அதிமுக பரபரப்பில் காணாமல் போன திமுக-பாஜக மோதல்..!  

கடந்த ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுகுழுக் கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாட்டின் தலைப்பு செய்தி முதல் விரிவான செய்தி வரை எங்கு பார்த்தாலும் அதிமுக பற்றிய செய்தி தான்.

அதிமுக பரபரப்பில் காணாமல் போன திமுக-பாஜக மோதல்..!  

அதிமுகவின் பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில், கடந்த 10 நாட்களில் காணாமல் போன தங்களது கட்சி பற்றி மக்கள் பேச வேண்டும் என்று திமுகவும், பாஜகவும் இறங்கி உள்ளது போல இரண்டு கட்சியை சேர்ந்த நிர்வாகர்களும் போட்டி போட்டுக் கொண்டு பேசி வருகின்றனர். 

தமிழக மக்களை பேசவைத்த அதிமுக:


அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெளிப்பட்டதால் அந்த கட்சியில் என்ன நடக்கின்றது என்பது தான் தமிழக மக்களால் அதிகம் பேசப்படும் செய்தியாக உள்ளது. கட்சி யாரிடம் செல்லும், நீதிமன்ற தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் தமிழகத்தில் வேறு கட்சிகள் குறித்த எண்ணமே எழாமல் போகும் அளவிற்கு அதிமுகவின் உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  

ஆ.ராசா மற்றும் நயினார் நாகேந்திரன்:


இந்த பின்னணியில் தான், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தனித்தமிழ்நாடு பற்றி பேச வைத்துவிடாதீர்கள் என்ற கருத்து வெளிப்படுத்தினார். இது, தேசிய அளவில் பேசு பொருளானது. இது குறித்து, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்பொது, தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று அவர் கூறியது ஆ.ராசாவின் பேச்சை தாண்டி மேலும் சர்ச்சையை உருவாக்கியது. 


பாஜகவின் மாநிலம் தழுவிய போராட்டம்:


திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்த எந்த வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை எனக் கூறி பாஜக சார்பில் தமிழ்நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதில், மகாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரேவின் மகன் அமைச்சராக்கப்பட்டார் அதனால், அங்கு ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாக்கப்பட்டார். இங்கு, முதலமைச்சர் மகனுக்கு அரசியல் ஆசை உள்ளது, அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்பட பட்டியல் தயாராகிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாட்டிலும் ஒரு  ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் எனக் கூறினார். அதிமுக விவகாரம் கடந்த இருவாரமாக பேசுபொருளான சூழலில், திமுகவின் ஆ. ராசா பேச்சு மற்றும் பாஜகவின் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் பேச்சு ஆகியவை தமிழ்நாடு அரசியல் களத்தை மீண்டும் பாஜக – திமுக மோதலாக மாற்றியது. இருப்பினும், அதிமுகவின் உட்கட்சி விவகாரம் நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் சூடு பிடித்துள்ளதால், பாஜக – திமுக மோதல் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டி இருக்கிறது.