4 லேப்டாப், 2 சி.பி.யூ, சி.சி.டி.வி பதிவுகள்... சிக்கிய சிவசங்கர் பாபாவின் லீலைகள்!! அதிரவைக்கும் ஆதாரங்கள்

 சென்னை கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியில் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட சோதனையில் 4 லேப்டாப், 2 சி.பி.யூ, சி.சி.டி.வி கேமிராக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

4 லேப்டாப், 2 சி.பி.யூ, சி.சி.டி.வி பதிவுகள்... சிக்கிய சிவசங்கர் பாபாவின் லீலைகள்!! அதிரவைக்கும் ஆதாரங்கள்

சென்னை கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியில் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட சோதனையில் 4 லேப்டாப், 2 சி.பி.யூ, சி.சி.டி.வி கேமிராக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர்பாபா . இவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்ட 3 புகார்களை வைத்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சிவசங்கர் பாபா மற்றும் இரண்டு ஆசிரியர்கள் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில், அப்பள்ளியின் நிர்வாகிகள் விசாரணைக்கு ஆஜராகிய போது, சிவசங்கர் பாபா டேராடூன் உள்ள மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அடிப்படையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

பின்னர் டெல்லியில் இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் சென்றனர். ஆனால் மருத்துவமனையில் இருந்து சிவசங்கர்பாபா தப்பி ஓடியது தெரியவந்ததால், அதிர்ச்சியடைந்த சிபிசிஐடி போலீசார் டெல்லி போலிசாரின் உதவியுடன் அவரை தீவிரமாக தேடினர். அப்போது, சாகியபாத் பகுதியில் உள்ள சாகேத் என்ற இடத்தில் டெல்லி போலீசார் சிவசங்கர் பாபாவை கைது செய்து சிபிசிஐடி தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு 4 லேப்டாப், 2 சி.பி.யூ மற்றும் சி.சி.டி.வி பதிவுகளை கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக சிவசங்கர் பாபா மீது போடப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு தேவையான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பல முன்னாள் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக புகார் வந்ததையடுத்து அதற்கான ஆதாரங்கள் தீவிரமாக சேகரிக்கப்படுகின்றன.

 இந்நிலையில் டெல்லியில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டதையடுத்து உடந்தையாக இருந்த மற்ற ஆசிரியர்களும் கைது செய்யப்படலாம் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.