தூங்கியது போதும் பொங்கி எழு..! தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம்..!

உள்ளாட்சி தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராக வேண்டும்..!

தூங்கியது போதும் பொங்கி எழு..! தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம்..!

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சசிகலா, பின்பு தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், அதிமுக, அமமுக தொண்டர்களிடம் செல்போனில் பேசி வந்தார் சசிகலா. இது குறித்து கருத்துகளை தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன். 

இது ஒரு புறம் இருக்க அமமுகவை சேர்ந்த பலர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவ்வாறு திமுகவில் இணைந்தவர்களில், ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரா மனு அளித்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருப்பவர்களும் அடங்குவர். 

இதற்கான காரணம் குறித்து அமமுக வட்டாரங்களில் விசாரிக்கையில், போன தேர்தலின் போது கிடைத்த வாக்கு வங்கி, இந்த தேர்தலின் போது பாதியாக குறைந்ததும், டிடிவி.தினகரன் தொண்டர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் தராததால் தான் நிர்வாகிகள் அடுத்த கட்சிக்கு தாவி வருவதாக தெரிவித்தனர். இதற்கும் டிடிவி.தினகரன் எவ்வித பதிலும் தெரிவிக்காமல் இருந்தது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், தற்போது டிடிவி.தினகரன் தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், புதிய பொலிவோடும், வலிவோடும், முன்பை விட வேகமாக செயல்படுவோம் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், வஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு தயாராவோம் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். 

சட்டசபை தேர்தலில், எதிர்பார்த்த வெற்றி கிடைத்திடவில்லை எனவும், தேர்தல் அரசியலை பொறுத்தவரை, வெற்றி, தோல்வி என்பது எல்லா இயக்கங்களுக்கும், தலைவர்களுக்கும் பொதுவானது தான் எனக் கூறியுள்ளார். இந்த பின்னடைவு தற்காலிகமானது எனவும், புத்தம் புது பொலிவோடும், வலிவோடும், முன்பை விட வேகத்தோடும், விவேகத்தோடும் செயல்படப் போகிறோம் எனத் தெரிவித்துள்ளார். மிகச் சிறப்பான எதிர்காலம், நமக்காக காத்திருக்கிறது என தனது கடிதத்தில் டிடிவி.தினகரன் கூறியிருக்கிறார். 

விரைவில், ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதற்கு முழு வீச்சில் தயாராவோம் எனவும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வாரி வழங்கி, ஆட்சிக்கு வந்த தி.மு.க., இரண்டே மாதங்களில், பல விஷயங்களில் தடுமாறி வருவதை மக்கள் பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் மூலம் மீண்டும் உயிர்த்தெழுமா அமமுக என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.