முர்முவை சந்தித்த இபிஎஸ் - ஓபிஎஸ்; பலத்தை நிரூபித்தது யார்?

குடியரசு தலைவர் பதவிக்காக போட்டியிட இருக்கும் பாஜகவின் வேட்பாளர் திரௌபதி முர்முவை சந்திக்க, ஒரே நட்சத்திர ஹோட்டலில் தனித் தனி அறையில் காத்திருக்கும் இபிஎஸ்-ஓபிஎஸ்.

முர்முவை சந்தித்த இபிஎஸ் - ஓபிஎஸ்; பலத்தை நிரூபித்தது யார்?

குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நெருங்கும் இருக்கும் நிலையில், இந்தியாவின் ஆளுங்கட்சியான பாஜகவின் வேட்பாளராக, பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு போட்டியிட இருக்கிறார். 5 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்த மறைமுக தேர்தலுக்கு தன் பக்கம் ஆதரவு திரட்ட, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சென்று, அங்குள்ள பெரும்பான்மையினர் மற்றும் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது வழக்கம். அந்த வகையில், இந்தியா முழுவதும் பயணம் செய்யும் திரௌபதி முர்மு, இன்று, புதுச்சேரி சென்று ஆதரவு திரட்டிய பின், தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.

அதிமுகவின் இரட்டைத் தலைமை பிரச்சனை:

அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு, இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் தனித் தனியாக பயணிக்கின்றனர். பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அன்று இரவே டில்லி புறப்பட்டு சென்றார் ஓபிஎஸ்.

பாஜக சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் முர்முவிற்கு ஆதரவு தர வேண்டுமென தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் இபிஎஸ் ஓபிஎஸ் ஆகிய இருவரையும் தனித் தனியே சந்தித்து ஆதரவு கோரினர்.

இரட்டை இலையில் என்ன சர்ச்சை?

இருப்பினும் முர்முவின் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பு மனு தாக்கலில் இபிஎஸ் பங்கேற்கவில்லை. ஓபிஎஸ் மட்டுமே தனது ஆதரவாளர்களுடன் டில்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகளோடு வேட்புமனு தாக்கலில் போது உடனிருந்தார். பின்னர், பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் முர்முவை மத்திய இணை அமைச்சர் எல் முருகன், மற்றும் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் உள்ளிடோரோடு சந்தித்து உரையாடினார்.

இந்நிலையில் டில்லியில் நடந்த வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் இபிஎஸ் பங்கேற்காமல் ஓபிஎஸ் மற்றும் பங்கேற்றது அதிமுகவில் ஓபிஎஸ் -இன் கை ஓங்குகிறது என்றும், பாஜகவை ஓபிஎஸ் நெருங்குவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

எப்போது பிளவு வெளிப்படையாக தெரிந்தது?

இதனால், இன்று தமிழ்நாடு வரும் முர்மு அதிமுகவின் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரில் யாரை சந்தித்து ஆதரவு கோருவார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக மாறி இருந்தது. இந்த பின்னணியில் இபிஎஸ் ஓபிஎஸ் இருவருமே பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் முர்முவை சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்திப்பதற்காக தனித் தனி அறையில் உள்ளனர்.

இது இன்னுமும் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரின் மனங்களும் இணையவில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது. 

யாருக்கு பலம் அதிகம்?

தற்பொழுது தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 66 பேர் உள்ளனர். இவர்களோடு பாமகவினுடைய 5 சட்டமன்ற உறுப்பினர்களும் பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் எம் எல் ஏக்கள் பெரும்பாலும் மேற்கு தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களாக இருப்பதால், அவர்களின் முழு ஆதரவும் இபிஎஸ் வசம் இருக்கிறது. புதிதாக மாநிலங்களவைக்கு சென்றிருக்ககூடிய சிவி சண்முகம் உள்ளிட்டோர் இபிஎஸ் ஆதரவாளர்களாக் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தின் மக்களவையில் உள்ள ரவீந்திரநாத் மற்றும் மாநிலங்களவைக்கு புதிதாக சென்றிருக்கக் கூடிய ஓபிஎஸ் ஆதரவாளர் தர்மர் ஆகிய இருவர் மட்டுமே, ஓபிஎஸ்-இன் ஆதரவாளர்களாக தெரிகிறார்கள்.

இதனால் முர்முவுக்கான ஆதரவை முழுவதுமாக அளிப்பவர்களில் இபிஎஸ் - இன் கையே ஓங்கி இருக்கிறது. அதே சமயம், அதிமுக இன்னும் தனது ஒருங்கிணைப்பில் தான் உள்ளது என்பதை காட்ட வேண்டிய சூழலும் ஒபிஎஸ்-க்கு இருக்கிறது. இந்த பின்னணியில் தனித் தனி அறைகளில் தனி தனி மனங்களோடு காத்திருக்கிறார்கள் இபிஎஸ் - ஓபிஎஸ்.