பணமதிப்பிழப்பு நடவடிக்கை....ஐந்தில் தனி ஒருவராக மோடி அரசிற்கு எதிர்ப்பை தெரிவித்த நீதிபதி நாகரத்னா....

உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நீதிபதி நாகரத்னா, பணமதிப்பிழப்பு தீர்ப்பு சட்டவிரோதமானது எனவும் ரிசர்வ் வங்கியியின் வரம்பை மீறிய செயல் எனவும் கூறியுள்ளார்.
ஆதரவாக தீர்ப்பு:
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் 2016 முடிவை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உறுதி செய்துள்ளது. நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 4:1 என்ற பெரும்பான்மையுடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பிற்கான விளக்கம்:
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஆலோசனை நடத்தப்பட்டதாக உச்ச நீதிமன்றம் விளக்கல் அளித்துள்ளது. அத்தகைய நடவடிக்கையை கொண்டு வர இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது எனவும் அதனால் பணமதிப்பு நீக்க விகிதாச்சாரக் கொள்கையால் ரிசர்வ் வங்கி பாதிக்கப்படவில்லை என நம்புவதாகவும் கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.
இருப்பினும், ஐந்து நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி நாகரத்னா, பணமதிப்பிழப்பு முடிவு சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியும் வரம்பு மீறி செயல்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை நீதிபதி நாகரத்னா எப்படி கேள்வி எழுப்பினார் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்...
பணமதிப்பிழப்பு முடிவு குறித்து ரிசர்வ் வங்கி சட்டத்தின் 26 (2) பிரிவின் கீழ் ஒரு தனி கருத்தை தெரிவித்துள்ளார் நீதிபதி நாகரத்னா. மேலும், “சக நீதிபதிகளுடன் நான் உடன்படுகிறேன் என்றாலும் எனது வாதங்கள் வேறுபட்டவை. ஆறு கேள்விகளுக்கும் வெவ்வேறு பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழிவு மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அத்தகைய கருத்தை ஆர்பிஐ சட்டத்தின் 26(2) பிரிவின் கீழ் ’பரிந்துரையாக’ கருத முடியாது.” எனக் கூறியுள்ளார்
மேலும், “ரிசர்வ் வங்கிக்கு அத்தகைய அதிகாரம் உள்ளது என்று வைத்துக் கொண்டாலும், அத்தகைய பரிந்துரையை அவர்கள் செய்ய முடியாது. ஏனெனில் பிரிவு 26(2) இன் கீழ் அதிகாரமானது ஒரு குறிப்பிட்ட தொடர் நாணயத் தாள்களுக்கு மட்டுமே இருக்க முடியும். கொடுக்கப்பட்ட மதிப்பின் முழுத் தொடர் நாணயத் தாள்களுக்கும் அல்ல. ரிசர்வ் வங்கி சட்டத்தின் 26(2) பிரிவின் கீழ் "எந்தத் தொடர்களும்" என்ற சொல் "அனைத்து தொடர்களும்" என பொருள் கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிவாரணம் அளிக்க முடியுமா?:
நவம்பர் 8, 2016 தேதியிட்ட அறிவிப்பின்படி மத்திய அரசால் தொடங்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும் ஆனால் இப்போதைய நிலையை மீட்டெடுக்க முடியாது எனவும் கூறிய நீதிபதி நாகரத்னா அதற்கு இப்போது என்ன நிவாரணம் கொடுக்க முடியும்? என்ன மாதிரியான நிவாரணம் வழங்க முடியும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
பயனற்ற செயல்பாடு:
தொடர்ந்து பேசிய நீதிபதி நாகரத்னா “பணமதிப்பு நீக்கம் தொடர்பான பிரச்சனைகளை மத்திய வங்கி கற்பனை செய்திருக்குமா என்பது வியக்க வைக்கிறது. 98% ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது கூறியது அவர்கள் கூறியதை போல் பயனுள்ளதாக இல்லை என்பதாகவே இது தெரிகிறது. ஆனால் அத்தகைய கருத்தில் நீதிமன்றம் தனது முடிவை அடிப்படையாகக் கொள்ள முடியாது. ” எனப் பேசியுள்ளார்.
மேலும் "500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது சட்டவிரோதமானது மற்றும் தவறானது. எவ்வாறாயினும், அறிவிப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, இந்த சட்டப் பிரகடனம் வருங்கால நடைமுறையுடன் மட்டுமே செயல்படும் மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையை பாதிக்காது.” எனவும் அவரது தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார் நாகரத்னா.
-நப்பசலையார்
இதையும் படிக்க: இரு ஹெலிகாப்டர்கள் மோதல்....அதிகரித்த உயிரிழப்பு ....விசாரணை தீவிரம்!!!