அமளியில் ஈடுபட்ட ஈபிஎஸ் தரப்பினர்...அடுக்கடுக்காக குற்றம்சாட்டிய சபாநாயகர்...! 

அமளியில் ஈடுபட்ட ஈபிஎஸ் தரப்பினர்...அடுக்கடுக்காக குற்றம்சாட்டிய சபாநாயகர்...! 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட ஈபிஎஸ் தரப்பினரை சட்டப்பேரவையில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்:

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்தக் கூட்டத்தொடர் வருகிற 19ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்திருந்தார். 

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும்:

அதுமட்டுமின்றி இரண்டாம் நாள் கூட்டத்தொடரில், இந்தி திணிப்பு குறித்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கூடுதல் செலவினத்திற்கான வரவு செலவு திட்டத்தை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார் எனவும் தெரிவித்தார். அத்துடன் அதிமுக தரப்பில் ஈபிஎஸ் வழங்கிய 4 கடிதங்கள் குறித்தும், ஓபிஎஸ் வழங்கிய 2 கடிதங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டால்  சட்டமன்றத்தில் பதிலளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

புறக்கணிப்பு:

இதனிடையே எதிர்கட்சி தரப்பில்  ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டு, ஓ.பி.எஸ் தனக்கான எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் அமர்ந்தார். இதனால் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள், ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்கட்சி துணைத் தலைவர் அந்தஸ்தில் இருந்து நீக்காமலும்,  இருக்கைகளிலும் மாற்றம் செய்யாமலும் இருந்ததால்  முதல் நாள் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்தனர். 

இரண்டாம் நாள் கூட்டத்தொடர்:

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு இரண்டாம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடரில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு கடிதங்கள் குறித்து சபாநாயகர் விளக்கமளித்தார். அப்போது, விதி 6ன் படி எதிர்கட்சி தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி என்றும், பிற பதவிகள் எம்.எல்.ஏக்களை திருப்திப்படுத்த வழங்கப்பட்டவை எனவும் தெரிவித்தார். மேலும் அலுவல் குழுவில் யாரை சேர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்வதும், எதிர்க்கட்சி துணை தலைவரை அங்கீகரிப்பது கட்டாயமில்லை எனவும் தெளிவுப்படுத்திய அப்பாவு, ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பு கடிதங்கள் மீது முடிவு எடுப்பதும் சபாநாயகரின் உரிமை என விளக்கினார். எடுத்தேன் கவிழ்த்தேன் என கடந்த காலத்தை போல் தற்போது அவை நடைபெறாது எனவும் கூறினார்.

இதையும் படிக்க: நேற்று புறக்கணிப்பு...இன்று அமளி...சட்டப்பேரவையில் தொடர்ந்து பரபரப்பு காட்டும் ஈபிஎஸ்...! 

அமளியில் ஈடுபட்ட ஈபிஎஸ் தரப்பினர்:

இரண்டாம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியதும், கேள்வி நேரத்தை குறுக்கீடு செய்த எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள், இருக்கை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். மேலும், கேள்வி நேரம் முடிந்ததும் அதுபற்றி விவாதிக்கப்படும் என சபாநாயகர் கூறியும், அதனை ஏற்காத பழனிசாமி தரப்பினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது.

உடன்பாடு எட்டப்படவில்லை:

முன்னதாக அவை தொடங்குவதற்கு முன், தலைமை செயலகத்தில் உள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் அப்பாவு-ஐ சந்தித்த ஈ.பி.எஸ் தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை விவகாரம் குறித்து விவாதித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அவையில் ஈபிஎஸ் தரப்பினர் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

அவை காவலருக்கு உத்தரவிட்ட அப்பாவு:

ஈபிஎஸ் தரப்பினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அப்பாவு, அவையின் மாண்பை குலைக்க வேண்டாம் என எச்சரித்ததோடு, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை பேசவிடாமல் இடையூறு செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர். ஆனாலும், பழனிசாமி தரப்பினர் ஏற்காமல் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை குண்டு கட்டாக அகற்ற அவை காவலர்களுக்கு அப்பாவு உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டிய சபாநாயகர்:

தொடர்ந்து பேசிய அவர், ஈபிஎஸ் தரப்பினர் கலகம் செய்யும் நோக்கத்துடனே வந்துள்ளதாக சபாநாயகர் குற்றம் சாட்டினார். அதுமட்டுமின்றி, இன்றைய கூட்டத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் குறித்தும், அருணா ஜெகதீசன் அறிக்கை, ஆறுமுகசாமி ஆணைய தீர்மானத்தும் விவாதிக்கப்பட உள்ளதால், அதனை தவிர்க்கவே ஈபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டு கலகம் செய்கிறீர்கள் என்றும், ஜானகி பதவி பிரமானம் எடுத்த போது அமளியில் ஈடுபட்டதைப் போல தற்போதும் இபிஎஸ் ஆதரவாளர்கள்அமளியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டினார். தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமைச் செயலக வளாகத்தில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும் என  சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். 

துரைமுருகன் குற்றச்சாட்டு:

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகம் வெளிவந்துவிடும் என்ற அச்சத்தால் தான் இபிஎஸ் ஆதரவாளர்கள் அமளியில் ஈடுட்டதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.

வெளிநடப்பு செய்த ஈபிஎஸ் தரப்பினர்:

சபாநாயகரின் உத்தரவையடுத்து,  தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.