"துணை நடிகையா? வா..ஹீரோயினே ஆக்குகிறேன்.. " ஆசை காட்டி அத்துமீறிய கேமராமேன்...!

"துணை நடிகையா? வா..ஹீரோயினே ஆக்குகிறேன்.. " ஆசை காட்டி அத்துமீறிய கேமராமேன்...!

சென்னையில் கதாநாயகி வாய்ப்பு வாங்கித் தருவதாகக்கூறி துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்கு அழைத்து மதுஅருந்திய போது அத்துமீறிய ஒளிப்பதிவாளர், கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு....

சென்னை வளசரவாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன். இவர் தொலைக்காட்சி நாடகங்களின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண் சில நாடகங்களில் துணை நடிகையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நாடகங்களின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டுமென அவர் ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளார். இதனை தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் காசிநாதன். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சித் தொடர்களில் கதாநாயகி வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை கூறி தன் வீட்டுக்கு பெண்ணை அழைத்துள்ளார். அவர் உறுதியளித்ததை நம்பி பெண்ணும் காசிநாதன் வீட்டுக்குச் சென்றார்.

அப்போது இருவரும் மது அருந்திய நிலையில், காசிநாதன் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத அப்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்து உடனடியாக தனது நண்பருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து தனது நண்பருடன் அங்கிருந்து வெளியேறிய அப்பெண், சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து  வழக்குப்பதிவு செய்த போலீசார், காசிநாதனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொலைக்காட்சித் தொடர்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அழைத்து, மதுபோதையில் துணை நடிகையிடம் அத்துமீற முயன்ற ஒளிப்பதிவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.