என்கவுண்டர் பயத்தால் திருந்தி வாழ விரும்புவதாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்த பிரபல ரவுடி கல்வெட்டு ரவி...

பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கல்வெட்டு ரவி தான் திருந்தி வாழ விரும்புவதாகக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளான்.

என்கவுண்டர் பயத்தால் திருந்தி வாழ விரும்புவதாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்த பிரபல ரவுடி கல்வெட்டு ரவி...

ரவிசங்கர் (எ) கல்வெட்டு ரவி வட சென்னையின் பெயர் சொல்லும் ரவுடிகளுல் ஒருவனாவான். வட சென்னையைக் கலக்கிய மாலைக்கண் செல்வம் என்ற பிரபல ரவுடியின் வலது கையாக செயல்பட்டு படிப்படியாக வளர்ந்து தனது ரவுடி சாம்ராஜ்ஜியத்தை வளர்த்தான் கல்வெட்டு ரவி. தனது எதிர் கோஷ்டியான ரவுடி எஸ்பிளனேடு நித்தியாநந்தத்தை பாரி முனையில் வைத்து தீர்த்துக்கட்டியதை அடுத்து கல்வெட்டு ரவியின் பெயர் சென்னை முழுவதும் பரவியது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கேளம்பாக்கம் கன்னியப்பன், தண்டையார்பேட்டை வீனஸ், ராயபுரம் பிரான்சிஸ், பொக்கை ரவி, வண்ணாரப்பேட்டையில் சண்முகம் என ரவி செய்த கொலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போனதாக கூறப்படுகிறது.இவன் மீது சென்னை காவல் துறையில் மட்டும் 6 கொலை வழக்குகள் உட்பட சுமார் 35 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 6 முறை இவன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

கொலை மட்டுமல்லாமல் ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து என தனது ரவுடி சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டி பறந்த கல்வெட்டு ரவி, தான் மிரட்ட வேண்டியவர்களை நடுக்கடலுக்குத் தூக்கிச் சென்று மிரட்டுவதுதான் வாடிக்கை எனவும், அங்கு வைத்து அவர்களைச் சித்திரவதை செய்தே தனது காரியத்தை கல்வெட்டு ரவி சாதித்துக் கொள்வான் எனவும் பலவாறாக சொல்லப்படுகிறது. கைது செய்து சிறையில் அடைத்தாலும் சிறைதிலிதுந்தே தனது காரியங்களை ஸ்கெட்ச் போட்டு செய்பவன் கல்வெட்டு ரவி என காவல்துறை வட்டாரங்ஜளிலும் பரவலாக பேசப்படுகிறது.

ரவுடிகள் பட்டியலில் A+ கேட்டகரியில் இருந்து வரும் ரவிசங்கர் (எ) கல்வெட்டு ரவி சென்னையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடிகள் பங்கு குமார், ஆசைத்தம்பி, அயோத்திகுப்பம் வீரமணி, மணல்மேடு சங்கர், வெங்கடேச பண்ணையார், மிலிட்டரி குமார், குரங்கு செந்தில், வெள்ளை ரவி உள்ளிட்டோர் வரிசையில் தனது பெயரும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் சமீப காலமாக தனது ஆட்டத்தை அடக்கி சமூகத் தொண்டாற்றப் போவதாகவும், வேலையின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு வேலையளித்து உதவப் போவதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்து கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி தன்னை பா.ஜ.க விலும் இணைத்துக் கொண்டார்.

அதன் பின்பும் இரு கொலை முயற்சி வழக்குகளில் தொடர்பிருப்பதாகக் கூறி தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் வைத்து கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் கைது செய்யப்பட்ட கல்வெட்டு ரவி பின் மீண்டும் பிணையில் வெளிவந்துள்ளான்.

 இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட சங்கர் ஜிவால் 'DARE' எனப்படும் 'Direct Action against Rowdy Elements' என்ற ஆப்பரேஷன் மூலம் சென்னையின் முக்கிய ரவுடிகள் பட்டியலை வகைப்படுத்தி பிரபல ரவுடிகளான சி.டி மணி, காக்கா தோப்பு பாலாஜி உள்ளிட்டோரை பொறிவைத்து பிடித்து ரவுடிகளின் சாம்ராஜ்ஜியத்தை களையெடுத்து வருகிறார்.

நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் 21 முக்கிய குற்றவாளிகளின் பெயர் பட்டியல் தயார் நிலையில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், அதில் ரவுடியான கல்வெட்டு ரவியின் பெயரும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் ரவுடியான கல்வெட்டு ரவி தனது மனைவி மற்றும் வழக்கறிஞருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து தான் திருந்தி வாழ விரும்புவதாகவும், சமூகத் தொண்டாற்ற முயன்று வருவதாகவும், தன் மீது போடப்படும் பொய் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் கோரி மனு ஒன்றை அளித்துள்ளான்.

 மேலும், தன் மீது உள்ள வழக்குகளுக்கு முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகி விடுதலைப் பெற்றுக் கொள்வதாகவும், இனி எந்த ஒரு குற்றச் செயல்களிலும் ஈடுபடமாட்டேன் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டு இனி தன் குடும்பத்திற்காக வாழவிருப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார். காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த கல்வெட்டு ரவியை காவல் ஆணையர் பல்வேறு அலுவல் காரணங்களால் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. எனினும் தனத் மனுவை ஆணையர் அலுவலகத்தில் ரவி சமர்பித்துள்ளான். கல்வெட்டு ரவியின் இந்தச் மனநிலை என்கவுண்டர் பயத்தால் வந்ததா? அல்லது உண்மையிலேயே செய்த தவறை உணர்ந்து வந்த ஞானோதயமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.