நளினி விடுதலையில் காங்கிரஸ் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல்...!!!

உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது காங்கிரஸ்.

நளினி விடுதலையில் காங்கிரஸ் சார்பில் மறு சீராய்வு  மனு தாக்கல்...!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை:

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது ஸ்ரீபெரும்புதூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.  அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர் பயாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.  முதலில் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பேரறிவாளன் விடுதலை:

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம், நன்னடத்தை மற்றும் பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உச்ச நீதி மன்றம் தனக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 142 இன் படி கடந்த மே மாதம் பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி தீர்ப்பளித்தது.

நளினி உள்ளிட்டோர் விடுதலை:

பேரறிவாளைனைப் போன்றே தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது எற்கனவே விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பேரறிவாளனுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஏனைய 6 பேருக்கும் பொருந்தும் என தெரிவித்த நீதிபதிகள், சிறையில் இருக்கும் 6 பேருக்கும் விடுதலை அளித்து உத்தரவிட்டது.

காங்கிரஸின் அதிருப்தி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீதமிருந்த கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டது முற்றிலும் தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ளதகாதது எனவும் காங்கிரஸ் கட்சி இதை தெளிவாக விமர்சிப்பதோடு ஏற்றுக்கொள்ளவும் செய்யாது எனவும் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உண்மையாக நடந்து கொள்ளாதது முற்றிலும் வருந்தத்தக்கது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் விமர்சித்திருந்தார் ஜெய்ராம் ரமேஷ்.

மேலும் படிக்க:   நளினியின் முதல் செய்தியாளர் சந்திப்பு...பிரியங்கா காந்தியுடனான சந்திப்பின் மர்மம் என்ன?!!...

மறு சீராய்வு மனு:

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்த 10 நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ஆதிபுருஷை விட இது எவ்வளவோ மேல்... “ஹனுமான்” பட டீசருக்கு குவியும் பாராட்டுகள்...