அந்தர்பல்டி அடிக்கிறாரா மம்தா? எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி!

தேசிய ஜனநாயகக்  கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவை ஆதரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மம்தா பானர்ஜி தெரிவித்தது எதிர்க்கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தர்பல்டி அடிக்கிறாரா மம்தா? எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி!

குடியரசு தலைவர் தேர்தல் வருகிற ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அப்பதிவிக்காக ஆளும் பாஜக கூட்டணி சார்பில்  திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ததும், தங்கள் கூட்டணிகட்சிகளின் ஆதரவை கோருவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னைக்கு வருகைபுரிந்து  திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட தங்கள் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார். அதேபோன்று ஆளும் பாஜக கூட்டணி சார்பில் களமிறங்கும் திரெளபதி முர்மு தங்கள் கூட்டணி கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோர இன்று சென்னை வருகை தரவுள்ளார்.

இந்த சூழலில் எதிர்க்கட்சி  குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து மேற்கு வாங்காள முதல்வர் மம்தா பானர்ஜி  பேசிய போது, திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து தங்களிடம் பாஜக கலந்தோசிக்கவில்லை எனவும் தங்களிடம் கருத்து மட்டுமே கேட்டதாகவும் தெரிவித்தார். சிறுபான்மை பழங்குடியின இனத்தை சேர்ந்த திரெளபதி முர்முவை அவர்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவது முன் கூட்டியே தெரிந்திருந்தால், அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலித்திருப்போம் எனவும் கூறினார். பழங்குடியின மக்கள் மீது தாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். பாஜக கூட்டணி அப்துல்காலமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்திய போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவரை ஆதரித்ததையும் மம்தா சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் மம்தாவின் இந்த தீடீர் மாறுபட்ட பேச்சு எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தான் இதற்கு காரணம் என்றும், தான் முன்னெடுத்த ஒரு விஷயத்தில் தோல்வி பயத்தின் காரணமாக அவர் பின்வாங்குவதாக காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன.