை வைத்து கொண்டு ரயில்களை பாகிஸ்தான் இயக்கி வருகிறது. 

பரபரப்பான விவாதம்:

இது தொடர்பான விவாதங்கள் பாகிஸ்தான் ஊடகங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தானின் ஊடக அறிக்கைகளின்படி, பாகிஸ்தான் ரயில்வே அதன் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களுக்கு மூன்று நாட்களுக்கு மட்டுமே எண்ணெய் இருப்புகளைக் கொண்டுள்ளதால், கடும் நெருக்கடியில் உள்ளது.  

அதிகாரிகளின் கோரிக்கை:

பாகிஸ்தான் ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர், ரயில்வே அமைச்சர் குவாஜா சாத் ரபீக்கிடம், பாகிஸ்தான் ரயில்வேயின் இந்த நிலைக் குறித்து கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.  ஒரு மாதமாக ரயில் இயக்கத்திற்காக எண்ணெய் இருப்புக்களை துளி துளியாக பயன்படுத்துவது பாகிஸ்தானின் நிதி நிலைமை உண்மையில் மிக மோசமான நெருக்கடியில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ரயில்வேயின் முக்கியமான பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்குமாறும் பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் குவாஜா சாத் ரபீக்கிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

ரயில்கள் நிறுத்தம்?:

சில நாட்களுக்கு முன்பு எண்ணெய் இருப்பு ஒரு நாள் மட்டுமே இருந்ததாகவும் இதன் காரணமாக, கராச்சி மற்றும் லாகூரில் இருந்து சரக்கு ரயில்களின் இயக்கத்தை குறைக்க ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.  பாகிஸ்தான் ரயில்வே வரலாற்றில் இதுவரை இது போன்றதொரு சம்பவம் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இத்துறையை அரசு தொடர்ந்து புறக்கணித்தால், ரயில்வே துறை திவாலாகிவிடும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

மூடப்படுமா?:

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை துறையின் நிதி நிலை கிட்டத்தட்ட சரிந்துவிட்டது என்று அதிகாரி கூறியுள்ளார்.  கடந்த ஓராண்டில் ஓய்வு பெற்ற பல அதிகாரிகள்/அதிகாரிகளுக்கு பணிக்கொடை வடிவில் சுமார் ரூ. 25 பில்லியன் இதுவரை வழங்கப்படவில்லை.  அதை அளிக்க அவர்களிடம் பணமும் இல்லை.  ஊழியர்களின் மாத சம்பளம் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் கூட வழங்க முடியாமல் திணறி வருவதாகவும் ரயில்வே அதிகாரி தெரிவித்தார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  சீனாவுடனான இரு நாடுகளின் தொடர்பு....திறந்த கதவு போல....ராகுலுடனான கமலின் முழு உரையாடல் !!!