2024 தேர்தலுக்கு அமித்ஷா கொடுத்த க்ளூ… அதிருப்தியில் பாஜக தலைவர்கள்!

2024 தேர்தலுக்கு அமித்ஷா கொடுத்த க்ளூ… அதிருப்தியில் பாஜக தலைவர்கள்!

பாஜகவில் அதிகாரத்தைக் கைபற்ற வேண்டும் என்ற போட்டி மறைமுகமாக உள்ளது. அதாவது, பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இருந்தாலும் கூட, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த தேர்தல்களுக்கான வியூகத்தை அமித்ஷா மற்றும் மோடி கூட்டணியே வகுத்தது. இந்த மாநிலங்களில் யார் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும். யார் முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்பது வரை மோடி, அமித்ஷாவே முடிவுகளை எடுத்தனர்.

பாஜகவிற்குள் உட்கட்சி பிரச்னை:

மகாராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே ஒரு கலகத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னணியில் தேவேந்திர பட்னாவிஸ் இருந்தார். மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது தேவேந்திர பட்னாவிஸுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. இதனால், மோடி, அமித்ஷா தரப்பு அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. அதனால், தான், மகாராஷ்டிராவின் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பார் என்று கருத்தப்பட்ட விஷயம் கடைசி நேரத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.

மோடிக்கு எதிரான ஆளுமைகள்:

தேவேந்திர பட்னாவிஸ் போலவே, உத்தரப்பிரதேச தேர்தலில் யோகி ஆதித்யா நாத்தின் வெற்றியும் மோடிக்கு எதிரான நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. எல்லா மாநில தேர்தல்களிலும் மோடி, அமித்ஷா முகத்தை வைத்து தான் பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்கிறது. ஆனால், உத்தரப்பிரதேச தேர்தலில், யோகியின் ஒற்றை ஆளுமை தன்மை, அவரது ஆட்சியை மீண்டும் அந்த மாநிலத்தில் உறுதி செய்துள்ளது. இதனால், அடுத்த பிரதமர் வேட்பாளராக யோகி ஆகுவார் என்று பாஜகவின் உட்கட்சியில் விவாதிக்கப்பட்டது.

நிதின் கட்கரி VS மோடி:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 252 எம்.பிக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாக சிலநாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இதனால், 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளர் பந்தயத்தில் மோடிக்கு எதிராக நிதின் கட்கரியும் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகளும் நடைபெற்றன. ஆனால், கடைசி நேரத்தில், ராஜ்நாத் சிங், பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்தினார்.

மோடியே மீண்டும் பிரதமர் வேட்பாளர்:

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியே இருப்பார் என உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா பேசியிருப்பது பாஜகவிற்குள்ளேயே விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அமித்ஷா, 2024 தேர்தலில் மோடியே பிரதமர் வேட்பாளர் எனக் கூறியுள்ளார். 

பிரதமர் கனவில் பாஜக தலைவர்கள்:

அமித்ஷாவின் இந்த பேச்சு, யோகி ஆதிதித்யநாத், நிதின் கட்கரி, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரின் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்., கர்நாடகா எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, சத்தீஸ்கர் ராமன் சிங், பூபேஸ் பாகல், மகாராஷ்ட்ரா தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரின் வெற்றி அவர்களின் சொந்த ஆளுமைக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அவர்களின் செல்வாக்கை குறைத்துவிட்டு, தொடர்ந்து மோடியையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது பாஜகவில், மோடி, அமித்ஷாவிற்கு அடுத்தபடியாக பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.