ஒப்புதல் பெறப்பட்டு தொடங்கப்படாத இ.எஸ்.ஐ. மருத்துவனைகள் எவ்வளவு தெரியுமா..? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல்...

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஒப்புதல் பெறப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படாத 6 இஎஸ்ஐ மருத்துவமனைகள் 16 ஆண்டுகள் ஆகியும் திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படாத அவலம்.

ஒப்புதல் பெறப்பட்டு தொடங்கப்படாத இ.எஸ்.ஐ. மருத்துவனைகள் எவ்வளவு தெரியுமா..? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல்...

மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.,). மாதம் ரூ.21 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவாக சம்பளம் பெறும் தொழிலாளர்கள் இதில் சந்தா செலுத்தி உறுப்பினராகும் பட்சத்தில் அவசர காலங்களில் அவரோ, அவரது குடும்பத்தினரோ இ.எஸ்.ஐ., மருத்துவ மனை அல்லது அதனுடன் ஒப்பந்தம் செய்துள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.

தமிழகத்தில் சென்னையில் இஎஸ்ஐ-ன் மண்டல அலுவலகம் செயல்படுகிறது. கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு நான்கு துணை மண்டலங்கள் செயல்படுகின்றன.

இ.எஸ்.ஐ.ல் இணைவது எப்படி:

பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் கட்டாயம் இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைய வேண்டும்.தொழிலாளர்கள் தொழில்நிறுவனங்கள் மூலம்இத்திட்டத்தில் இணைந்து சந்தா செலுத்த வேண்டும். 0.75 தொழிலாளர்கள்,3.25 தொழில் நிறுவனத்தினர் என 4 சதவீதம் சந்தா செலுத்த வேண்டும். திட்டத்தில் நுழைந்த நாள் முதல் மருத்துவ உதவி பெறலாம். சிறப்பு மருத்துவ சிகிச்சை உதவி பெற குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் காப்பீடு திட்டத்தின் கீழ் இருக்க வேண்டும்.

இ எஸ் ஐ ன் பலன்கள் :

மகப்பேறு செலவினங்களாக மகப்பேறு மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களில் காப்பீடு பெற்ற பெண்ணுக்கோ அல்லது காப்பீடு பெற்றவரின் மனைவிக்கோ பிரசவம் நிகழுமாயின் இந்த உதவி வழங்கப்படும். இரு பிரசவத்திற்கு மட்டும் வழங்கப்படும். ஒரு பிரசவத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். ஈமச்சடங்கு செலவினமாக சந்தா செலுத்தி வரும் நிலையில் இறந்தால் இறுதி சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது.

வேலையிழந்தோருக்கான உதவி தொகையாக தொழிற்சாலைகள் நிரந்தரமாகமூடல் அல்லது ஆட்குறைப்பு அல்லது பணி சாராவிபத்துக்களால் ஏற்படும் ஊனம் காரணமாக ஏற்படும் வேலையிழப்பிற்கு 24 மாதம் வரை வழங்கப்படும்.

3 முதல் 5 ஆண்டுகள் சந்தா செலுத்தும்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவையில் இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லுாரிகள் செயல்படுகின்றன.

இ எஸ் ஐ அமைக்க நிபந்தனை:

ஒரு நகரத்தில் 100 படுக்கைகளுடன் கூடிய இ எஸ் ஐ மருத்துவமனை அமைக்க வேண்டுமானால் அந்த நகரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குறைந்தபட்சம் 50,000 பேர் இ எஸ் ஐ யில் பதிவு செய்திருக்க வேண்டும். அதைப்போல அந்த நகரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திற்குள் மற்றொரு இஎஸ்ஐ மருத்துவமனை இருக்க கூடாது என்பது விதி.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் இஎஸ்ஐ  மருத்துமனைகள் தென் மாவட்டங்களில் மதுரை சிவகாசி திருநெல்வேலி ஆகிய மூன்று இடங்களில் உள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவ மனைகள் குறித்து சென்னை மண்டல அலுவலகத்திடம் தகவல் கோரியிருந்தார். அதற்கு மத்திய பொது தகவல் அலுவலர் அருள்ராஜ் அளித்த பதிலில், 

ஸ்ரீபெரும்புதூர் நாகர்கோவில் தூத்துக்குடி திண்டுக்கல் வாணியம்பாடி திருப்பூர் ஆகிய 6 இடங்களில்  இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்க முன்மொழிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் 14.09.2005, ஸ்ரீபெரும்புதூர்22.07.2010, நாகர்கோவில் 21.12.2012 தூத்துக்குடி 02.02.2012, திண்டுக்கல், வாணியம்பாடி 09.07.2019 ஆகிய தேதிகளில் முன்மொழியப்பட்டுள்ளன.

நிலம் ஒதுக்கீடு :

ஸ்ரீபெரும்புதூர் 5.12 ஏக்கர்,  தூத்துக்குடி 5 ஏக்கர்,  திருப்பூர் 7.46 ஏக்கர்  நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் திண்டுக்கல் வாணியம்பாடி ஆகிய இடங்களுக்கு நிலம் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கட்டுமான பணி :

தூத்துக்குடி மற்றும் திருப்பூருக்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ள மத்திய பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்குரிய  கட்டுமான நிறுவனத்தை தலைமை அலுவலகம் தான் முடிவு செய்ய வேண்டும்.

டெண்டர் :

திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கான ஒப்பந்தப்புள்ளி 01.10.21 அன்று திறக்கப்படுகிறது. மற்ற 5 இஎஸ்ஐ மருத்துவ மனைகளுக்கான டெண்டர் இன்னும் விடப்படவில்லை.

திட்ட மதிப்பீடு :

திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு 81.34 கோடிகள் ஆகும். மற்றும் 540 நாட்கள் இந்த திருப்பூர்  மருத்துவமனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது  மற்ற 5 மருத்துவ மனைகளுக்கான  தகவல் இல்லை.

படுக்கைகள் எண்ணிக்கை :

முன்மொழியப்பட்ட 6 இஎஸ்ஐ மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  2019, பிப்ரவரி 10 அன்று திருப்பூருக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த பிரதமர் மோடி, திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டி இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் பணிகள் தொடங்கப்படாதது திருப்பூர் மக்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது!

சென்னைக்கு அடுத்து இ.எஸ்.ஐ-க்கு அதிக பங்களிப்பு செய்யும் மாவட்டம் திருப்பூர்தான். சுமார் நான்கரை லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ-க்குப் பணம் கட்டுவதன் மூலம், ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகிறது. இதனால், திருப்பூரில் தொழிலாளர்களின் நலனுக்கென இ.எஸ்.ஐ மருத்துவமனை கொண்டுவர வேண்டும் என்பதுதொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக்கூட ஜப்பானின் ஜெயிகா நிறுவனத்திடம் நிதிக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இந்த மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி தேவையில்லை. தொழிலாளர்களின் பணமே பல நூறு கோடி ரூபாய் இருக்கிறது.

திருப்பூருக்கு 16 வருடமும், ஸ்ரீபெரும்புதூருக்கு 11 வருடமும், நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடிக்கு தலா 9 வருடங்களும், திண்டுக்கல் மற்றும் வாணியம்பாடி க்கு தலா 2 வருடங்களும் ஆகிறது.