சூடுப் பிடிக்கும் திமுக மாவட்டப் நிர்வாகிகளுக்கான இறுதிக்கட்ட வேட்புமனுத் தாக்கல்

சூடுப் பிடிக்கும் திமுக மாவட்டப் நிர்வாகிகளுக்கான இறுதிக்கட்ட வேட்புமனுத்  தாக்கல்

சூடுப் பிடிக்கும் திமுக மாவட்டப் நிர்வாகிகளுக்கான இறுதிக்கட்ட வேட்புமனுத்  தாக்கல்

திமுக உட்கட்சி தேர்தல் 

திமுக நிர்வாகிகளுக்கானத் தேர்தல் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் வட்டப்  பொறுப்புகள் மற்றும் பகுதிப் பொறுப்புகளுக்கானத் தேர்தல் முடிவுகள் வந்த நிலையில், மாவட்ட நிர்வாகிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. முதல் நாள் மனுத்தாக்கலின் போது 19 மாவட்டங்களும், இரண்டாவது நாளில் 21 மாவட்டங்களும், மூன்றாவது நாளான நேற்று 16 மாவட்டங்களுக்கான மனுக்களும் பெறப்பட்டது. இந்நிலையில் இறுதி நாளான இன்று சென்னை மாவட்டம் உள்பட 16 மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது.

மாவட்ட நிர்வாகம்

மாவட்ட செயலாளர் மட்டுமல்லாது மாவட்ட துணை செயலாளர், மாவட்ட பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்டப் பதவிகளுக்கும் தேர்தல் நடைப்பெற இருக்கிறது. இப்பதவிகள் அனைத்திற்கும் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த செயலாளர்களேப் போட்டியின்றி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் சிலப் பொறுப்புகளுக்குத் தலைமையில் இருந்து சிலப் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதால் தனது ஆதரவாளர்களுக்குப் பொறுப்பைத் தர முடியவில்லை. இதனால் அம்மாவட்டத்தை சேர்ந்த மூத்த உடன்பிறப்புகள் மன வேதனைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

மேலும் படிக்க: திமுக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல்.. 26,27-ம் தேதிகளில் வேட்பு மனு பரிசீலனை..!

அதிகார செயலாளர்கள்  

தமிழக அரசியலைப் பொருத்தவரையில் எந்த கட்சியாகயிருந்தாலும்  கழகத் தலைவருக்கு அடுத்தப்படியாக அதிகாரமானப் பொறுப்பென்று பார்த்தால் அது மாவட்ட செயலாளர்கள் தான். ஒரு அமைச்சரைப் போன்ற அதிகாரமிக்கவர்கள் மாவட்ட செயலாளர்கள் என்பதாலும், பெரும்பாலும் சட்டமன்ற உறுப்பினருக்கான  வாய்ப்புகள் மாவட்ட செயலார்களுக்கே எளிதில் கிடைப்பதாலும் அப்பதவியை அடையக் திமுகவின் மூத்த உடன்பிறப்புகள் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.

பட்டியலிட்ட சின்னவர் 

மாவட்ட செயலாளர்களுக்கானத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் 15 பேர் கொண்டப் பட்டியலைத் தயார் செய்துள்ளார் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். ஏற்கனவே மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு கடும் போட்டி நடந்துவரும் நிலையில் சின்னவர் கொடுத்தப் பட்டியல் அறிவாலயத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பட்டியலில் இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் கழகத்தின் மூத்த உடன்பிறப்புகள் மத்தியில் சற்று பதற்றம் நிலவி வருகிறது.

ஸ்டாலினின் முதல் தேர்தல்

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் தானே முழு கவனம் செலுத்தி வருகிறார். இதற்கெனக் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் உளவுத்துறைக் கொடுத்துள்ள அறிக்கையைக் கொண்டும் மற்றும் இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த தனிப் பட்டியலைக் கொண்டும் புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலைக் கழக தலைவர் ஸ்டாலின் இறுதி செய்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தேர்தல் முடிவுகள் 

இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடையவுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 26 மற்றும் செப்டம்பர் 27-ஆம் தேதிகளில் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகிகளுக்கானத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படும் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

-------- அறிவுமதி அன்பரசன்