ஐந்தே மாதத்தில் திமுக ஆட்சி கலைந்துவிடும்... டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை!!

இந்திய மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தால் ஐந்து ஆண்டுகளில் முடிய வேண்டிய திமுக அரசு, ஐந்தே மாதங்களில் முடிவுபெறும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.

ஐந்தே மாதத்தில் திமுக ஆட்சி கலைந்துவிடும்... டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை!!
கடந்த சில நாட்களாகவே இந்திய அரசை ஒன்றிய அரசு என்ற சொற்றொடரில் அழைப்பது பற்றி ஒரு விவாதம் அரசியல் அரங்கில் நடந்து வருகிறது. இதற்கு பல கட்சிகளிலிருந்து ஆதரவு கிடைத்து வரும் சூழலில், பாஜக ஆதரவாளரான புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ INDIA that is BHARAT shall be a union of states- இந்தியா அதாவது, பாரத தேசம் ஒன்றுபட்ட இறையாண்மை மிக்க ”ஒரு பேரரசாகத் திகழும்” - என்பதே அதன் அர்த்தமாகும்.
 
நாடு என விகுதி கொண்டிருந்தாலும் தமிழ்நாடு ஒரு மாநிலமே! ஒன்றிய அரசு எனும் முழக்கத்தின் பின்னால் ஒளிந்து கிடக்கிறதா, திராவிட நாடு கோரிக்கை? ”INDIA IS AN INDESTRUCTIBLE UNION OF DESTRUCTIBLE STATES”
 
இந்தியா எனும் பாரத தேசத்தை ஒன்றிய அரசு என்று அழைத்து அகமகிழ்ச்சி கொள்ளுகின்ற ஒரு கூட்டத்தின் கூச்சல் இன்னும் அடங்கியபாடில்லை. இம்மாநிலத்தின் ஆட்சி, அதிகாரம் அவர்கள் கைக்கு வந்த நாள் முதலே துள்ளி குதிக்கிறார்கள். மே 07 ஆம் தேதி “Belongs to the Dravidian stock” என்று டிவிட்டரில் பதிவு செய்யப்பட்டு, பரப்பப்பட்டதை இதனுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். திடீரென்று இது போன்ற சிந்தனைகள் அவர்களிடத்தில் இன்று முளைத்திடவில்லை. ஆனால், திரும்ப மாநில சுயாட்சி – ஒன்றிய அரசு பல்லவியைப் பாடி வருவதிலும், இப்பொழுது அதை உரக்கப் பேசுவதிலும் வேறொரு உள்ளார்ந்த நோக்கம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
 
1962-ல் அன்றைய பிரதமர் நேரு அவர்களின் திமுகவுக்குத் தடை விதிக்கப்படும் என்ற ஒரே ஒரு மிரட்டலுக்கு அடிபணிந்து, ’திராவிட நாடு எனும் பிரிவினை கோஷத்தை’ கைவிட்டார்கள். எனினும் தற்காலிகமாக அக்கோரிக்கையை கை விட்டாலும், திராவிட நாடு கேட்பதற்கு உண்டான காரணிகள் அப்படியே இருக்கிறதென்று அண்ணா சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் என்கிறார்கள். ஒன்றிய அரசு முழக்கத்தின் மூலம் திமுக திராவிட நாடு கோரிக்கையை மீண்டும் தூசித் தட்டி தூக்கிப் பிடிக்கிறது என்பது தெளிவாகிறது. திமுகவின் பார்வையில் திராவிட நாடு என்பது மட்டுமே நாடு. இந்தியா தேசமுமல்ல, நாடும் அல்ல; ஊராட்சிக்கு ஒரு படி மேலே உள்ள ஒன்றியத்திற்கான மதிப்புதான். அந்த எண்ணத்திலேயே இப்போது முதலமைச்சரின் அறிக்கை உட்பட எல்லாவற்றிலும் ’ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிடப்படுகிறது.
 

இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லி இருக்கக் கூடிய “Union” என்ற வார்த்தையைத் தானே நாங்கள் ”ஒன்றியம்” என பயன்படுத்துகிறோம் என்று மழுப்பி, பித்தலாட்டம் செய்வதற்கு ஓர் முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ள கிருஷ்ணசாமி மேலும்,
 
“அரசியல் சாசனத்தின் முழு அம்சத்தை அறியாத சாதாரண குடி மக்கள் ”Union என்றால் ஒன்றியம்” – ”States என்றால் மாநிலம்”, எனவே ”மாநிலங்களாலான ஒன்றிய அரசு” என்று அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்று, எளிதாக நம்பக் கூடும். ஆனால், உண்மை அதுவல்ல, ”India that is bharat shall be a union of states” என்ற அரசியல் சாசனத்தின் முதல் சரத்தின் (Article) பொருளை ஒவ்வொரு வார்த்தையாகத் தனித்துப் பிரித்து பொருள் கொள்ளக்கூடாது. இந்தியா அடிமைப்பட்ட வரலாற்றையும், அது மீட்டெடுக்கப்பட்டு சுதந்திரம் பெற்ற வரலாற்றையும், தேசத்திற்கான வடிவமைக்கப்பட்ட அரசியல் சாசனத்துடன் இணைத்தும், பொருத்தியும் பார்க்க வேண்டும்.
 
எனவே, தமிழ்நாடு என்பதில் ’நாடு’ என விகுதி இருக்கின்ற காரணத்தினால் அதை ’தனி நாடு’ எனப் பாவிக்கக்கூடியவர்களே, கடந்த கால திராவிட நாடு கோரிக்கையை இன்று முன்னிறுத்தக்கூடியவர்கள் ஆவர். தமிழகத்தில் கூட எத்தனையோ ஊர்கள் ”நாடு” எனும் விகுதியைக் கொண்டுள்ளன. அதற்காக அந்த கிராமங்கள் எல்லாம் நாடுகளாகி விடுமா?.
 
இந்திய அரசியல் சாசனத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கான தனித்தனி அதிகாரங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அந்த வரையறைக்குள் தான் மத்திய அரசும், அனைத்து மாநிலங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் சூழலில் அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு சில கூடுதலான அதிகாரம் மற்றும் நிதி பங்கீடுகள் தேவைப்படலாம். அதை எடுத்துச் சொல்வதற்கு மக்களவை, மாநிலங்களவை உண்டு; நாடாளுமன்றக் குழுக்கள் உண்டு; நீதிமன்றங்கள் உண்டு. அந்த ஜனநாயக ரீதியான வழிமுறைகளை விட்டு விட்டு தமிழ்நாட்டு மக்களிடத்தில் இந்திய அரசின் மீதான வெறுப்பையும், தமிழ் மாநில பிரிவினை எண்ணங்களை விதைப்பதும், வளர்ப்பதும் மிகப்பெரிய ஆபத்தாக முடியும். இந்திய அரசியல் சாசனம் எழுத்து வடிவிலும், நெகிழும் தன்மையை உள்ளடக்கியது என்ற காரணத்தினால் தான் மத்திய, மாநில அரசுகளைத் தாண்டி கிராம ஊராட்சிகளும், நகராட்சிகளும், பேரூராட்சிகளும் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, சுயமாகச் செயல்படக் கிராம பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
 
எனவே, மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அரசு என மூன்று அதிகார மையங்கள் இப்போது இந்திய அரசியல் சாசனத்திலேயே இடம் பெற்று விட்டன. கிராம பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா சட்டங்கள் உள்ளதால், ஊராட்சி தலைவர் அல்லது நகராட்சித் தலைவர் போன்றோர் மாநில முதல்வரை ஏளனம் செய்தால் எப்படி இருக்குமோ, அதே போலத்தான் மாநில அரசு இந்தியப் பேரரசை ஒன்றிய அரசு என சிறுமைப்படுத்துவதும் இருக்கிறது.
 
ஜிஎஸ்டி கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய அறிவுத்திறமையை பயன்படுத்தி, தமிழகத்திற்கு வர வேண்டிய 12,000 கோடியைப் போராடிப் பெற்றுத் தந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் அதைவிட்டு விட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பிணக்கை உண்டாக்கும் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்.

 
இனியாவது திமுக மற்றும் அதன் அருவருடிகள் இந்திய அரசியல் சாசனத்தின் அருமை, பெருமைகளைத் தெரிந்து செயல்பட வேண்டும். இறையாண்மை மிக்க இந்தியப் பேரரசை ”ஒன்றிய அரசு” எனத் தொடர்ந்து அழைப்பது எட்டுகோடி தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதற்கும், 140 கோடி இந்திய மக்களைச் சீண்டிப் பார்ப்பதற்கும் சமமானதும், சட்டவிரோதமானதும், தேசவிரோதமானதும் ஆகும்.
 
திமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும் இந்திய அரசை ”ஒன்றிய அரசு” எனக் குறிப்பிடுவதும், ”திராவிட நாடு” என்ற பிரிவினை முழக்கமும் உள்ளடக்கத்தில் ஒன்றே தவிர, வேறு வேறு அல்ல. ஏற்கனவே ”பிரிவினை வாதம்” பேசி 1976, 1990-களில் ஆட்சியை இழந்தது நினைவில் இல்லாமலா போய்விடும்? இது தொடர்ந்தால் ஐந்து வருடத்திற்குப் பிறகு, வர வேண்டிய முடிவு, ஐந்தே மாதத்தில் வந்து விடுமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை”என்று  டாக்டர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டிருக்கிறார்.