காங்கிரசின் படுதோல்வியும் தொடர் அவமானங்களும்...விமர்சனங்களை துடைக்குமா!!!

காங்கிரசின் படுதோல்வியும் தொடர் அவமானங்களும்...விமர்சனங்களை துடைக்குமா!!!
Published on
Updated on
1 min read

குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து, அனைத்து கட்சிகளும் காங்கிரஸை விமர்சிக்க தொடங்கியுள்ளன.  குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் திறன் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

மோசமான செயல்பாடு:

குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரசின் செயல்பாடு இந்த முறை மிக மோசமாக உள்ளது.  இதனால் காங்கிரசுக்கு புதிய சவால் வந்துள்ளது.  இப்போது பாஜகவுக்கு எதிரான கட்சிகளும் காங்கிரஸை விமர்சிக்க தொடங்கியுள்ளன.  சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் திறனைக் கேள்விக்குள்ளாக்கியதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் காங்கிரஸை கடுமையாக தாக்கி பேசியுள்ளது.

ஒரே எதிர்க்கட்சி:

நாட்டிலேயே பாஜகவுக்கு எதிரான ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.  அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், குஜராத் தேர்தல் தோல்விக்கு பிறகு அது அதனையே திருத்தி கொள்ள வேண்டும். குஜராத்தில், காங்கிரஸ், பாஜகவிற்கு பலமான போட்டியாக காணப்படவில்லை.  அதேசமயம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் வெற்றி பெற்று தன்னை நிரூபிக்கும் வாய்ப்பு காங்கிரஸுக்கு இருந்தது.

ஆனால் அதைச் செய்ய காங்கிரஸ் தவறிவிட்டது.  தேர்தலில் காங்கிரஸால் அதனுடைய மரியாதையைக் கூட காப்பாற்ற முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள காங்கிரஸால் முடியாது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  குஜராத் தேர்தலில் தோல்வியடைந்த கட்சி, மக்களவை தேர்தலில் எப்படி போட்டியிட முடியும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.  நாட்டில் பாஜகவுக்கு மாற்றாக திரிணாமுல் காங்கிரஸால் மட்டுமே முடியும் எனவும் தேர்தல் முடிவுகள் அதை மீண்டும் நிரூபித்துள்ளன எனவும் கூறியுள்ளார்.

காரணம் என்ன?:

குஜராத் சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் வலுவான வியூகம் வகுத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் இந்திய ஒற்றுமை பயணத்தில் மும்முரமாக இருந்ததாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுகேந்து சேகர் ராய் கூறியுள்ளார்.  மற்றொருபுறம், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சத்ருகன் சின்ஹா, குஜராத்தில் அமோக வெற்றி பெற்ற பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 156 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.  மாநில வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் மிக மோசமான தோல்வி இதுவாகும். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com