க்ரீன் சிக்னல் காட்டிய டெல்லி... கந்தசாமியிடம் அசைண்ட்மென்ட்!!

அதிமுக அமைச்சர்களின் முகத்திரையை கிழிக்காமல் ஓய மாட்டேன் என சபதம் ஏடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

க்ரீன் சிக்னல் காட்டிய டெல்லி... கந்தசாமியிடம் அசைண்ட்மென்ட்!!
என்னதான் கொரோனாவின் இரண்டாம் அலை, டெல்டா வைரஸ் போன்றவைகளின் ஆட்டம் அதிகரித்தாலும், 10 ஆண்டுகளாக ஆட்சியில் ஆட்டம் ஆடிய அதிமுக அமைச்சர்களின் முகத்திரையை கிழிக்காமல் ஓய மாட்டேன் என சபதம் ஏடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 
 
திமுக ஆட்சியில் இல்லாதபோது, அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக அமைச்சர்கள் 8 பேர் மீது திமுகவினர் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். ஆளுநரை 2 முறை சந்தித்து ஆதாரங்களுடன் ஊழல் புகாரை அளித்தார் மு.க.ஸ்டாலின். ஆட்சியில் இல்லாத போதே அப்படி என்றால்? மிக நீண்ட பசியாற்றிக் கொண்டிருக்கும் தற்போதைய திமுகவிற்கு சொல்லவா வேண்டும்? முதலமைச்சரான பிறகு மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆதாரங்களுடன் ஆளுநரிடம் புகார் அளித்தார். 

புல்வாமா தாக்குதலின் போது பிரதமர் மோடி சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற பிளானை செயல்படுத்தியதாக புகார்கள் எழுந்தது. அதுபோன்று திமுகவினர் அதிமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டல் பெரும் ஆபத்து வருகிறது என்றே அர்த்தம். ஏனென்றால், 1996-ல் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, ஜெயலலிதா உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களையெல்லாம் விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத்துறையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதனை அமைத்தது அப்போதைய முதலமைச்சராக இருந்த மறைந்த கருணாநிதி. அந்தக் குழுவினர் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக ஆதாரத்துடன் ஜெயலலிதாவுக்கு எதிராக புகார் எழுப்பியதால் பின்னாளில் அவரது அரசியல் வாழ்வே புரட்டிப் போட்டது. தற்போதும் அதேபோன்ற பிளானையே திமுகவினர் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். 

தனது தந்தையைப் போலவே அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மு.க.ஸ்டாலின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் கந்தசாமியிடம் அசைண்ட்மெண்ட் கொடுத்துள்ளார். ஸ்டாலினின் முதல் டார்கெட் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி எனக் கூறப்படுகிறது. எல்.இ.டி. விளக்குகள் பதிப்பது தொடங்கி கிருமிநாசினி தெளிப்பது வரை அனைத்திலும் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் முதலமைச்சர் வசம் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றும் நந்தகுமார் மீது, கொரோனா களப்பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் பல்வேறு புகார்கள் எழுந்தன. இது குறித்து அவரது வீட்டிற்கே சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவருக்கும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும் இடையேயான தொடர்பு, வேலுமணிக்கு ஆல் இன் ஆலாக செயல்பட்ட வடவள்ளி சந்திரசேகரனின் நிறுவனம் மற்றும் வேலுமணியின் அண்ணன் அன்பரசன் மூலம் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த பிரதமரும் அமைதி காத்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து டெல்லி பாஜக மேலிடத் தலைவர்  ஒருவர் தெரிவிக்கையில், இப்படி அதிமுகவிற்கு நெருக்கடி இருந்தால் தான் தங்களிடம் தஞ்சம் புகுவார்கள் எனவும், அவ்வாறு அதிமுக எங்களோடு இணைந்தால் பாஜகவிற்கு பலம் அதிகரிக்கும் என உற்சாகமாக கூறியதாக தெரிகிறது. 

முன்னாள் அமைச்சர்களை ஊழல் வழக்கில் கைது செய்வதன் மூலம் தனது மார்க்கெட்டையும், இமேஜையும் உயர்த்திக் கொள்ள காத்திருக்கிறார் ஸ்டாலின். இதற்காக ஊழல் தடுப்பு சட்டம் 2018-ல் உள்ள சில குளறுபடிகளை நாங்கள் தூள் தூளாக்குவோம் என துரைமுருகன் கூறிப்பதன் அடிப்படையில் அதற்கான பணிகளும் வேகமெடுத்துள்ளன.
வேலுமணி, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், தங்கமணி, விஜயபாஸ்கர் என அடுத்தடுத்த விக்கெட்களை வீழ்த்த முதல்வருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க, சிறப்பு கமிட்டி ஒன்றை அமைக்கவும் ஏற்பாடாகி வருகிறது. மாநில மனித உரிமை கமிஷனில் டி.ஜி.பி-யாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சுனில்குமாரை இந்த கமிஷனில் முக்கியப் பொறுப்புக்குக் கொண்டுவர ஸ்டாலின் பரிசீலிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவின் அஸ்திவாரத்தை தாக்கும் வேலையில் இறங்கியுள்ளதால் அதிமுக அமைச்சர்கள் விழிபிதுங்கி உள்ளனர்.