தமிழகத்தை கலக்கிய சர்ச்சை சாமியார்கள்...!!

தமிழகத்தை கலக்கிய சர்ச்சை சாமியார்கள்...!!

நான் எனும் அகந்தையை அழித்து, ஆத்மா எனும் ஆற்றலில் ஐக்கியம் ஆவதை தான் ஆன்மிகம் என்பர். நம் உடலை கடந்து உள்ளே , உறுப்புகளை கடந்து உள்ளே, உள்ளதை கடந்து உள்ளே, இப்படி அனைத்தையும் கடந்து உள் இருப்பதினால் தான் கடவுள் என்ற பெயர் தோன்றியது. இந்த கடவுள் அனைவரின் உள்ளும் அனைத்தின் உள்ளும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஆன்மாவை ஆராய்ந்து அதனை மிகைப்படுத்துவது அல்லது மீட்டெடுப்பதை தான் ஆன்மிகம் என்பர்.

இப்படி ஆன்மாவை மிகைப்படுத்தி மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற்றவர்கள் அவர்கள் பின்பற்றிய வழியை சகமனிதனுக்கும் கற்பித்து தெய்வநிலைக்கு உயர்த்த பாடுபடுவது தான் உண்மையான ஆன்மீக போதனைகள், அவர்கள் தான் உண்மையான ஆன்மீக குருக்கள். ஆனால் இன்றைய சூழலில் அனைத்து மனிதர்களும் குடிகொண்டுள்ள ஆற்றலை அவர்கள் உணரும்படி செய்வதற்கு அதிகப்படியான பணத்தை கேட்கும் போலி சாமியார்கள் அதிகம் உள்ளனர். 

தூணிலும், துரும்பிலும் குடிகொண்டுள்ள ஆற்றலான சாமி யார், சாமி யார், என்று எந்நேரமும் ஆன்ம விசாரணையில் ஈடுபட்டிருப்பவரே உண்மையான சாமியார்கள். இவர்கள் தெய்வநிலையை அடையாதவர்கள். ஆனால் அந்த ஆற்றலை உணர்ந்து அடைந்துவிட்டதாக கூறிக்கொண்டு பிறரை அடையவைப்பதாக கூறிக்கொண்டு கோடியில் புரள்கிறார்கள், தற்போதைய ஆன்மீக வாதிகள். இப்படிப்பட்ட போலி ஆன்மீக வாதிகள் அதிகம் நிறைந்த நம் தமிழ் மண்ணில் சர்ச்சையில் சிக்கி கம்பி எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் ஆகியோரின் பெயர்களை இந்த பட்டியலில் பாப்போம்.

1. நித்தியானந்தா:

திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற பெயரில் பிறந்த நபர் தனது 22வது வயதில் முழு ஞானம் பெற்று மஹா அவதார் பாபாஜியால் நித்தியானந்தா என்று பெயர் வைக்கப்பட்டதாக அவரே கூறிக்கொண்டார். 

இவர் நூறுவருட பழமையான லண்டனை சேர்ந்த வாட்கின்ஸ்' மைண்ட் பாடி ஸ்பிரிட் இதழால் வாழும் மனிதர்களில் மிகவும் ஆன்மீக செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இவர் புளோரிடாவை மையமாக கொண்ட அமெரிக்காவின் இந்து பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்துள்ளார். பிறகு 2012ல், மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். ஆனால் நடிகை ரஞ்சிதாவுடன் இணைந்து இவரின் படுக்கையறை காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதால் இவரின் மதுரை ஆதீனத்தின் பீடாதிபதி பதவி பறிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து பல பாலியல் வழக்கு, ஆள் கடத்தல் கருப்புப்பண விவகாரம் என பல குற்றத்திற்காக காவல்துறை இவரை தேடிவந்த நிலையில் அனைவருக்கும் தண்ணிகாட்டிவிட்டு தனக்கென ஒரு தனித்தேசத்தை அமைத்து கொண்டார் நித்தியானந்தா.

2. பிரேமானந்தா:

இலங்கை தமிழரான பிரேம் குமார் தனது பிறந்த இடமான மாத்தளையில் ஒரு ஆசிரமமும் அனாதை இல்லமும் நடத்திவந்தார். ஆனால் திடீரென இலங்கையில் போர் மூல உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிப்பதற்காக 1983 இல் அவர் தனது ஆதரவாளர்களுடன் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தார்.

 பின்பு திருச்சியில் 150 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் ஒன்றை நிறுவி பூக்கள், பழங்கள் காய்கறிகள் மற்றும் தேக்கு தோட்டங்கள் ஆகியவற்றை பராமரித்து வந்த அந்த ஆசிரமம் பெண்கள் மற்றும் அனாதை குழந்தைகள் என 200 பேருக்கு தங்குமிடமாக செயல்பட்டது. பிற்காலத்தில் ஆசிரமத்தின் கிளைகள் UK, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், மெக்சிகோ மற்றும் பிற நாடுகளிலும் திறக்கப்பட்டன. தமிழ் நாட்டின் குட்டி சாய்பாபா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட பிரேமானந்தா ஆசிரமத்தில் இருந்து 1994 அருள்ஜோதி என்ற சிறுமி தப்பித்து வந்து தான் பலமுறை கற்பழிக்க பட்டுள்ளதாகவும் தற்போது கர்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த சிறுமியின் புகாரின் அடிப்படையில் பிரேமானந்தா மீது வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் இவர் குழந்தைகளுக்கு இழைத்த பாலியல் துன்புறுத்தல் மட்டுமின்றி இதை வெளியிட முயன்ற ஒரு நபரை கொலை செய்து தனது ஆசிரமத்தில் புதைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளி என்று நிரூபணமாகி நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

3. சிவசங்கர் பாபா:

சிவசங்கர் என்பவர் 28 ஜனவரி 1949, தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூரில் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள ஆலங்காயம் என்ற கிராமத்தில் நாராயண சர்மா மற்றும் விஜயலட்சுமிக்கு மகனாகப் பிறந்தார். அவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தனது வேதியியல் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து பிறகு லண்டனை சேர்ந்த லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்துக்கான தனது முதுகலை பட்டத்தை பெற்றார். அதனை தொடர்ந்து கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் என்ற பள்ளியை நிறுவினார். அதன்பிறகு திடீரென்று ஒரு நாள் ராகவேந்திரா ஸ்வாமி என் கண்முன் தோன்றி உயிரற்ற என் உடலை எனக்கு காண்பித்தார். அத்துடன் இன்னும் பதினோரு மாதத்தில் அட்டமா சித்திகளும் எனக்கு கைகூட உள்ளது என்று பல விதமான உருட்டுகளை உருட்டி ஒரு சாமியாராக உருமாறினார். ஆனால் இவரும் தனது பள்ளியில் பயிலும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதால் CB-CID மூலம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சமீபத்தில் மாரடைப்பு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

4. இருளப்பசாமி:

சிவகங்கை மாவட்டம் சக்கந்தி அருகே உள்ள பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளப்பசாமி. 80 வயதுடைய இவர் தனது குடும்பத்துடன் கிராமத்தில் வசித்து வருகிறார். சாமியாராக உள்ளூரில் பெயரெடுத்த இவர், கடந்த 2019இல் ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்தார். இந்த செய்தி தீயாக பரவ அனைத்து தமிழ் ஊடகங்கள் உட்பட ஐந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு குவிந்தனர். இந்நிலையில் தேர்வு செய்த இடத்தில் இருளப்ப சாமியார், ஜீவசமாதியை அடைய குழி வெட்டி பூஜைகள், மலர் அலங்காரம், பந்தல் அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு பக்தி பாடல்கள் ஒலிக்க விடிய விடிய பூஜைகள் நடந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த  அங்கு போலீஸ் பாதுகாப்பெல்லாம் போடப்பட்டது. பொதுமக்கள் முன்னிலையில் அமர்ந்த இருளப்பசாமி, நள்ளிரவு 12 மணியில் இருந்து காலை 5 மணிக்குள் தனது உயிர் பிரிந்துவிடும் என்று அறிவித்தார். இதனையடுத்து அங்கு வந்திருந்த வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் நிலைமையை கண்காணித்து வந்தனர். சுமார் 7 முறை நடைப்பெற்ற மருத்துவப் பரிசோதனையில், சாமியாரின் உடல்நிலை சீராக இருப்பது தெரிய வந்தது, உடனே உஷாரான இருளப்பசாமி கடைசி நிமிடத்தில்  முடிவை ஒத்திவைத்து நேரம் தவறிவிட்டதாகவும் அதனால் 2045-ல் இதே இடத்தில் ஜீவ சமாதி அடைவதாகவும் அதுவரை தவம் மேற்கொள்ள போவதாகவும் கூறி அந்தர் பல்ட்டி அடித்தார்.

5. மணிகண்டன்:
பாலாவின் தீவிர ரசிகராக இருந்தவர் போல இந்த மணிகண்டன் நன்றாக இருந்த இவர் திடீரென நான் கடவுள் படத்தில் வரும் ஆரியா போன்று அகோரி அவதாரம் எடுத்துவிட்டார். புறவுலக வாழ்க்கையை துறந்து முழுக்க முழுக்க அகவுலக ஆனந்தத்தை தேடி அகோரியாக மாறிய இவர் பற்று அறுத்த நிஜ அகோரி என்று நிரூபிக்க தனது தாயின் சடலத்தின் மீதே அமர்ந்து சக அகோரிகளுடன் சேர்ந்து மயான பூஜை நிகழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி பிணத்தின் மீது அமர்ந்து மாயணபூஜை செய்த மணிகண்டன் அடுத்த மாதத்திலேயே பெண் அகோரி ஒருவரை திருமணம் செய்துகொண்டு ஊரைவிட்டு ஓடிவிட்டார் என்று செய்தி வெளியானது.

இப்படி பாம்பை கழுத்தில் மாட்டிக்கொண்டு குறிசொல்லும் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் கபிலா என்ற பெண் சாமியார், பக்தர்களுக்கு சாராயத்தை கொடுக்கும் சரக்கு சாமியார். பதினாறு வயது பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக கைதான நானு பாபா போன்ற பலர் தமிழ் நாட்டில் அட்டூழியம் செய்து வருகின்றனர் இன்னும் பலர் புதிதாக பல அவதாரங்களை எடுத்த வண்ணம் உள்ளனர். நமக்குள் இருக்கும் ஞானத்தின் வாசலுக்கு வெளியில் இருந்து ஒரு மகான் வந்து தான் வழிகாட்ட வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் வரையிலும் போலி சாமியார்களும் ஆன்மீக குருக்களும் வந்தவண்ணம் தான் இருப்பர்.